Last Updated:
கடலில் 2500 அடி ஆழத்தில் வாழும் கலப்புச்சுறா மீன் முதல்முறையாக பாம்பன் மீனவர்கள் வலையில் சிக்கியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் 90-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் தென்கடலான மன்னார் வளைகுடா கடலில் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். மீனவர்கள் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்றுக்கொண்டு மன்னார் வளைகுடா ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்று கரை திரும்பினர்.
கரை திரும்பிய விசைப்படகுகளில் அனைத்து வகையான மீன்களும் பரவலாக சிக்கி உள்ளது. இதில் நீளமான தோற்றத்தில் பார்ப்பதற்கு கூர்மையான வாய், பச்சையான கண்கள் வழுவழுப்பான உடலமைப்புடன் எலும்புகள் இல்லாத மீனாக வித்தியாசமான மீன்வகை மூன்று சிக்கியுள்ளது.
இந்த மீன் சுறாமீன் வகைகளில் ஒன்றாக கலப்புச்சுறா அல்லது அதன் கண் பச்சை நிறத்தை வைத்து பேய்க்கண் சுறா என மீனவர்கள் அழைக்கின்றனர். உடலமைப்பு குருத்தெலும்புடன் இருக்கும். இதன் பற்கள் எலியின் பற்களை போன்று காணப்படும்.
இவ்வகையான மீன்கள் இதுவரையிலும் பாம்பன் மீனவர்கள் வலையில் சிக்கியதில்லை. 2500-க்கும் அதிகமான ஆழ்கடல் பகுதியில் தான் இவை வாழும். ஆழ்கடல் பகுதியில் பலத்த காற்று கடல் நீரோட்டத்தின் காரணமாக இவை குறைந்த ஆழ்கடல் பகுதிக்கு வந்து மீனவர்கள் வலையில் சிக்கி இருக்கலாம்.
இவை வித்தியாசமாக இருந்ததால் வியாபாரிகள் யாரும் வாங்கி செல்லவில்லை. விலைபோகாமல் மீன்பிடி துறைமுகத்திலேயே வைக்கப்பட்டது என மீனவர்கள் தெரிவித்தனர்.
Ramanathapuram,Tamil Nadu
