`5 ரூபாய் எக்ஸ்ட்ரா கொடுத்தால்தான் சரக்கு’ – டாஸ்மாக் கடை பேடிஎம் மெஷினைத் தூக்கிக்கொண்டு ஓடிய இளைஞன் | young man runs off with a paytm machine from a tasmac shop

Spread the love

ராணிப்பேட்டை மாவட்டம், லாலாப்பேட்டை பகுதியில் அரசுக்குச் சொந்தமான டாஸ்மாக் மதுபானக் கடை (எண்: 13511) செயல்பட்டு வருகிறது. சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மதுப்பிரியர்கள் இங்கு வந்து மது வாங்கிச் செல்வது வழக்கம்.

நேற்று இரவு, மது வாங்குவதற்காக இளைஞர் ஒருவர் இந்தக் கடைக்கு வந்துள்ளார். அவர் குவார்ட்டர் மதுபாட்டில் கேட்டபோது, நிர்ணயிக்கப்பட்ட எம்.ஆர்.பி (MRP) விலையை விட கூடுதலாக 5 ரூபாய் தருமாறு விற்பனையாளர் கேட்டுள்ளார்.

`கூடுதல் விலை ஏன்?’ என அந்த இளைஞர் கேள்வி எழுப்பவே, இருவருக்கும் இடையே வாக்குவாதம் மூண்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆவேசமான விற்பனையாளர், `எம்.ஆர்.பி-யை விட 5 ரூபாய் மேல கொடுத்தால்தான் சரக்கு தர முடியும். தேவையில்லாம பிரச்னை பண்ணாம கிளம்பு’ என அதிகாரத் தொனியில் பேசியதாகக் கூறப்படுகிறது.

டாஸ்மாக் மதுபானக் கடை

டாஸ்மாக் மதுபானக் கடை

இதனால், உச்சகட்ட கோபமடைந்த அந்த இளைஞர், கவுன்டரில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்காக வைக்கப்பட்டிருந்த பேடிஎம் (Paytm) ஸ்வைப் மெஷினை லாவகமாகத் தூக்கிக்கொண்டு அங்கிருந்து சிட்டாகப் பறந்துவிட்டார். இதைச் சற்றும் எதிர்பாராத டாஸ்மாக் ஊழியர்கள், உடனடியாக சிப்காட் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்து புகார் அளித்தனர்.

இதற்கிடையே, மெஷினைத் தூக்கிச் சென்ற இளைஞர், அந்த வழியாக மது வாங்க கடைக்கு வந்துகொண்டிருந்த வடமாநில இளைஞர் ஒருவரிடம் அந்த பேடிஎம் மெஷினைக் கொடுத்து, கடையில் ஒப்படைக்குமாறு கூறி அனுப்பி வைத்துள்ளார்.

இந்தச் சம்பவத்தால் சிறிது நேரம் டிஜிட்டல் பேமெண்ட் முறையில் பணம் செலுத்த முடியாமல் மதுப்பிரியர்கள் காத்திருக்க நேரிட்டதுடன், விற்பனையும் பாதிக்கப்பட்டது. தற்போது, இந்தத் துணிகரச் செயலில் ஈடுபட்ட இளைஞரை சிப்காட் போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *