கரூர் மாவட்டத்தில் வசிக்கும் எளிய விவசாயிகளிடமும் பொதுமக்களிடமும் 1967-ம் ஆண்டின் “இனாம் ஒழிப்புச் சட்டத்தின்’ கீழ் முறையாக வழங்கப்பட்ட ரயத்துவாரி பட்டாக்கள் உள்ளன. பல குடும்பங்களிடம் 100 முதல் 150 ஆண்டுகளுக்கும் மேலான அசல் பட்டா ஆவணங்கள் கைவசம் இருக்கின்றன. இந்த நிலங்களில் தலைமுறை தலைமுறையாக மக்கள் விவசாயம் செய்தும், வீடு கட்டி குடியிருந்தும் வருகின்றனர். இத்தகைய சூழலில், கடந்த காலங்களில் அறநிலையத்துறை அதிகாரிகள் தரப்பில், எவ்வித முறையான வருவாய் ஆவணங்களையும் சரிபார்க்காமல், தன்னிச்சையாகப் பதிவுத்துறைக்குக் கடிதம் வழங்கி மக்களின் நிலங்களைப் பதிவு செய்யத் தடை விதித்திருந்தனர். வருவாய்த்துறையின் அனுமதியின்றிச் செய்யப்பட்ட இந்தத் தவறான நடைமுறையால், கரூர் மக்கள் தங்களின் சொந்த நிலங்களை விற்கவோ, வாங்கவோ முடியாமல் கடுமையான மன உளைச்சலுக்கும் பொருளாதாரப் பாதிப்புகளுக்கும் உள்ளாகியிருந்தனர்.

மக்களின் இந்த நீண்ட காலத் துயரத்தைத் தீர்க்க, தற்போதைய அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டது. கரூரில் ஒரு சிறப்பு டி.ஆர்.ஓ மற்றும் பிரத்யேக வருவாய்க் குழு அமைக்கப்பட்டு, 1912 மற்றும் 1967-ம் ஆண்டு வரையிலான அனைத்து நில ஆவணங்களும் (Revenue Records) விரிவாக ஆய்வு செய்யப்பட்டன.
எந்த நிலம் கோயிலுக்குச் சொந்தமானது, எந்த நிலம் மக்களுக்குச் சொந்தமானது என்று சட்டப்பூர்வமாக அலசி ஆராயப்பட்டதில், முதற்கட்டமாக இந்த 3,084.95 ஏக்கர் நிலத்தில் ஒரு சென்ட் நிலம் கூட கோயில் நிலம் அல்ல என்பதும், அவை அனைத்தும் முழுக்க முழுக்க மக்களின் பட்டா நிலங்கள் என்பதும் உறுதி செய்யப்பட்டு, அதற்கான தடையாணைக் கடிதங்கள் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளன.