“இது எங்க கிரவுண்டு… எங்க ஏரியா’ எனச் சொந்த மண்ணில் கான்பிடன்ட்டாக களமிறங்கியது நியூசிலாந்து. ஆனால், எதிர்முனையில் இந்தியப் பந்துவீச்சாளர்கள் வைத்திருந்த திட்டமே வேறு! இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி ஆக்லாந்தின் ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
ஆரம்பம் முதலே இந்திய பவுலர்களின் ஆதிக்கம் தொடங்கியது. ‘பும்ரா இல்லனா என்னப்பா… நான் இருக்கேன்!’ என்பது போல் பந்துவீச்சில் மிரட்டினார் அர்ஷ்தீப் சிங். வில் யங், ஹென்றி நிக்கோல்ஸ், கிளென் பிலிப்ஸ், கைல் ஜேமிசன் என 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அன்ஷுல் கம்போஜ் 2 விக்கெட்டுகளையும், குர்னூர் பிரார் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இந்தியப் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் நியூசிலாந்து 185 ரன்களுக்குச் சுருண்டது.
186 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியாவுக்கு ரோஹித் சர்மா ரன் ஏதுமின்றி வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். ஆனால், அடுத்து கைகோத்த கோலி – கில் ஜோடி ஆட்டத்தை இந்தியாவின் பக்கம் திருப்பியது. அப்போது ‘இதோ வந்துட்டேன்’ என்பது போல் மழை குறுக்கிட, டி.எல்.எஸ் முறையில் இலக்கு 32 ஓவர்களில் 143 ரன்களாக மாற்றப்பட்டது.

அதன் பிறகு திரையில் ஹீரோ என்ட்ரி கொடுப்பதுபோல் தொடங்கியது கோலியின் ஆட்டம்! 35 பந்துகளில் அரைசதம் விளாசி, சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் தன்னுடைய 80வது அரை சதத்தைப் பதிவு செய்து 51 பந்துகளில் 74 ரன்கள் குவித்தார். கில் 37 ரன்கள் எடுக்க, இருவரும் 113 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். கோலி வெளியேறியதும் டஃபி அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்திப் பரபரப்பைக் கூட்டினார். ஷ்ரேயாஸ் ஐயர் 15 ரன்களும், அக்சர் படேல் ரன் ஏதுமின்றியும் வெளியேறினர்.
இறுதியில் 22.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்து இந்திய அணி, 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருதை அன்ஷுல் கம்போஜ் தட்டிச் சென்றார். இதன்மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது!