"தவெக கட்சி ‘அரசியல் பிணி’ மட்டுமல்ல; அது ஒரு ‘சமூகப் பிணி’ "- ஸ்டாலின் விமர்சனம்

Spread the love

அண்ணா அறிவாலயத்தில் நேற்று (நவ.22) குடிஅரசு இதழ் முழுத்தொகுப்பை வெளியிட்டார் திமுக தலைவர் ஸ்டாலின்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், “நம்முடைய ஆட்சியில், தமிழ்நாட்டு மக்களுக்குப் பணவீக்கத்தின் பாதிப்பே தெரியாத நிலை இருந்தது. ஆனால் இன்றைக்கு, வெங்காயம் தக்காளிகூட வாங்க முடியாத அளவுக்கு விலைவாசி ஏறிப்போய்விட்டது.

சாப்பிடாமல் இருந்தால்தான் மயக்கம் வரும் என்று நினைத்தால், இன்றைக்கு அரிசி விலையைக் கேட்டாலே மயக்கம் வருகிறது.

திமுக தலைவர் ஸ்டாலின்

இதைப் பற்றியெல்லாம் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுகிற மாதிரி முதலமைச்சர் வாயைத் திறந்து எதுவும் பேசுகிறாரா, இல்லை! இது மட்டுமா? கர்நாடக முதலமைச்சர் – தமிழ்நாட்டின் உரிமையை மதிக்காமல், “மேகதாது அணையைக் கட்டியே தீருவோம்” என்று சவால் விடுகிறார்.

அதைக் கண்டிக்காத நம்முடைய முதலமைச்சர் என்ன செய்கிறார் தெரியுமா? மாநில உரிமைகளை நிலைநாட்ட, நீதியரசர் குரியன் ஜோசப் – அசோக் வரதன் ஷெட்டி IAS – பேராசிரியர் நாகநாதன் ஆகியோரைக் கொண்டு நாம் அமைத்த ஒரு குழுவை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு கலைத்துவிட்டார். இந்தியா முழுக்க ஊடகங்கள் இதை விமர்சிக்கிறார்கள். அந்தச் செய்தியெல்லாம், இந்த முதலமைச்சருக்குத் தெரிந்திருக்குமா என்று கூட நமக்குத் தெரியவில்லை.

“ஆறே மாசம் – எல்லாமே நாசம்” என்று சொல்கிற மாதிரிதான் த.வெ.க. ஆட்சி நடக்கிறது. த.வெ.க என்ற கட்சி, ‘அரசியல் பிணி’ மட்டுமல்ல; அது ஒரு ‘சமூகப் பிணி’! அதை எதிர்த்து, அரசியல் களத்தில் நாங்கள் போராடுகிற மாதிரி, உங்களைப் போன்ற கருஞ்சட்டைப் படை, பிரசாரக் களத்தில் முன்னின்று, மக்களுக்கு இதனுடைய தீமைகளைப் புரியவைக்க வேண்டும். நம் முன் இருக்கும் கடமையெல்லாம், ஏற்கெனவே தந்தை பெரியார் சொன்னதுதான்… “தமிழா! விழிப்புணர்வு கொள்” என்று தட்டியெழுப்ப வேண்டும்! “தமிழா! இனஉணர்வு கொள்” என்று விழித்தெழ வைக்க வேண்டும்!

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

“மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு” என்பதை மீண்டும் வலியுறுத்த வேண்டும்! இதை வரலாற்றுக் கடமையாக நினைத்து நாம் செய்ய வேண்டும். மாபெரும் தலைவர்கள், சமூகச் சீர்திருத்தவாதிகள் போராடி உருவாக்கிய இந்த நவீன தமிழ்நாட்டை யாரும் நாசமாக்கிவிடாமல், நாம்தான் காக்க வேண்டும். அதற்கான அறிவாயுதம்தான், குடிஅரசு இதழ் தொகுப்பு!

அந்த அறிவாயுதத்தை, அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்கிற நிகழ்வுதான் இந்த நிகழ்ச்சி! பெரியார் ஏந்திய அறிவாயுதத்தை, தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம்! பகுத்தறிவை வளர்ப்போம்! சுயமரியாதையைக் காப்போம்! சமூகநீதியை நிலைநாட்டுவோம்! நவீன தமிழ்நாட்டை இன்னும் உயர்த்துவோம்! அதற்கு இந்த விழாவின் மூலம் உறுதியேற்போம்” என்று பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *