Cricket
oi-Yogeshwaran Moorthi
ஹராரே: ஜிம்பாவே அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் மரண மாஸ் கம்பேக்கை கொடுத்துள்ளார். 2 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணிக்கு திரும்பிய மயங்க் யாதவ், 149 கிமீ வேகத்தில் முதல் பந்தை வீசி ஜிம்பாப்வே வீரர் பென்னட் விக்கெட்டை கைப்பற்றியுள்ளார்.
இந்தியா – ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ஹராரே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பவுலிங்கை தேர்வு செய்தார். இந்திய அணிக்காக ராஜஸ்தானைச் சேர்ந்த அசோக் சர்மா அறிமுகம் செய்யப்பட்டார். அதேபோல் வேகப்பந்துவீச்சாளர் மயங்க் யாதவும் இந்திய அணிக்கு கம்பேக் கொடுத்துள்ளார்.

கடைசியாக 2024ஆம் ஆண்டு நடந்த டி20 தொடர் ஒன்றில் மயங்க் யாதவ் இந்திய அணிக்காக ஆடி இருந்தார். இதன்பின் மயங்க் யாதவ் காயம் காரணமாக ஓய்விலேயே இருந்தார். ஐபிஎல் தொடரிலும் கூட மயங்க் யாதவால் பெரியளவில் செயல்படவில்லை. அதுமட்டுமல்லாமல் காயத்திற்கு பயந்து மயங்க் யாதவ் தன்னுடைய வேகத்தையும் குறைத்து கொண்டார்.
எளிதாக 150 கிமீ வேகத்தில் ஸ்விங் செய்வதே மயங்க் யாதவின் சிறப்பாக இருந்து வந்தது. ஆனால் இந்திய அணிக்கு திரும்பிய பின் மயங்க் யாதவ் தனது வேகத்தை 140 கிமீ அருகிலேயே வைத்து கொண்டார். இதுவும் அவரின் மோசமான செயல்பாடுகளுக்கு காரணமாக அமைந்தது. இந்த நிலையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் மயங்க் யாதவின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
அதற்கேற்ப முதல் பந்தையே மயங்க் யாதவ் 149 கிமீ வேகத்தில் வீசினார். இவ்வளவு வேகத்தை எதிர்பார்க்காத பென்னட், தனது ஷாட்டை முழுமையாக விளையாடி முடிப்பதற்கும் பேட் எட்ஜாகி இஷான் கிஷன் கைகளில் சென்று விழுந்தது. முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தி மயங்க் யாதவ் மரண மாஸ் கம்பேக்கை கொடுத்துள்ளார்.
இதனால் பிரின்ஸ் யாதவ், குர்னூர் சிங் ஆகியோருக்கு பதிலாக மயங்க் யாதவிற்கு இந்திய அணியில் தொடர்ச்சியாக வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன. இருப்பினும் மயங்க் யாதவ் அடுத்தடுத்து காயம் இல்லாமல் தொடர்ச்சியாக விளையாடுவதற்காக முயற்சிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தல்கள் அளிக்கப்பட்டு வருகின்றன.