“48 மணி நேரத்தில் 20 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்…"- முதல்வர் விஜய்யை சாடும் நயினார் நாகேந்திரன்

Spread the love

தமிழ்நாட்டில் கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் 20 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்துள்ளதாக, பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கடந்த மாதம் 10-ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் புதிய அரசு பதவியேற்றது. முதல்வர் விஜய் ஆட்சியை வெற்றிகரமாக நடத்துவார் என்று மக்கள் எதிர்பார்த்த நிலையில், தற்போது நிலைமை முற்றிலும் தலைகீழாக மாறியுள்ளது. கடந்த கால தி.மு.க ஆட்சியில் பாலியல் குற்றங்கள் 125 சதவீதம் அதிகரித்திருந்த நிலையில், தற்போதைய தவெக ஆட்சியில் அது ஏற்கனவே 100 சதவீதத்தைத் தாண்டி மிக மோசமான நிலையை எட்டியுள்ளது.

முதலமைச்சர் விஜய்
முதலமைச்சர் விஜய்

கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் 20 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. இதில் 15 வழக்குகள் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தவிர, இதே குறுகிய காலத்திற்குள் 20-க்கும் மேற்பட்ட படுகொலைகளும், மொத்தம் 207 குற்றச் சம்பவங்களும் பதிவாகியுள்ளன. தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் கஞ்சா மற்றும் போதைப்பொருட்களின் புழக்கம் தடையின்றி அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

மேடைகளில் நரம்பு புடைக்கப் பேசும் முதல்வர் ஜோசப் விஜய் அவர்களே, பாதிக்கப்பட்ட அந்த மூன்று வயதுக் குழந்தைக்கும், கரம்பூரில் பாதிக்கப்பட்ட ஏழு வயது பள்ளி மாணவிக்கும் யார் பதில் சொல்லப் போகிறார்கள்? ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-க்களே நேரடியாக வந்து மிரட்டல் விடுக்கும் அளவிற்குத் தான் சட்டம்-ஒழுங்கு இருக்கிறதா?

மக்களைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் நிர்வாகம் செய்யும் த.வெ.க அரசு, இன்னும் எத்தனை நாட்களுக்குத் தாங்கப் போகிறது? மக்களுக்குப் பாதுகாப்பு வழங்கத் தவறிய இந்த ஆட்சி உடனடியாக அகற்றப்பட வேண்டிய ஆட்சி. சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட முதல்வர் விஜய் உடனடியாகத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *