Cricket
oi-Yogeshwaran Moorthi
ஹராரே: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 2 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறி இருக்கிறார். இதன் மூலமாக இந்த டி20 தொடரின் 3 போட்டிகளிலும் அபிஷேக் சர்மா ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்திருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் அபிஷேக் சர்மாவிடம் கன்சிஸ்டன்சி பிரச்சனை தொடர்வதாக விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.
இந்தியா – ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டி ஹராரே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்பின் இந்திய அணிக்காக வைபவ் சூர்யவன்ஷி – அபிஷேக் சர்மா கூட்டணி தொடக்கம் கொடுத்தது.

இதில் வைபவ் சூர்யவன்ஷி எந்த அவசரமும் காட்டாமல் ரன்களை சேர்த்து வந்தார். ஆனால் மறுமுனையில் நின்றிருந்த அபிஷேக் சர்மா 4 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். இது 15 வயதாகும் வைபவ் சூர்யவன்ஷிக்கு அதிக அழுத்தத்தை உருவாக்கியது. இந்தப் போட்டி மட்டுமல்லாமல், இந்த தொடர் முழுவதும் அபிஷேக் சர்மா சொதப்பு சொதப்பு என்று சொதப்பி வருகிறார்.
முதல் போட்டியில் அபிஷேக் சர்மா 1 ரன்களையும், 2வது போட்டியில் 8 ரன்களையும், கடைசி போட்டியில் 2 ரன்களையும் எடுத்திருக்கிறார். இதன் மூலமாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அபிஷேக் சர்மாவின் ஸ்கோர் வெறும் 11 ரன்களாக மட்டுமே உள்ளது. டி20 உலகக்கோப்பை தொடர் முதலே அபிஷேக் சர்மாவிடம் கன்சிஸ்டன்சி பிரச்சனை இருப்பது விவாதமாக இருந்து வருகிறது.
டி20 உலகக்கோப்பை தொடரில் ஹாட்ரிக் டக் அவுட்டாகிய அபிஷேக் சர்மா, பின்னர் எப்படியோ ஒரு சில நல்ல இன்னிங்ஸை ஆடினார். ஆனால் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் ஒரு போட்டியில் மட்டும் சிறப்பாக ஆடினார். தற்போது ஜிம்பாப்வே டி20 தொடரில் 11 ரன்களை மட்டுமே சேர்த்து வருகிறார். இதனால் அபிஷேக் சர்மாவின் கன்சிஸ்டன்சி பிரச்சனை இன்னும் சரி செய்யப்படவில்லை என்று பார்க்கப்படுகிறது.
இதுவே சஞ்சு சாம்சனாக இருந்தால், 3 போட்டிகளில் சொதப்பிதற்கு பெஞ்ச் செய்யப்பட்டுவிடுவார். இங்கிலாந்து டி20 தொடரில் அப்படிதான் பெஞ்ச் செய்யப்பட்டு, இப்போது ஓய்வுக்கு அனுப்பப்பட்டிருக்கிறார். இதனால் இந்திய அணியில் வீரர்கள் ஒரே மாதிரியாக நடத்தப்பட வேண்டும் என்றும் குரல்கள் எழுந்துள்ளன.