25% CSK shares கேட்கிறாரா தோனி? அணி நிர்வாகம் சொல்வது என்ன? – Kumudam

Spread the love

கிரிக்கெட் விளையாட்டு என்றாலே நம் நினைவிற்கு முதலில் தோன்றும் பெயர்களில் ஒன்று தல தோனி. தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி, வெற்றி வீரராக வலம் வரும் நிலையில், தற்போது அவர் சிஎஸ்கே அணியிடம் 25 சதவீத பங்குகளை கேட்டதாக ஒரு தகவல் பரவி வருகிறது.

கடந்த சில மாதங்களாகவே சிஎஸ்கே அணி தொடர்பாக பல்வேறு சர்ச்சைகளும் தகவல்களும் வெளியாகி வருகின்றன. இதற்கு முன்பு, சிவம் துபே மற்றும் கலீல் அஹ்மத் ஆகியோரை கொடுத்துவிட்டு, மும்பை அணியிடமிருந்து ஹர்திக் பாண்டியாவை வாங்க சிஎஸ்கே முயற்சி செய்வதாகவும் தகவல்கள் வெளியாகின.

அதேபோல், ஸ்டீபன் ஃபிளமிங் மற்றும் சிஎஸ்கே நிர்வாகத்துக்கு இடையே மோதல் ஏற்பட்டதால் அவர் பதவி விலகியதாகவும் கூறப்பட்டது. ஆனால், ஃபிளமிங் இங்கிலாந்து அணியின் டெஸ்ட் பயிற்சியாளர் பதவியை ஏற்க முடிவு செய்ததால், சிஎஸ்கே அணியிலிருந்து விலகினார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கலீல் அஹ்மத் மற்றும் சிவம் துபே இருவரும் சிஎஸ்கே மைதானத்தில் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில், மறுபுறம் ருதுராஜ் கெய்க்வாட் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் பேச்சுக்கள் எழுந்தன. எனினும், இதற்கு சிஎஸ்கே நிர்வாகம் மறுப்பு தெரிவித்தது.

இதன் உச்சமாக, சிஎஸ்கே அணியின் 25 சதவீத பங்குகளை தோனி வாங்க விரும்பியதாகவும், அதற்கு அணி நிர்வாகம் 4 சதவீத பங்குகளை மட்டுமே வழங்க முன்வந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. பின்னர், தோனி 18.5 சதவீத பங்குகளை கேட்டதாகவும், சிஎஸ்கே நிர்வாகம் 5.5 சதவீத பங்குகள் மட்டுமே வழங்க முடியும் என இறுதியாக தெரிவித்ததாகவும் சில தகவல்கள் பரவின.

இதனால், சிஎஸ்கே அணியுடனான தோனியின் உறவு முடிவுக்கு வந்துவிட்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன், தோனி பங்குகளை கேட்டதாக வெளியான தகவல் அடிப்படை ஆதாரமற்ற வதந்தி என மறுத்துள்ளார்.

மேலும், அடுத்த சீசனில் தோனி விளையாடுவாரா என்பது குறித்து அவரே முடிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதுவரை தோனியிடம் இருந்து விளையாட மாட்டேன் என்ற பதில் வரவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

தோனி தற்போது 45 வயதை எட்டியுள்ள நிலையில், கடந்த சீசனிலேயே ஒரு போட்டியில் கூட அவர் களமிறங்கவில்லை. இதனால், வரும் சீசனில் தோனி ஓய்வை அறிவிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *