2029 பிரதமர் தேர்தலில் களமிறக்குகிறாரா?.. சூசகமாக சொன்ன விஜய்! – Kumudam

Spread the love

சென்னை நீலாங்கரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் 10 மற்றும் 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்குக் கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் பங்கேற்ற தவெக தலைவரும், முதலமைச்சருமான விஜய், சாதனை மாணவர்களுக்குச் சான்றிதழ்களையும் ஊக்கத்தொகையையும் வழங்கிச் சிறப்பித்தார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், மாணவர்களைத் தனது “நண்பா, நண்பீஸ்” எனக் குறிப்பிட்டு வாழ்த்தினார். அவர் பேசுகையில், “என் நெஞ்சில் குடியிருக்கும் செல்லங்கள் மற்றும் நண்பர்களுக்கு வணக்கம். வெறும் நன்றியோடு கடந்துவிட முடியாது, உங்கள் அனைவருக்கும் கோடி கோடி நன்றிகள். இந்த நிபந்தனையற்ற அன்பையும் ஆதரவையும் எனக்கு வரமாகக் கொடுத்த இறைவனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், தான் இங்கு அரசியல் பேசவோ அல்லது வாக்கு சேகரிக்கவோ வரவில்லை என்பதைத் தெளிவுபடுத்தினார். “நான் இங்கு முதலமைச்சராக வரவில்லை; எப்போதும் போல உங்கள் அண்ணனாக வந்திருக்கிறேன். உங்களுக்காகவும்தான் அரசியலுக்கு வந்துள்ளேன். விஜய் அரசியல் பேசுவாரோ, 2029 தேர்தலுக்குத் தயாராகிறாரோ என நினைக்க வேண்டாம். இப்போது உங்களுக்கு அரசியல் தேவையில்லை; நன்றாகப் படித்துப் பெரிய உயரங்களை அடையுங்கள். உங்களை நம்பித்தான் பெற்றோர்களும் இந்தச் சமூகமும், ஏன் முழுத் தமிழ்நாடும் இருக்கிறது” என்று குறிப்பிட்டார்.

மேலும் அவர், “அனைவரும் உங்களுடைய தனித்தன்மையை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் வளர்ச்சியைத் தடுக்கப் பலர் தடை போட நினைப்பார்கள். உங்களைத் தடுக்கிறார்கள் என்றால் நீங்கள் ஜெயிக்கப் போகிறீர்கள் என்பது அவர்களுக்குத் தெரிந்துவிட்டது என்று அர்த்தம். தடைகளைத் தாண்டி ஜெயித்தால் எதிரிகள் வயிறெரிவார்கள். உறுதியாகவும் நம்பிக்கையுடனும் இருங்கள்; வெற்றி நிச்சயம்” எனக் கூறினார்.

மாணவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கிய அவர், “லஞ்சம், ஊழல், போதைப்பொருள் பக்கம் சென்றுவிடாதீர்கள். எந்தவொரு தவறான பழக்கத்திற்கும் அடிமையாகிவிட வேண்டாம். உங்களோடு நான் இருக்கிறேன், என்னோடு நீங்கள் இருக்கிறீர்கள்; இந்த இணைப்பு எப்போதும் தொடரும். நம்பிக்கையோடு இருங்கள், நல்லதே நடக்கும்” என்று தெரிவித்தார்.

இதுவரை 2029 தேர்தல் குறித்த பேசாத முதலமைச்சர் விஜய், இந்த நிகழ்ச்சியில் மாணவர்களிடம் 2029 தேர்தல் குறித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. 2029 தேர்தல் குறித்து பேச வரவில்லை என்று முதலமைச்சர் விஜய் கூறியிருந்தாலும், அதனை இந்த விழாவில் அவர் கூற வேண்டும் என்ற அவசியமும் இல்லை. இந்த நிகழ்ச்சிக்கு வந்த மாணவர்கள் 2029 தேர்தல் வருவதற்குள் வாக்கு பதிவு செய்யும் வயதை எட்டிவிடுவார்கள். இதனால் விஜய் சூசகமாக இதை கூறினாரா? அவருக்கு பிரதமராகும் ஆசை இருக்கிறதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *