28,405 ரூபாய் வரை லாபம்.. தமிழக அரசிடம் இஎம்ஐயில் வீடு வாங்கியவர்களுக்கு புதிய அறிவிப்பு | Interest waivers for Tamil Nadu Housing Board installment schemes : Things residents need to know

Spread the love

Tamilnadu

oi-Velmurugan P

சென்னை: மனை, வீடு மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒதுக்கீடு பெற்று 31.03.2026-க்குள் தவணைக் காலம் முடிவுற்ற திட்டங்களில், நிலுவைத்தொகை செலுத்தத் தவறிய ஒதுக்கீடுதாரர்கள் பயன்பெறும் வகையில், அந்த தொகையை ஒரே தவணையாகச் செலுத்துபவர்களுக்கு விதிக்கப்படும் அபராத வட்டித் தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது பற்றி முழு விவரங்களை நாம் பார்ப்போம்.

பல ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் தொகையை வசூலித்து, ஒதுக்கீடுதாரர்களுக்கு விற்பனைப் பத்திரம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு விரும்புகிறது. அதற்காக வட்டி மற்றும் அபராத வட்டிச் சுமையைக் குறைத்து வீட்டின் உரிமையை ஏழை எளிய மக்கள் தர விரும்புகிறது. அதற்காகவே அரசு இந்த வட்டி தள்ளுபடி அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

Interest waivers for Tamil Nadu Housing Board installment schemes Things residents need to know

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;-

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் தவணைமுறை திட்டத்தின் கீழ் மனை, வீடு மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கீடு பெற்று தவணைக் காலம் முடிவுற்ற பின்பும் விற்பனை பத்திரம் பெறாமல் சுமார் 6,496 ஒதுக்கீடுதாரர்கள் உள்ளனர். இவர்கள் முழுத்தொகையையும் செலுத்தாமல் விற்பனைப் பத்திரம் பெறமுடியாமல் உள்ளனர். முதலமைச்சர் விஜய் அறிவுரையின்படி, வட்டி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தவணை கொள்முதல் திட்டங்களில் மனை, வீடு மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒதுக்கீடு பெற்று 31.03.2026-க்குள் தவணைக் காலம் முடிவுற்ற திட்டங்களில், நிலுவைத்தொகை செலுத்தத் தவறிய ஒதுக்கீடுதாரர்கள் பயன்பெறும் வகையில், அந்த தொகையை ஒரே தவணையாகச் செலுத்துபவர்களுக்கு விதிக்கப்படும் அபராத வட்டித் தள்ளுபடியும், வட்டி முதலாக்கத்தின் மீதான வட்டித் தள்ளுபடியும் மற்றும் நிலத்தின் இறுதி விலை வித்தியாசத்தில் வசூலிக்கப்படும் தொகைக்கான வட்டியில் ஒவ்வொரு ஆண்டுக்கும் 5 மாதத்திற்குண்டான வட்டித் தள்ளுபடியும் செய்து விற்பனைப் பத்திரம் வழங்கப்படும்.

இந்தத் திட்டம் ஓராண்டு காலத்திற்கு சிறப்புத் திட்டமாகச் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தின்மூலம், சுமார் 6,496 ஒதுக்கீடுதாரர்கள் பயன்பெறுவார்கள். இதனால், வாரியத்திற்கு சுமார் 92.39 கோடி ரூபாய் வருவாய் ஏற்படுவதுடன், இந்த சிறப்பு வட்டி சலுகையின் மூலம் ஒதுக்கீடுதாரர்களுக்கு 18.45 கோடி ரூபாய் தள்ளுபடியும் வழங்கப்படும்” இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்ற தள்ளுபடிஅறிவிப்புகளை அரசு இதற்கு முன்பும் வழங்கி உள்ளது. முன்னதாக தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் 2025-26 கொள்கைக் குறிப்பின்படி, ஏற்கெனவே செயல்படுத்தப்பட்ட வட்டித் தள்ளுபடித் திட்டத்தின் மூலம் 650 ஒதுக்கீடுதாரர்கள் ரூ.8.91 கோடி அளவுக்கு பயனடைந்திருக்கிறார்கள்.

அதேபோல் கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் 2015 மார்ச் முதல் 2023 செப்டம்பர் வரை ஒருமுறைத் தீர்வுத் திட்டம் செயல்படுத்தியது. இதன் மூலம் 18,944 பேருக்கு நிலுவை மற்றும் அபராத வட்டி தள்ளுபடி வழங்கப்பட்டு, ரூ.402.08 கோடி வசூலிக்கப்பட்டிருந்தது. ஒட்டுமொத்தமாக அப்போது ரூ.511.82 கோடி வட்டி தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வட்டி தள்ளுபடி திட்டம், 6,496 வீட்டுவசதி வாரிய ஒதுக்கீடுதாரர்களை உள்ளடக்கிய தனிப்பட்ட சிறப்புத் திட்டமாக இருக்கிறது. கடனை முழுமையாக அடைக்க முடியாமல் பல ஆண்டுகளாக வட்டி சுமையில் சிக்கியிருப்பவர்களுக்கு இது வரப்பிரசாதம் ஆகும். அரசு அறிவித்துள்ள ரூ.18.45 கோடி தள்ளுபடி என்பது ஒவ்வொரு பயனாளிக்கும் சராசரியாக ரூ.28,405 தள்ளுபடி கிடைக்கும். எனினும் தனிநபர் வாரியாகத் தள்ளுபடி வேறுபடும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *