India
oi-Halley Karthik
டெல்லி: இந்தியன் ரயில்வே தனது முதல் இரட்டை அடுக்கு நீண்ட தூர கன்டய்னர் ரயிலை வெற்றிகரமாக இயக்கி புதிய சாதனை படைத்திருக்கிறது. இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகி வருகிறது.
இந்த ரயில் ஆக.21 அன்று இரவு 7 மணிக்கு மும்பையில் உள்ள ஜவஹர்லால் நேரு துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு, குஜராத்தின் வதோதரா பிரிவில் உள்ள வர்ணாமவில் உள்ள கான்கார் சரக்கு முனையத்தை அடைந்தது.

இந்த ரயிலின் நீளம் 1.3 கி.மீ. மொத்தம் 422 கி.மீ தூரம் பயணித்த இந்த ரயில்.. 360 கன்டெய்னர்களை எடுத்து சென்றிருக்கிறது. இந்த நீண்ட தூர ரயில் இரண்டு இரட்டை ரேக்குகளை இணைத்து உருவாக்கப்பட்டது. முதல் பகுதியை 60311 எண் கொண்ட என்ஜினும், இரண்டாவது பகுதியை 24690 எண் கொண்ட என்ஜினும் இழுத்துச் சென்றன. இந்த ரயிலில் கொண்டு செல்லப்பட்ட சரக்குகளை சாலை வழியாக கொண்டு செல்ல வேண்டும் எனில்.. சுமார் 180 லாரிகள் தேவைப்படும்.
அந்த வகையில் ஒரே பயணத்தில் அதிக அளவிலான சரக்குகளை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மாற்றி.. இந்தியன் ரயில்வே சாதனை செய்திருக்கிறது. இதன் மூலம் இந்தியன் ரயில்வேக்கு அதிக வருவாய் கிடைக்கும். இதுபோன்ற ரயில்களை அதிகரிப்பதன் மூலம் சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க முடியும். மேலும் சாலைகளில் போவதை விட.. ரயிலில் பொருட்களை மிக வேகமாக இடமாற்ற முடியும். மேற்கு பிரத்யேக சரக்கு வழிதடத்தை சிறப்பாக பயன்படுத்துவதன் மூலம் இந்தியாவின் தளவாட திறன் அதிகரிக்கும்.
மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்த சாதனையை இந்தியாவின் சரக்கு மற்றும் தளவாடத் திறன்களில் மற்றொரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் என்று பாராட்டியிருக்கிறார். இந்த சாதனை நாட்டின் பொருளாதார நிலப்பரப்பை வேகம் மற்றும் லட்சியத்துடன் மறுவரையறை செய்வதாக பலரும் பாராட்டியிருக்கின்றனர்.
கடந்த காலங்களில் இந்தியன் ரயில்வே பல விபத்துகளை எதிர்கொண்டிருந்தது. குறிப்பாக பயணிகள் ரயில்கள் தடம் புரண்டிருந்தன. ரயில்வே தண்டவாளங்களை சரி செய்ய போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை, ரயில்வே பணியாளர்களை போதுமான அளவுக்கு நியமிக்கவில்லை.. இதனால்தான் விபத்துக்கள் அதிகரித்தன என்று விமர்சனங்கள் எழுந்திருந்தன. இந்நிலையில் தற்போது சரக்கு ரயில் சேவையில் புதிய சாதனையை இந்தியன் ரயில்வே செய்திருக்கிறது.