திருப்பரங்குன்றத்தில் கார்திகை தீபத்தன்று தீபம் ஏற்றப்படும், தைப்பூசம் மாநில விழாவாக கொண்டாடப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி 27 தொகுதிகளில் போட்டியிடுகின்றது.
இந்த நிலையில், சென்னை பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா இன்று காலை வெளியிட்டார். இந்த நிகழ்வில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மூத்த தலைவர்கள் தமிழிசை சௌந்தரராஜன், அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த தேர்தல் அறிக்கைக்கு ‘புதிய யுகம் படைக்கும் தாமரை வாக்குறுதி 2026’ என்ற பெயரிடப்பட்டுள்ளது.
* தே.ஜ.கூட்டணி ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 வழங்கப்படும்
* ஆண்டுக்கு 3 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல், தீபாவளி பண்டிகைகளுக்கு இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும்
* ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு முறை ரூ.10,000 வழங்கப்படும் .
* திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றப்படும் .
* தைப்பூசம் திருநாளை மாநில விழாவாக அறிவித்து கொண்டாடப்படும் .
* பெண்கள் இருசக்கர வாகனம் வாங்கரூ.25,000 மானியம் வழங்கப்படும் – .
* முதல் தலைமுறை இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ரூ.10 லட்சம் வரை கல்வி கடன் வழங்கப்படும்
* மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணியை விரைவுப்படுத்தி விரைந்து முடிப்போம்.
* போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்க, சிறப்பு போதைப்பொருள் தடுப்புப் படை பிரிவுடன் கூடிய ‘தமிழக போதைப்பொருள் ஒழிப்புத் துறை’ உருவாக்கப்படும். கடல்வழி கடத்தலைத் தடுக்க ‘கடலோர போதைப்பொருள் புலனாய்வுப் பிரிவு, துரித நடவடிக்கைக்காக பிரத்யேக உதவி எண், சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும். மேலும், மீண்டும் குற்றம் செய்வோர் மற்றும் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு NDPS சட்டத்தின் கீழ் மரண தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* ‘உழவே தலை’ திட்டத்தைத் தொடங்கி, பிஎம்-கிசான் நிதியுதவியுடன் மாநில அரசின் பங்காக ₹3,000 கூடுதலாக வழங்கி, ஆண்டுக்கு மொத்தம் ₹9,000 நிதியுதவி வழங்குவோம். மேலும், மாநிலக் கூட்டுறவு பருத்தி உற்பத்தியாளர்கள் சங்கம் அமைக்கப்பட்டு, 100 கி.மீ தொலைவிற்குள் பருத்தி அரைக்கும் ஆலைகள் (Ginning Mills) நிறுவப்படும். அத்துடன் மரவள்ளிக்கிழங்கு, தக்காளி, மாம்பழம், வாழை மற்றும் மிளகாய் ஆகிய பயிர்களுக்கு உறுதி அளிக்கப்பட்ட சந்தை ஆதரவு வழங்கப்படும்.
* தமிழக நாட்டுப்புறக் கலைகள் மற்றும் கோவில் மரபுகளைப் பாதுகாக்கும் வகையில், ‘திருக்கோவில் நித்ய பூஜை தொகுப்புத் திட்டம்’ செயல்படுத்தப்படும். இதன் மூலம் மாதந்தோறும் அத்தியாவசியப் பொருட்கள் (கற்பூரம், நெய்/எண்ணெய், 60 கிலோ அரிசி, குங்குமம், மஞ்சள், விபூதி), ஒருமுறை வழங்கப்படும். கோயில் உபகரணங்கள் (கோயில் மணி, தாம்பூலம், ஆர்த்தி தட்டுகள், வேட்டித் தொகுப்பு) மற்றும் கோவில் திருவிழாக்கள் மற்றும் பராமரிப்பிற்காக ஆண்டுக்கு ₹25,000 நிதியுதவி வழங்கப்படும்.
* ஒவ்வொரு மாவட்ட அரசு மருத்துவமனையையும் மேம்படுத்தும் வகையில், கூடுதல் 3 ஆம்புலன்ஸ்கள், உயர் சிறப்புப் பிரிவுகள் (Super-speciality wings), இலவச டயாலிசிஸ் மையங்கள், போதை மீட்பு மற்றும் மறுவாழ்வு மையங்கள், 4 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவுகள் (ICU), முழுமையாகச் செயல்படும் நவீன அறுவை சிகிச்சை அரங்குகள், முதியோர் நல மையங்கள், 10 படுக்கைகள் கொண்ட நவீன குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவுகள் (PICU) மற்றும் பிரத்யேகத் தாய்ப்பால் வங்கிகள் ஆகியவை அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
