Tamilnadu
oi-Vigneshkumar
டெல்லி: இந்தியாவில் மிகவும் பிரபலமான இன்ஸ்டன்ட் மெசேஜிங் செயலியான டெலிகிராம் செயலியை தற்காலிகமாக தடை செய்ய மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. குறிப்பாக, நீட் தேர்வு வினாத்தாள் லீக் முறைகேடுகள் இந்தச் செயலி வழியாக நடந்ததாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இருப்பினும், தடை விதிக்கப்பட்ட பிறகும் பலரது மொபைல்களில் டெலிகிராம் இன்னும் தடையின்றி இயங்கிக் கொண்டிருப்பது பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக டெலிகிராம் குழுக்கள் மற்றும் சேனல்கள் மூலம் வினாத்தாள்கள் சட்டவிரோதமாகப் பகிரப்பட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து நீட் மருத்துவ தேர்வு நடைபெறும் ஜூன் 21க்கு மறுநாள் வரை டெலிகிராம் செயலிக்கு தற்காலிகமாக இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது.

டெலிகிராம் தடை
இந்தியாவில் டெலிகிராம் (Telegram) செயலிக்குத் தடை விதிக்கப்பட்ட போதிலும், அது இன்னும் பல பயனர்களுக்குத் தடையின்றி வேலை செய்து வருவது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் தடையை தாண்டியும் டெலிகிராம் செயலி செயல்படுவது, இந்தியாவின் தொழில்நுட்பத் திறனை பற்றிய கேள்விகளையும் எழுப்பியுள்ளது. இது குறித்த விரிவான விளக்கத்தை இங்கே காணலாம்.
தடை இருந்தும் ஏன் இயங்குகிறது?
பொதுவாக ஒரு செயலியை அரசு தடை செய்யும் போது, இணைய சேவை நிறுவனங்கள் (ISPs) அந்தச் செயலியின் சர்வர் முகவரிகளை முடக்கும். ஆனால், டெலிகிராம் விஷயத்தில் இது முழுமையாகப் பலன் அளிக்கவில்லை. இதற்கு முக்கியக் காரணம் டெலிகிராம் பயன்படுத்தும் மேம்பட்ட தொழில்நுட்பங்களே ஆகும்.
1. புராக்ஸி
டெலிகிராம் செயலியின் மிக பெரிய பலமே அதில் டிபால்டாக இருக்கும் புராக்ஸி வசதிதான். மற்ற செயலிகளைப் போலன்றி, டெலிகிராம் தனது பயனர்களுக்குச் செயலிக்குள்ளேயே புராக்ஸி அமைப்புகளை மாற்றிக்கொள்ளும் வசதியை வழங்குகிறது. இதன் மூலம், அரசு ஒரு குறிப்பிட்ட ஐபி (IP) முகவரியைத் தடை செய்தாலும், பயனர்கள் வேறொரு புராக்ஸி முகவரி மூலம் தடையின்றிச் செயலியைப் பயன்படுத்த முடிகிறது. இதற்குப் பயனர்கள் தனியாக VPNஐ கூட பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.
2. ஐபி முகவரிகள்
டெலிகிராம் நிறுவனம் தனது சர்வர் ஐபி முகவரிகளைத் தொடர்ந்து மாற்றிக்கொண்டே இருக்கிறது. இணைய சேவை நிறுவனங்கள் ஒரு ஐபி முகவரியைக் கண்டறிந்து முடக்குவதற்குள், டெலிகிராம் புதிய முகவரிக்கு மாறிவிடுகிறது. இந்த ‘பூனை-எலி’ ஆட்டத்தில் டெலிகிராம் ஒரு படி மேலே இருப்பதால், அதை முழுமையாக முடக்குவது அரசுக்குச் சவாலாக உள்ளது.
இதற்கு முன்பு டிக்டாக் போன்ற செயலிகள் தடை செய்யப்பட்டபோது, அவை உடனடியாகச் செயல்பாட்டை நிறுத்தின. ஆனால், டெலிகிராம் போன்ற ஒரு மெசேஜிங் செயலியைக் கட்டுப்படுத்த முடியாமல் போவது, இந்தியாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்பில் உள்ள பலவீனத்தைக் காட்டுவதாக வல்லுநர்கள் கருதுகின்றனர். ஒரு செயலியைத் தொழில்நுட்ப ரீதியாக முடக்குவதில் உள்ள சிக்கல்கள், அரசின் டிஜிட்டல் சட்டங்களை அமல்படுத்துவதில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன.
சவால்கள் என்ன?
டெலிகிராம் என்பது Decentralized கட்டமைப்பைக் கொண்டது. அதாவது குறிப்பிட்ட ஒரு சர்வரில் இருந்து இயங்காமல்… இது உலகெங்கிலும் உள்ள பல்வேறு சர்வர்களில் இயங்குகிறது. இதனால் ஒரு குறிப்பிட்ட நாட்டின் எல்லையை மட்டும் டிஜிட்டல் முறையில் பிளாக் செய்வது கடினம். மேலும், டெலிகிராம் தனது யூசர்களின் பிரைவசிக்கு முக்கியத்துவம் அளிப்பதாகக் கூறி, அரசின் பல கோரிக்கைகளை ஏற்க மறுப்பதும் இந்தச் சிக்கலுக்கு ஒரு காரணமாகும்.
இதற்கு முன்பு ரஷ்யா கூட இதுபோல டெலிகிராம் செயலுக்கு தடை விதிக்க முயன்று தோல்வியடைந்தது. ரஷ்ய அரசு டெலிகிராமை முடக்க முயன்றபோது, அந்த செயலி தனது நெட்வொர்க் டிராஃபிக்கை தொடர்ந்து வேறு ஐபி முகவரிகளுக்கு டைனமிக் முறையில் மாற்றிக்கொண்டே இருந்தது. இதனால் டெலிகிராம் டிராஃபிக்கை மட்டும் தனியாகப் பிரித்து முடக்க முடியாமல், சம்பந்தமே இல்லாத நூற்றுக்கணக்கான பிற இணையதளங்களும் சேவைகளும் தற்செயலாக முடங்கின. இந்தத் தொழில்நுட்ப சவாலால் ரஷ்யாவின் தடை முயற்சி தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.
ஈசி இல்லை
அதேபோல், கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து இந்த செயலியை நீக்குவது மட்டுமே அதன் பயன்பாட்டை முற்றிலுமாக தடுத்துவிடாது. ஏற்கனவே செயலியைப் பதிவிறக்கம் செய்தவர்கள் அதைத் தொடர்ந்து பயன்படுத்த முடியும். மேலும், டெலிகிராம் செயலியில் பில்ட்-இன் பிராக்சி வசதி உள்ளதாலும், மாற்று இணையதளங்கள் வழியாக ஏபிகே பைலாக நேரடியாகப் டவுன்லோட் செய்ய முடியும் என்பதாலும், ஆப் ஸ்டோர் தடைகளைத் தாண்டியும் மக்கள் அதை எளிதாகப் பயன்படுத்த முடிகிறது.