25 ஆண்டுகளுக்கு முந்தைய சம்பவம்: தலை தீபாவளி நாளில் கிட்டண்ணன் செய்த தவறும், இன்றைய நிம்மதியும்!

Spread the love

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

பொழுது சாயப்போகுது, பட்டாசு சத்தம் இப்பவே பட்டைய கெளப்புது .விடிஞ்சா தீபாவளி, கிட்டண்ணனுக்கு இருப்பே கொள்ளலை. முத்தம்மா கூட வாசக்கட்டுக்கும் வீட்டுக்குள்ளும் நடந்தபடியே இருந்தாள். தெரு முனையில் வண்டி சத்தம் கேட்கும் போதெல்லாம் ரெண்டு பேரும் ஓடிவந்து வெளியில பாத்துட்டு ஏமாந்து உள்ளே போனாங்க.

“ரெண்டு நாட்களுக்கு முன்னாடியே வரச்சொல்லி பொண்ணுகிட்டயும் மாப்பிள்ளை கிட்டயும் பதினைஞ்சு நாளைக்கு முன்னாடியே போய் பலதடவை படிச்சி படிச்சி சொல்லி கூப்பிட்டுட்டு வந்தோம். மாமியா,மாமனார் கிட்டயும் முறையா சொல்லிட்டு தானே வந்தோம். இருந்தும் இன்னுங் காணலையே “என்று ரெண்டு பேர் மனசும் அடிச்சுகிட்டது வெளியாளுங்களுக்கு கூட கேட்கும் போல இருந்தது.

” கறிவேப்பிலை கொத்தாட்டம் ஒரே மகள் விஷாலி. ரொம்பவே செல்லமா சுதந்திரமா வளர்ந்த பொண்ணு. மாப்பிள்ளை முகுந்தனும் வீட்டுக்கு ஒரே பையன்தான். நல்லமாதிரியான குடும்பம் னு விசாரிச்சு தான் கல்யாணம் நடந்துச்சு. இருந்தும் என்னாச்சுன்னு தெரியலை , போன் பண்ணினாலும் எடுக்கல. சம்பந்தியை கூப்பிட்டு கேட்டாலும் நல்லா இருக்காது. என்ன செய்யறது? “என்று யோசித்தபடி திண்ணையில் வந்து ஓய்ஞ்சு உட்கார்ந்தார் கிட்டண்ணன்.

” என்னங்க இப்படி ஏதாச்சும் இருக்குமோ , எனக்கு மனசுக்குள்ள என்னென்னவோ ஓடுது,” என்று பயந்த குரலில் பேசியபடி வந்து நின்றாள் முத்தம்மா.

‘எப்படி’ என்றபடி தலைநிமிர்ந்து பார்த்தார் .அவர் மனசுக்குள்ளும் ஏதோ நெருடியது.

“அதாங்க , அது வந்துங்க இருபத்தஞ்சு வருஷத்துக்கு முன்னாடி நம்ம தலை தீபாவளி நாள்லே நீங்க நடந்துட்ட மாதிரி மாப்பிள்ளையும் ஏதாவது.”….என்று இழுத்தாள் முத்தம்மா.

ஆயிரம் சாட்டைகளால் ஒரே நேரத்தில் அடி வாங்கியது போல் துடித்தார் கிட்டண்ணன். “என்னை மாதிரி கேடுகெட்ட கோவக்காரனோ இல்லை கொடுமைக்காரனோ யாரும் இருக்க மாட்டாங்க,அதிலும் எம் மாப்பிள்ளை எல்லாம் அப்படிப்பட்டவர் இல்ல. உனக்கு நடந்த சம்பவம் மாதிரி என்னோட மகளுக்கு நடக்காது, “என்று பதட்டத்துடன் வாய் குளறப் பேசினார் அவர்.

‘உங்களுக்கு வந்தா அது ரத்தம், மத்தவங்களுக்கு வந்தா அது தக்காளி சட்னியா ‘?!என்று முனகியபடியே தெருக்கோடி வரைக்கும் போய் பாத்துட்டு வர்றேன் னு போனாள் முத்தம்மா.

என்னதான் நம்பிக்கையோடு பேசினாலும் உள்ளுக்குள் உதறலாகத்தான் இருந்தது இவருக்கு, என்னவானாலும் இப்ப பெத்த வயிறு பெண்ணை நினைத்து கலங்கியது.

மாமனாரும் மாமியாரும் அழுது கெஞ்சியது, மற்றவர்கள் செய்வதறியாது திகைத்து நின்றது எல்லாம் கண்முன் நிழலாடியது. கல்யாணமான பத்தாம் மாதமே விஷாலி பிறந்துட்டா.முதல் குழந்தை பெண்ணாக பிறந்த வருத்தம், குழந்தைக்கு இடுப்புக்கயிறு வெள்ளியில் போட்டது , தனக்கு கைச்சங்கிலி( பிரேஸ்லெட்) எடுக்காமல் விட்டது எல்லாம் சேர்ந்து இவரை சாமியாட விட்டது. இதற்கும் குழந்தைக்கு செயின்,வளையல் ,மோதிரம், கால் கொலுசு, மாப்பிள்ளைக்கு செயின்,மோதிரம் துணிமணி எல்லாம் முத்தம்மாவைப் பெத்தவங்க எடுத்துத்தான் வச்சிருந்தாங்க.

எல்லாத்தையும் எடுத்து விசிறியடித்து விட்டு விஷாலிப் பாப்பாவை மட்டும் எடுத்துக் கொண்டு விறுவிறுன்னு கிளம்பிட்டார். முத்தம்மா அழுதபடி துணி மாத்தாம தலை கூட வாராம,குழந்தைய கேட்டுக்கொண்டே பின்னால ஓடி வந்தா. ஊரே கூடி நின்னு வேடிக்கை பாத்துச்சு. “ஐயோ நெறைஞ்ச வெள்ளிக்கிழமை நாள்லே வீட்டு மகாலட்சுமி போறாளே, ஒரு வெள்ளித்

தகடாவது அவ கையில குடுத்து திருப்பி வாங்குங்கடா , இல்லைன்னா நம்ம செல்வமெல்லாம் போயிருமே” என்று கிழடு கட்டைகள் புலம்ப , முத்தம்மாவின் அப்பாவுக்கு கோபம் தலைக்கேறியது. “செல்வமெல்லாம் என்ற பொண்ணோட தானே போகுது. போகட்டும், சந்தோஷமா விடுங்க. அப்பிடியாவது அவ நல்லா இருக்கட்டும் ,”என்று சொன்னது கிருஷ்ணசாமி (கிட்டண்ணன்) காதில் விழுந்தது.

அதற்கப்புறம் கொஞ்ச நாளுக்கு போக்குவரத்து நின்னே போச்சு. முத்தம்மா பொறுமையாக குடும்பம் நடத்தினாள். கிட்டண்ணனின் பாட்டி சாயலில் விஷாலி இருப்பதாக எல்லோரும் கொண்டாடினாங்க. குடும்பத்தில் செழிப்பு பெருகியதால் அங்க முத்தம்மாவுக்கும் மதிப்பு கூடியது. அடுத்ததும் பெண்ணாகப் பிறந்துட்டா இவங்ககிட்ட ரொம்பவே கஷ்டப்பட்டாகணுமின்னு முத்தம்மா விஷாலியுடன் நிறுத்திக்கொண்டாள்.

இதுக்கிடையில பூர்வீக சொத்தும் பிறந்த வீட்டுல இருந்து முத்தம்மாவுக்கு கிடைக்க பிரிஞ்ச உறவெல்லாம் சேர்ந்துட்டாங்க. இதையெல்லாம் நினைச்சுப் பாத்தவருக்கு முகமெல்லாம் வேர்த்துக்கொட்டுச்சு.

கார் ஹாரன் சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தவர் விஷாலி மட்டும் பெட்டியுடன் கேட்டுக்குள் வர்றதைப் பார்த்தார். மாப்பிள்ளை உள்ளாற வராம திரும்பப் போயிட்டார். என்னன்னு தெரியாம மனசு பதறியது. விஷாலியும் ஒண்ணும் பேசாம அப்பாவப் பாத்து தலையை மட்டும் அசைச்சுட்டு உள்ளே போயிட்டா. முத்தம்மா வெளியிலேயே வரலே.

‘ கர்ம வினை திரும்புதோ’ ன்னு பயந்தார். முத்தம்மா காபி கொண்டுவந்து கணவருக்கு கொடுத்தா. விஷாலியும் அப்பா கிட்ட வந்து உட்கார்ந்தாள். மகளின் முகத்தை உத்துப்பார்த்த அப்பாவுக்கு வித்தியாசம் ஏதும் தெரியலை. முகம் தெளிவா சந்தோஷமாத் தான் தெரிஞ்சது.

” நீ காபி குடிக்கலையா சாமி, முத்து! பாப்பாக்கும் காபி பலகாரம் எடுத்துட்டு வா” என்றார். “இருக்கட்டும்பா, நீங்க குடிங்க, அவங்களும் வந்த பிறகு நான் குடிக்கறேன்” என்று விஷாலி சொன்னதும் மனசுக்குள் மத்தாப்பு சத்தம் சரசரன்னு கேட்டுச்சு. கண்ணுக்குள் சங்கு சக்கரம் சத்தமில்லாம சுத்துச்சு.

கொஞ்ச நேரத்துல மாப்பிள்ளையின் கார் சத்தம் கேட்டவுடன் விஷாலி ஓடிப்போய் கேட்டை திறந்துவிட்டாள். மாப்பிள்ளையும சம்பந்திகளும் வந்து இறங்கினர்.

“அதுஒண்ணுமில்லீங்கண்ணா ! இது இவங்களுக்கு முதல் தீபாவளி ஆச்சா, அதான் நம்ம வீட்டுலேயும் எங்க கூட இருந்து முதல்லே புதுத்துணி கட்டி இனிப்பு சாப்பிட்டுட்டு கொஞ்சம் பட்டாசு விட்டுட்டு வந்தாங்க. அதான் நேரமாயிடுச்சு. வர்றவழியில ஸ்வீட்கடையிலே வேற செம கூட்டம். சரி இன்னுங் காணோமேன்னு நீங்க தவிப்பீங்கன்னு சொல்லி தம்பி பாப்பாவைக் கொண்டு வந்து விட்டுட்டு மறுபடி வந்து எங்களை அழைச்சுட்டு வந்துச்சு,நாளைக்கு எங்களுக்கும் இங்க தான் தீபாவளி, பொங்கலுக்கு நீங்க ரெண்டுபேரும் அங்க வந்துடுங்க சரியா அண்ணி?”என்றாள் சம்பந்தி மீனாட்சி.

“சரி சரி, வெளியவே நின்னு பேசிக்கிட்டு இருக்காதீங்க. அண்ணா,அண்ணி ரெண்டு பேரும் உள்ள வந்து உக்காருங்க, பாப்பா மாப்பிள்ளைய கூட்டிட்டு உள்ள வா கண்ணு,”என்றாள் முத்தம்மா.

“மாப்பிள்ளை,சம்பந்தி, குடும்பம்,உறவுகள்னா, இப்படித்தான்இருக்கணும். நானும்தான் இருந்தனே, புத்தியையும் சந்தோஷத்தையும் சொந்தங்களையும் முழுசாத் தொலைச்சுட்டு !என்று வருத்தப்பட்டு தனக்குள் பேசினார் கிட்டண்ணன். “என்ன சொன்னீங்க சம்பந்தி “ன்னு கேட்டார் முகுந்தனின் அப்பா சுந்தரம்.

‘அது வேற ஒண்ணும் இல்லீங்கண்ணா ! சீக்கிரம் போய் டிபன் ரெடி பண்ணுன்னு சொல்றாருங்க,’என்றாள் எல்லாம் புரிந்த முத்தம்மா.

“பாத்தீங்களா எங்க அண்ணனை? அண்ணி கிட்ட எத்தனை தன்மையாக மெதுவா பேசறாருன்னு, நீங்களுந்தான் இருக்குறீங்களே இடி விழுகிற மாதிரி பேசிட்டு,” என்றாள் மீனாட்சி.

“ஆமாமா உங்க அண்ணனோட தன்மை எல்லாம் எனக்குத்தான் தெரியும்” என்று முணுமணுத்தாள் முத்தம்மா.

“பாத்தியா எந்தங்கச்சிய , வாய்ச்சத்தம் வெளிய வராம பேசறதை, நீயுந்தான் இருக்குறயே பத்ரகாளி ருத்ரதாண்டவம் ஆடற மாதிரி !” என்றார் சுந்தரம்.

யாருக்கும் எதுவும் புரியாவிட்டாலும் எல்லோரும் சேர்ந்து கைதட்டி சிரிச்சு சந்தோஷப்பட்டனர்.

இவங்க நாலு பேரின் குணங்களை முழுமையா புரிஞ்சுகிட்ட முகுந்தனும் விஷாலியும் சிரித்துக் கொண்டே பின்பக்கம் போனார்கள்.

ஹாலில் சம்பந்திகளின் அலப்பறை பேச்சுகள் பட்டாசு சத்தத்தை விட பலமாக இருந்தது….

வெளியில் கேட்ட பட்டாசுகளின் வெடிச்சத்தம் குறைவாகவே இருந்தது!

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..!

இந்த வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப்பில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே…!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *