கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்ததற்கு அரசின் தவறு காரணமல்ல. ஆனாலும் அவர்களுக்கு அரசு வேலை உள்ளிட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அதை விமர்சிக்க பாட்டாளி மக்கள் கட்சி விரும்பவில்லை. அதே நேரத்தில் இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தின் போது சுட்டுக்கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு அரசு வேலையும், பிற உதவிகளும் பெறுவதற்கான அனைத்து உரிமைகளும் உள்ளன; அவற்றை வழங்க வேண்டியக் கடமையும், பொறுப்பும் அரசுக்கு உள்ளது. அவற்றை அரசு தட்டிக் கழிக்க முடியாது.
1987-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி துப்பாக்கியால் சுட்டும், பிற தாக்குதல்களிலும் கொல்லப்பட்ட 25 பேரும் சமூகநீதிக்காக போராடியவர்கள்; தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சமூகங்களுக்கும் உரிய இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற உன்னத கோரிக்கையை வலியுறுத்தி போராடியவர்கள். அரசையோ, காவல்துறையையோ சீண்டும் வகையிலான எந்த செயல்களிலும் அவர்கள் ஈடுபடவில்லை.

ஆனாலும், அறவழியில் போராடிய அப்பாவிகளை காவல்துறையினர் காக்கை, குருவிகளை சுடுவது போல சுட்டு வீழ்த்தினார்கள். இந்த பாவத்தை பல தருணங்களில் தமிழக அரசு அங்கீகரித்திருந்தாலும் அதற்கான பரிகாரத்தை இன்று வரை செய்யவில்லை. வன்னியர் இடஒதுக்கீட்டு போராட்டத்தில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்கள் இன்றளவும் வாழ்வாதாரமின்றி வாடும் நிலையில் தான் உள்ளன.
பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கப்பட்டால், அதை பயன்படுத்திக் கொண்டு அந்த குடும்பங்கள் முன்னேறி விடும். அவர்கள் செய்த தியாகத்தால் 115 சமூகங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான குடும்பங்கள் பயனடைந்துள்ள நிலையில், அவர்களின் குடும்பங்கள் இன்னும் அடிமட்டத்தில் தான் உள்ளன. பிறரை வாழ வைத்த அவர்களை தமிழக அரசு வாழ வைக்க வேண்டும்.
எனவே, கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கப்பட்டதைப் போல, இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தின் போது காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கும் உடனடியாக அரசு வேலை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.