இந்திய கால்பந்து வரலாறு, தவறவிடப்பட்ட வாய்ப்புகளாலும், நிறைவேறாத கனவுகளாலும் நிரம்பியது. அதில், 1950-ல் நடந்த ஒரு சம்பவம், இன்றுவரை ஒரு தீராத வலியாக, “என்ன நடந்திருக்கும்?’ என்ற கேள்வியாக நிலைத்து நிற்கிறது. பிரேசிலில் நடந்த FIFA உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றும், இந்தியா அந்தப் போட்டியில் பங்கேற்காமல் பின்வாங்கியது. ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அறிமுகமாக இருந்திருக்க வேண்டியது, இந்திய கால்பந்தின் மிகப்பெரிய மர்மக் கதையாக மாறியது.
ஒருவேளை, 1950-ல் பிரேசிலில் இந்தியா பங்கேற்று, ஒரு நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தால், 1983-ல் கபில் தேவின் கிரிக்கெட் அணி ஏற்படுத்திய தாக்கத்தை கால்பந்திலும் ஏற்படுத்தியிருக்கலாம். ஒரு விளையாட்டாக இருந்த கால்பந்து, ஒரு தேசிய உணர்வாக மாறியிருக்கலாம். ஆனால், அது நடக்கவில்லை. 1950-ன் அந்த கோடைக்காலத்தில் நடந்த நம்பமுடியாத நிகழ்வுகளின் தொகுப்பு இதோ.

இந்தியா ஏன் 1950 உலகக் கோப்பையில் பங்கேற்கவில்லை என்பதற்கு பல கட்டுக்கதைகள் காலப்போக்கில் உருவாகியது. அவற்றில் மிகவும் பிரபலமானது, ‘இந்திய வீரர்கள் காலில் ஷூ அணியாமல் விளையாட FIFA அனுமதிக்காததால் இந்தியா போட்டியிலிருந்து விலகியது’ என்பதுதான்.
இந்தக் கதைக்கு ஒரு வலுவான பின்னணியும் இருந்தது. 1948 லண்டன் ஒலிம்பிக் போட்டியில், இந்திய அணி தனது முதல் சர்வதேசப் போட்டியில், ஐரோப்பிய ஜாம்பவானான பிரான்ஸை எதிர்கொண்டது.
அந்த அணியில் பல வீரர்கள் காலில் ஷூ அணியாமல், வெறும் கால்களை டேப் சுற்றிக்கொண்டு விளையாடினர். கடைசி நேரத்தில் ஒரு கோல் வாங்கி 2-1 என்ற கணக்கில் தோற்றாலும், அவர்களின் ஆட்டம் உலகை திரும்பிப் பார்க்க வைத்தது. ஷூ இல்லாத இந்தியர்கள், ஐரோப்பியர்களை மிரட்டிய அந்த காட்சி ஒரு பிம்பமாகவே மாறிப்போனது. இதனால், FIFA-வின் விதிமுறைகளுக்கு அடிபணிய மறுத்து, இந்தியா தன்மானத்துடன் வெளியேறியதாகக் கூறப்பட்ட கதைக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
ஆனால், இது உண்மையல்ல. 1953 வரை, வீரர்கள் ஷூ அணிய வேண்டும் என்ற கட்டாய விதியை FIFA கொண்டிருக்கவில்லை. சொல்லப்போனால், 1952 ஹெல்சின்கி ஒலிம்பிக்கில்கூட இந்திய வீரர்கள் ஷூ அணியாமல் விளையாடினார்கள். அதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கப்படவில்லை.