இன்று 27-ம் தேதி கோவில்பட்டியில் தனியார் காய்கறிச்சந்தையில் உருவகேலி செய்த சுமைதூக்கும் தொழிலாளியை சக தொழிலாளியே கோடரியால் தாக்கி கொலைசெய்தார். இப்படியாக 7 நாள்களில் 7 கொலைச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. இது குறித்து மாவட்ட எஸ்.பி., சிவபிரசாத்திடம் பேசினோம், “தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் 7 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த கொலைச் சம்பவங்கள் சிவில் பிரச்னைகள், மதுபோதையில் ஏற்பட்ட தகராறுகள், தனிப்பட்ட முன்விரோதங்கள் காரணமாகவே நடைபெற்றுள்ளன. கடந்த 2025-ம் ஆண்டு அக்டோபர் 26-ம் தேதி வரை மாவட்டத்தில் 65 கொலை வழக்குகள் பதிவாகி இருந்தன. நிகழாண்டில் இதே கால கட்டத்தில் 59 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதன் மூலம் கடந்த ஆண்டைக் காட்டிலும் 6 கொலை வழக்குகள் குறைந்துள்ளது.

இது 9.2 சதவிகிதம் குறைவாகும். கொலைச் சம்பவங்களைத் தடுக்க காவல்துறை ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கிராமங்களில் மக்கள் பிரச்னைகளைக் கேட்டறிந்து நடவடிக்கை எடுப்பதுடன் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கல்லூரி மாணவர் கொலை வழக்கில் 6 மணி நேரத்திற்குள் 4 குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடந்த 6 மாதங்களில் மாவட்டத்தில் ரெளடிகள் கொலை, சாதியக் கொலை போன்றவை நிகழவில்லை. கஞ்சா வழக்குகள் தொடர்பான ரெளடிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாகத் தேடி வருகிறோம். சிங்கப்பெண் படையினர் போக்சோ உள்ளிட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பள்ளி, கல்லூரிகளில் தொடர்ந்து நிகழ்த்தி வருகின்றனர்” என்றார்.