மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள் தவெகவுக்குக் கொண்டாட்டம்… அதிமுகவுக்கோ தலையைச் சொறியும் நிலை. ஏற்கெனவே பதவியில் இருந்த மரகதம் குமரவேலும் சத்யபாமாவும் தவெகவில் இணைந்து மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில், அதிமுகவுக்குக் கிடைத்திருப்பது மூன்றாவது இடம்.
இப்போது தொண்டர்களின் கேள்வி, ‘தோற்றது வேட்பாளர்களா… இல்லை தலைமையின் கணக்கா?’. இந்தக் கேள்வி எழுந்த சூட்டோடு, அதிமுகவுக்குள் தலைமை மாற்றம் குறித்த பேச்சுகளும் கிளம்பியிருக்கின்றன.
பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஒற்றைத் தலைமைக்கு எதிராக மூத்த நிர்வாகிகள் சிலர் அணிதிரள்வதாக வெளியாகும் தகவல்கள், கட்சிக்குள் அடுத்த அரசியல் பரபரப்பை உருவாக்கத் தொடங்கியுள்ளன.
மூவர் கூட்டணி… மூவ் ஆரம்பமா?
அதாவது, எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், நத்தம் விஸ்வநாதன்… இந்த மூவரும் ரகசிய ஆலோசனைகளில் ஈடுபட்டு வருவதாகக் கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது. எடப்பாடியின் தலைமையில் கட்சி தொடர்ந்து தேர்தல் பின்னடைவுகளைச் சந்திப்பதாகக் கருதும் சில மூத்த தலைவர்கள், தலைமை மாற்றம் தேவை என்ற நிலைப்பாட்டில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இடைத்தேர்தலில் அதிமுகவின் தோல்வி, இந்த அதிருப்திக்கு மேலும் தீனி போட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அதேநேரத்தில், தவெக வேட்பாளர்களுக்கு மூவர் தரப்பு மறைமுகமாக ஆதரவளித்ததாகச் சொல்லப்படுகிறது.
குறிப்பாக, அதிமுகவின் இடைத்தேர்தல் தோல்வியானது, எடப்பாடிக்கு எதிராக திட்டமிட்டுப் போடப்பட்ட ஸ்கெட்ச் என்று சொல்லப்படுகிறது. அதிமுகவிற்காக வாக்கு சேகரிக்க செல்லாதது ஒருபக்கம் குற்றச்சாட்டாக முன்வைக்கப்படும் நிலையில்,மறைமுகமாக தவெகவிற்கு ஆதரவு கரம் நீட்டியதாகவும் இந்த மூவர் அணிமீது எடப்பாடியின் விசுவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
எடப்பாடியை விட்டு எகிறும் 28 எம்.எல்.ஏ-க்கள்…!
அக்டோபர் 11 முதலே மூவர் தரப்பு அடுத்தகட்ட ஆலோசனைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும், அவ்வப்போது ரகசிய மீட்டிங்கை நடந்திக் கொண்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. அந்தவகையில், அண்மையில் சிவி சண்முகமும் சில எம்.எல்.ஏக்களிடம் ஆலோசனை மேற்கொண்ட்தாகக் கூறப்படுகிறது.
இந்த மீட்டிங்கில், அதிமுக எம்.எல்.ஏ-க்களைத் தங்கள் பக்கம் திரட்டுவது, சட்டமன்றத்தில் தனி அணியாகச் செயல்படுவது அல்லது தவெகவுக்கு ஆதரவளிப்பது எனப் பல்வேறு வாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுகவிடம் 41 எம்.எல்.ஏ-க்கள் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அவர்களில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவைப் பெறுவதே இந்தத் திட்டத்தின் முக்கியக் கணக்காகச் சொல்லப்படுகிறது. 41-ல் மூன்றில் இரண்டு பங்கு என்றால் குறைந்தது 28 பேர். ஆனால், அரசியல் கணக்கில் 28 என்று எழுதிவிட்டால் 28 பேரும் வரிசையாக வந்து கையெழுத்துப் போட்டுவிடுவார்களா என்ன? ஒவ்வொரு எம்.எல்.ஏ-வுக்கும் தனித்தனி கணக்கு, தொகுதிக் கணக்கு, எதிர்காலக் கணக்கு எனப் பல கணக்குகள் இருக்கத்தானே செய்கின்றன.
மேலும், மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்தாலே கட்சித் தாவல் தடைச் சட்டத்திலிருந்து தானாகவே விலக்கு கிடைத்துவிடும் என்று எளிமையாகக் கருத முடியாது. அணியின் அங்கீகாரம், சட்டமன்ற நடைமுறைகள் உள்ளிட்ட அம்சங்களும் முக்கியமானது.
எடப்பாடியின் நாற்காலிக்கு ஆபத்தா?
28 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவைத் திரட்ட முடிந்தால், கட்சியின் சட்டமன்ற அணியில் தங்களது செல்வாக்கை அதிகரிக்கலாம் என்பது மூவர் தரப்பின் கணக்காக இருப்பதாக உள்விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
அதன் தொடர்ச்சியாகப் பொதுக்குழுவைக் கூட்டி தலைமையில் மாற்றம் கொண்டுவருவது குறித்தும் ஆலோசிக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், எம்.எல்.ஏ-க்களைத் திரட்டுவது வேறு.. கட்சியின் பொதுச்செயலாளர் பதவியைக் கைப்பற்றுவது வேறு. அதிமுகவின் கட்சி விதிகள், அமைப்பு நடைமுறைகள், சட்டமன்றக் கட்சியின் நிலைப்பாடு என ஒவ்வொரு கட்டத்தையும் கடக்க வேண்டியிருக்கும். ஆக, 28 என்ற எண் மட்டும் எடப்பாடியின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானித்துவிடாது என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே, தங்கள் பக்கம் இருக்கும் எம்.எல்.ஏ-க்கள் வேறு அணிக்குச் சென்றுவிடாமல் தக்கவைத்துக்கொள்வதில் எடப்பாடி தரப்பும் கவனம் செலுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
ஒருபக்கம் இடைத்தேர்தல் தோல்வி.. மறுபக்கம் தலைமை மாற்றம் குறித்த சலசலப்பு. இதற்கிடையே, அதிமுகவின் எதிர்காலம் குறித்த கேள்விகளும் அதிகரித்துள்ளன.
இதுவரை எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் கட்சி இயங்கி வந்த நிலையில், இப்போது அந்தத் தலைமையைச் சுற்றியே புதிய கணக்குகள் போடப்படுவதாகத் தகவல்கள் வெளியாகின்றன. மூவர் கூட்டணி உண்மையிலேயே 28 எம்.எல்.ஏ-க்களைத் திரட்டுகிறதா? இது வெறும் அரசியல் அழுத்தமா, அல்லது தலைமை மாற்றத்துக்கான தொடக்கமா?
இடைத்தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுகவில் எழுந்திருக்கும் இந்தக் கேள்விகளுக்கு, அடுத்தடுத்த அரசியல் நகர்வுகள்தான் பதில் சொல்ல வேண்டும். இப்போதைக்கு 28 என்ற எண்ணைச் சுற்றித்தான் அதிமுக அரசியல் கணக்கு ஓடிக்கொண்டிருக்கிறது.

