பேராவூணி அருகே சரபேந்திரராஜன் பட்டினம் பஞ்சாயத்தில் மனோரா சுற்றுலாதளம் அமைந்துள்ளது. இங்கு சின்னமனை, மனோரா மீனவர் காலனிகள் உள்ளன. இங்கு 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். மீன்பிடி முக்கிய வாழ்வாதாரம். மனோராவில் கடல்பசு பாதுகாப்பு மையம் அமைக்கும் பணிகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. மனோரா மீனவ காலனி மக்கள் இரண்டு ஊற்று கிணறுகளில் குடிநீர் எடுத்து பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், வனத்துறையினர் மணல் கொண்டு ஊற்று கிணறை மூடி விட்டனர். மேலும், சுடுகாட்டுப் பாதை, மீன் வலை, கருவாடு உலர்த்துவதற்கும் தடை வித்துள்ளனர். இவற்றின் மூலம் நெருக்கடி கொடுத்து அங்குள்ள மக்களை அந்த இடத்திலிருந்து காலி செய்ய வைக்கும் முயற்சி நடப்பதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவித்து வந்தனர்.

இது தொடர்பாக கடந்த மாதம் அனைத்து அதிகாரிகளிடமும் மனு அளித்தனர். அப்போது, “எங்களது வாழ்வாதார பிரச்னைக்கு தீர்வு காணாமல், கடல்பசு பாதுகாப்பு மையத்திற்கான கட்டுமானப் பணிகளை செய்து வருகின்றனர்” எனக் கூறினர். ஆனால் அதன் பிறகும் மாவட்ட நிர்வாகம், ஆட்சியாளர்கள், உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் இதை கண்டு கொள்ளவில்லை என சொல்லப்படுகிறது. இதையடுத்து அதிருப்தியடைந்த மக்கள், தயவு செய்து 2026 சட்டமன்ற தேர்தலுக்கு ஓட்டு கேட்டு யாரும் ஊருக்குள் வர வேண்டாம் என்று அச்சிட்டு கிராமம் முழுவதும் கருப்புக் கொடியுடன் ஃப்ளக்ஸ் வைத்துள்ளனர்.