
சட்டப்பேரவைத் தேர்தலில் முதலமைச்சர் விஜய், சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், பெரம்பூர் தொகுதியில் விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து, அந்தத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். இதேபோல், வாக்காளர்கள் தினேஷ் மற்றும் லட்சுமி நரசிம்மன் ஆகியோரும் விஜய்யின் வெற்றியை எதிர்த்து தேர்தல் வழக்குகளை தாக்கல் செய்தனர்.
மேலும், திருச்சி கிழக்கு தொகுதியில் முதலமைச்சர் விஜய்யின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி, திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த தேர்தல் வழக்குகள் அனைத்தும் நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்னிலையில் விசாரணையில் உள்ளன. இந்த வழக்குகள் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் முதலமைச்சர் விஜய் ஆகியோர் பதிலளிக்க நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்குகள் இன்று காலை மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, முதலமைச்சர் விஜய் தரப்பில் இதுவரை பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து, ஆகஸ்ட் 27-ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யாவிட்டால் ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும் என முதலமைச்சர் விஜய் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனிடையே, தனக்கு எதிராக தொடரப்பட்ட தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரிய ஆதவ் அர்ஜுனா தரப்புக்கும் சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி மனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் கோரப்பட்ட நிலையில், உரிய காலத்திற்குள் மனு தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் விஜய் மற்றும் ஆதவ் அர்ஜுனா தொடர்பான தேர்தல் வழக்குகளின் அடுத்தகட்ட விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.