“16 ஆயிரம் பேர் டெங்கு பாதிப்பு; நிர்வாக சீர்கேட்டின் உச்சம் இது.!”- சீமான் கண்டனம் | 16,000 people affected by dengue; this is the height of administrative failure- Seeman criticises

Spread the love

“16 ஆயிரம் பேர் பாதிக்கப்படும் அளவிற்கு தமிழ்நாட்டில் வேகமாகப் பரவிவரும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்காத தவெக அரசின் அலட்சியப்போக்கு நிர்வாக சீர்கேட்டின் உச்சம்” என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ” தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் வேகமாகப் பரவிவரும் டெங்கு காய்ச்சலால் பல நூற்றுக்கணக்கான மக்கள் நாள்தோறும் பாதிக்கப்பட்டு வருவது மிகுந்த கவலையும், வேதனையும் அளிக்கிறது. தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் மட்டும் 244 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் சென்னையில் மட்டும் 87 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வேகமாக அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சலால் தற்போதுவரை, தமிழ்நாட்டில் 16,577 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதனைத் தடுக்க எவ்வித ஆக்கப்பூர்வமான நோய்த்தடுப்பு நடவடிக்கையையும் எடுக்காத தவெக அரசின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.

சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு வேகமாக அதிகரித்து வரும் நிலையில், டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 9 பேர் உயிரிழந்த துயரச்செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன்.

மழைக்காலம் தொடங்கவுள்ள நிலையில், பருவநிலை மாறுதல் காரணமாக சளி, காய்ச்சல் உள்ளிட்ட தொற்றுநோய்கள் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரிடமும் வேகமாகப் பரவுகிறது. குறிப்பாக கொசுக்களின் மூலம் பரவக்கூடிய டெங்கு காய்ச்சல், தலைநகர் சென்னை மற்றும் தமிழ்நாடு முழுவதும் வேகமாக பரவி வருவதால் மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் 300 பேர் வரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவதால், டெங்கு காய்ச்சல் குறித்த பயமும், பீதியும் மக்களிடத்தில் ஏற்பட்டுள்ள நிலையில், நிகழும் உயிரிழப்புகள் அச்சத்தை இன்னும் அதிகமாக்குகின்றது. டெங்கு காய்ச்சலிலிருந்து தங்களை தற்காக்க முடியாமல் தமிழ்நாட்டு மக்கள் தத்தளித்து வருகிறார்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *