தினமும் உழைப்பு… விவசாயம்… அவ்வப்போது ஒரு லாட்டரி சீட்டு என வாழ்க்கையை நகர்த்திவந்த விவசாயிக்கு, ஒரே நாளில் ரூ.12 கோடி பரிசு கிடைத்திருக்கிறது. 15 ஆண்டுகளாக லாட்டரி வாங்கிவந்த அவரது காத்திருப்புக்கு, இந்தத் தீபாவளியில் அதிர்ஷ்டம் கதவைத் திறந்திருக்கிறது!
பஞ்சாப் மாநிலம், தேராபஸ்ஸி அருகே உள்ள ஹுமாயுன்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 45 வயதான பல்ஜிந்தர் சிங். விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்ட இவர், கடந்த 2010-ம் ஆண்டு முதல் தொடர்ந்து லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்திருக்கிறார். இத்தனை ஆண்டுகளாக லாட்டரி வாங்கியும் பெரிய பரிசு எதுவும் கிடைக்கவில்லை. ஆனாலும், லாட்டரி வாங்குவதை அவர் நிறுத்தவில்லை.
இந்த ஆண்டு தீபாவளிக்கு முன்பு, ஹண்டேஸ்ரா பகுதியில் உள்ள லாட்டரி விற்பனையாளரிடம் ரூ.500 கொடுத்து ஒரு லாட்டரி சீட்டை வாங்கியிருக்கிறார். அந்தச் சீட்டு அவரது வாழ்க்கையையே மாற்றும் என்று அப்போது அவர் நினைத்திருக்க மாட்டார்.
செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 11 மணியளவில், தான் ரூ.12 கோடி முதல் பரிசை வென்றிருப்பதை அறிந்திருக்கிறார். செய்தி கேட்டதும் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிய பல்ஜிந்தர் சிங், “இறுதியாக, கடவுள் என் வேண்டுதலுக்குப் பதிலளித்திருக்கிறார்’ என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையான இவர், பரிசுத் தொகையை எப்படிப் பயன்படுத்துவது என்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. பரிசுத் தொகையைப் பெறுவதற்கான நடைமுறைகளை மேற்கொள்ள நண்பர்களுடன் ஜிராக்பூருக்குச் சென்றிருக்கிறார்.
பஞ்சாப் மாநிலத்தின் ‘Dear Diwali Bumper Lottery 2026’ குலுக்கலுக்காக 36 லட்சம் சீட்டுகள் அச்சிடப்பட்டிருந்தன. 12 ராசிகளின் பெயர்களில் 12 தொடர்களாக வெளியிடப்பட்ட லாட்டரியில், ரூ.500-க்கு வாங்கிய ஒரு சீட்டு பல்ஜிந்தர் சிங்குக்கு ரூ.12 கோடியைத் தேடித் தந்திருக்கிறது. 15 ஆண்டுகளாகத் தொடர்ந்த அவரது முயற்சிக்கு, இந்தத் தீபாவளி மறக்க முடியாத பரிசை வழங்கியிருக்கிறது!