“2014 ஆம் ஆண்டிலேயே ஜனநாயகம் அழிக்கப்பட்டு விட்டது.. பாசிஸ்டுகளின் குரல் ஓங்குகிறது” – ராகுல் காந்தி | India’s Democratic System Was Destroyed in 2014, Says Rahul Gandhi

Spread the love

India

oi-Vignesh Selvaraj

ஹைதராபாத்: 2014 ஆம் ஆண்டிலேயே இந்தியாவில் ஜனநாயகம் அழிக்கப்பட்டது என்று காங்கிரஸ் முன்னணி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

தெலங்கானா அரசு நடத்திய இரண்டு நாள் பாரத் உச்சி மாநாட்டின் நிறைவு நாளான இன்று, மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் முன்னணி தலைவருமான ராகுல் காந்தி உரையாற்றினார். 70 நாடுகளைச் சேர்ந்த பேச்சாளர்கள் பங்கேற்ற இந்த உச்சி மாநாட்டில், அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

India s Democratic System Was Destroyed in 2014 Says Rahul Gandhi

இந்த மாநாட்டில் ராகுல் காந்தி பேசும்போது, “2024 மக்களவைத் தேர்தலில் வாக்களித்த 14 கோடி மக்கள், சில மாதங்களுக்கு முன்பு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அவர்கள், இல்லாத வாக்காளர்கள் என்றும், வாக்களிக்காதவர்கள் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 14 கோடி வாக்காளர்களை வாக்குரிமை இல்லாதவர்கள் என்று தேர்தல் ஆணையமே அறிவித்தால் அந்த தேர்தல் எப்படி சட்டப்பூர்வமானதாக இருக்க முடியும்?

2024 மக்களவைத் தேர்தல் முடிவுகளும், அதே ஆண்டு மகாராஷ்டிராவில் நடந்த மாநில சட்டமன்றத் தேர்தல் நமக்கு ஓர் உண்மையை வெளிப்படுத்தியது. மக்களவைத் தேர்தலில் நமது கூட்டணி போட்டியிட்டு, வெற்றி பெறுகிறது. மூன்று மாதங்களுக்குப் பிறகு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் நாங்கள் முற்றிலுமாக தோற்கடிக்கப்படுகிறோம்.

நாங்கள் விவரங்களைச் சரிபார்க்கத் தொடங்கும்போது, இரண்டு தேர்தல்களிலும் எங்களுக்கு சரியாக அதே அளவு வாக்குகள் கிடைத்ததைக் கண்டோம். மூன்று மாதங்களில் 70 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்படுகிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் பாஜகவுக்கே வாக்களிக்கிறார்கள்.

இதற்கு முன்பாக, 2014-ல் நாங்கள் முற்றிலும் புதியதொரு தேர்தல் முறையைக் கண்டோம். இதுபோன்ற ஒன்றை இதற்கு முன்பு நாங்கள் பார்த்ததில்லை. அரசியல் அமைப்புக்குள் கோடிக்கணக்கான ரூபாய் கொட்டப்பட்டன. நெருக்கமான போட்டிகள் மற்றும் கூட்டணிகளை உள்ளடக்கிய தேர்தல் முறை திடீரென தலைகீழாக மாற்றப்பட்டது. எதிர்க்கட்சிகள் அதிர்ச்சியில் மூழ்கின.

இந்திய அரசியலில் 10 ஆண்டுகளாக இந்த நெருக்கடி நீடித்தது. இறுதியில் என்ன நடக்கிறது என்பதை நாங்கள் கண்டறிந்தோம். அதை உறுதிப்படுத்தியதோடு, 2014-ல் இந்தியாவில் ஜனநாயகம் அழிக்கப்பட்டது என்பதை எவ்வித சந்தேகத்துக்கும் இடமின்றி நிரூபித்துக் காட்டினோம்.

அமைப்புகள் சீர்குலையும்போது பாசிசவாதிகள் மறைவிடங்களில் இருந்து வெளியே வருகிறார்கள். அவர்கள் வணிக நிறுவனங்களின் தலைவர்களாக இருப்பதை நீங்கள் காணலாம். கல்வியாளர்களாகவும் நீங்கள் அவர்களைக் காணலாம். அரசியலில் நாம் அவர்களை பாசிஸ்டுகள் என்று அழைக்கிறோம்.

பாசிஸ்டுகள் எப்போதும் கத்திக்கொண்டே இருப்பார்கள். அலறுவார்கள். மற்றவர்களின் கருத்துகளைக் கேட்க மறுப்பார்கள். அதேசமயம், பெரும்பான்மையான மக்கள் செவிசாய்க்கிறார்கள், கவனிக்கிறார்கள், பணிவுடன் இருக்கிறார்கள். அதனால், பாசிஸ்டுகளின் குரல் ஓங்கி ஒலிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *