`3 ஆண்டுகளுக்குப் பிறகு… சட்டமன்றத்தில் புதிய உதயம் தோன்றிய நாள்!' – ஆளுநர் அர்லேகர் பெருமிதம்

Spread the love

முந்தைய ஆட்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் திமுக- அரசுக்கும் இடையே இருந்த அதிருப்தி சூழல்களால், ‘ஆளுநர் உரை’ என்றாலே தமிழ்நாடு அரசியல் களம் உன்னிப்பாக கவனிக்கும். இந்த சூழலில் இன்று மாநிலப் பொறுப்பு ஆளுநர் அர்லேகர் உரையுடன் தவெக அரசின் முதல் சட்டமன்றக் கூட்டத் தொடர் தொடங்கியது. தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதத்துடன் தொடங்கிய ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சட்டமன்ற சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் வாசித்தார். ஆளுநர் உரையின் எந்தப் பகுதியும் புறக்கணிக்காமல், படிக்காமல் கடந்து செல்லவில்லை. இறுதியில் தேசிய கீதத்துடன் ஆளுநர் உரை முடிவடைந்தது. எனவே, சட்டமன்றக் கூட்டத்தொடரின் முதல்நாள், ஆளுநரின் எந்த அரசியலும் இல்லாமல் சுமுகமாக முடிந்திருக்கிறது.

ஆளுநர் உரை
ஆளுநர் உரை

இது தொடர்பா ஆளுநர் மாளிகையின் அதிகாரபூர்வ பக்கத்தில், ஆளுநர் ராஜேந்திர அர்லேகர், “தமிழ்நாடு சட்டமன்றத்தில் புதிய உதயம் தோன்றிய நாள் இன்று என்பதை மக்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஆளுநரின் முழு உரையும் எவ்வித இடையூறும் இன்றி, சட்டமன்றத்தில் இன்று வாசிக்கப் பெற்றது மன நிறைவைத் தருகிறது. மேலும், முதல் முறையாக சட்டசபையில் ஆளுநர் உரையின் தொடக்கத்திலும், ஆளுநர் உரையின் இறுதியிலும் தேசிய கீதம் பாடப்பட்ட சரித்திர நிகழ்வானது, மாநில அரசு மற்றும் மக்கள் மாளிகை இடையே இணக்கமான சூழல் நிலவ வேண்டும் என்ற தமிழக மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து, மக்களாட்சியின் மாண்பை நிலை நாட்டும் விதமாக அமைந்துள்ளது என்றால் அது மிகையல்ல.

ஜனநாயகத்தில் ஆளப்படும் ஆட்சியானது, ஒருங்கிணைந்த, இணக்கமான உறவை அனைத்து தரப்பிலும் நிலைநாட்டி, மக்களின் எதிர்பார்ப்புகளை, தேவைகளை பூர்த்தி செய்வதையே ஓர் நிலையான, முன்னுதாரணமான அரசானது தனது நோக்கமாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்ற இலக்கை நோக்கி நாம் அனைவரும் இணைந்து பயணிக்கத் தொடங்கியுள்ளோம் என்பது மனதுக்கு நிறைவைத் தருகிறது.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *