பிரிட்டன் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு எம்.பி. ரூபர்ட் லோவ் வெளியிட்டுள்ள ஒரு `பாலியல் கூட்டு வன்கொடுமை அறிக்கை’ ஒட்டுமொத்த உலகையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. பிரிட்டனில் உள்ள டெல்ஃபோர்ட் நகரில், பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு பாலியல் குற்ற கும்பல் அங்கிருந்த இளம் பெண்களை மிகக் கொடூரமான முறையில் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியுள்ளதாக அவர் நாடாளுமன்றத்தில் ஆதாரங்களுடன் பேசியுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்களின் வாக்குமூலங்களை அவர் வாசித்தபோது, அங்கிருந்த ஒட்டுமொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாயடைத்துப் போயினர்.
பாதிக்கப்பட்ட பெண்களின் வாக்குமூலங்கள் பார்ப்பவர்களின் நெஞ்சை உலுக்குபவையாக உள்ளன. ஒரு பெண் தனது வாக்குமூலத்தில், “நான் சுமார் 600 முதல் 700 ஆண்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டேன், அதுமட்டுமல்லாமல் விலங்குகளை வைத்தும் அவர்கள் என்னை வன்கொடுமை செய்தனர்” என்று குறிப்பிட்டிருந்ததை அவர் நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

மேலும் பல பெண்கள் தங்களுக்கு நேர்ந்த இத்தகைய மிக மோசமான பாலியல் கொடுமைகளையும், சித்திரவதைகளையும் தங்களின் வாக்குமூலங்களில் கண்ணீருடன் பதிவு செய்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் மிகவும் அதிர்ச்சியளிக்கும் விஷயம் என்னவென்றால், பாதிக்கப்பட்ட பெண்கள் காவல்துறையிடமும், உள்ளூர் அதிகாரிகளிடமும் முறையிட்டும் எந்த ஒரு பயனும் கிடைக்கவில்லை என்பதாகும்.
இவ்வளவு பெரிய குற்றங்கள் நடந்தும், இனப் பிரச்னை அல்லது மதப் பிரச்சனை வந்துவிடுமோ என்ற அச்சத்தினால் பிரிட்டன் அதிகாரிகள் மற்றும் போலீசார் இந்தக் குற்ற கும்பல் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல், இந்த விவகாரத்தை மூடி மறைக்க முயன்றுள்ளதாக எம்.பி. ரூபர்ட் லோவ் குற்றம் சாட்டியுள்ளார்.

இனமோ மதமோ குற்றவாளிகளுக்கு பாதுகாப்பாக இருக்கக் கூடாது என்று ஆவேசமாகப் பேசிய எம்பி ரூபர்ட் லோவ், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு முறையான நீதி வழங்க வேண்டும் என்றும், குற்றவாளிகளை உடனடியாக அந்த நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில், இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் மனித உரிமை மற்றும் பாதுகாப்பு குறித்துப் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.