''717 மதுபான கடைகள் மூடப்பட்டதால் அரசுக்கு ரூ. 11 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு'' – அமைச்சர் விக்னேஷ்

Spread the love

திண்டுக்கல் மாநகராட்சி காமராஜர் பேருந்து நிலையம், திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அங்கு இயங்கி வரும் அம்மா உணவகம் ஆகியவற்றை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் ஆய்வு செய்தார்.

பின் அமைச்சர் விக்னேஷ் செய்தியாளர்களைச் சந்தித்து பேசும்போது, “எனது அப்பா அம்மாவின் வீடான திண்டுக்கல் மாவட்டம், எதிர்காலத்தில் அனைவரும் பார்த்து ஆச்சரியப்படும் வகையில் மிகப்பெரிய வளர்ச்சியை அடைய வேண்டும் என்பதே எனது இலக்கு.

குறிப்பாக, அடிப்படைத் தேவைகளான தூய்மைக்கு முதலிடம் அளிக்கப்பட்டு, அனைத்துப் பகுதிகளும் சுத்தமாகப் பராமரிக்கப்பட வேண்டும்.

திண்டுக்கல் பேருந்து நிலையத்திற்குச் சென்றபோது, பொதுக் கழிப்பிடங்கள் மிகவும் மோசமான நிலையில், மக்கள் அருகில் கூட நெருங்க முடியாத அளவிற்கு அசுத்தமாக இருந்தது.  இதுதொடர்பாக அங்கிருந்த அதிகாரிகளிடம் உடனடியாகப் பேசி நாளைக்குள்ளாக இதனைச் சுத்தம் செய்ய வேண்டும், நான் மீண்டும் வந்து பார்ப்பேன் எனத் தெரிவித்துள்ளேன்.

திண்டுக்கல் அரசு மருத்துவமனையை மற்ற பகுதிகளைக் காட்டிலும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையின் கட்டமைப்பு ஓரளவுக்குக் குறை சொல்ல முடியாதபடி பரவாயில்லை.

இனி வரும் நாள்களில் ஒவ்வொரு பகுதிகளுக்கும் நேரில் செல்லவிருக்கிறேன். குறிப்பாக, பேருந்து நிலையத்தை வேறொரு இடத்திற்கு மாற்றுவதற்காகச் சொல்லப்பட்ட இடம் சரியாக இருக்குமா? என்பதை ஒருமுறை சரிபார்க்க வேண்டியுள்ளது.

அமைச்சர் விக்னேஷ்
அமைச்சர் விக்னேஷ்

திண்டுக்கல் பேருந்து நிலையத்தை மேம்படுத்துவது ஒரு பெரிய சவாலான விஷயம், தற்காலிகத் தீர்வுகள் இன்றி, அடிப்படையிலிருந்து இந்த ஒட்டுமொத்த முறையையும் மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதற்கான பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும்.

தற்போதைய புகாருக்குள்ளான மதுபானக் கூடங்கள் அனைத்தும் கடந்த ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்டவை. மக்கள் நடமாட்டம் மிகுந்த மற்றும் கல்வி நிறுவனங்கள் உள்ள பகுதியில் இத்தகைய பார்கள் செயல்படுவது தவறான விஷயம் என்பது பொதுமக்களுக்கே தெரியும் போது, அதிகாரிகளுக்கும் இது தெரிந்திருக்கும். விதிகளுக்குப் புறம்பாக இதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்கும் தண்டனைக்கு உரியது.

முதற்கட்டமாக, அரசுக்கு வரவேண்டிய வருமானம் முழுமையாக அரசின் கஜானாவிற்குச் செல்வதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு, அதில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளோம். அடுத்த கட்டமாக, மதுபாட்டில்களுக்குக் கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்படும் விவகாரம் மற்றும் எம்.ஆர்.பி விலையைத் தாண்டி தனிநபர்களுக்குச் செல்லும் தொகை குறித்த பல ஆண்டுகாலப் பிரச்னைக்கு, வரும் சட்டமன்றக் கூட்டத்தொடருக்குள் உரிய தீர்வு எட்டப்படும். இதற்காக ஒட்டுமொத்த துறையும் தீவிரமாகப் பணியாற்றி வருகிறது.

திண்டுக்கல் பேருந்து நிலையம்
திண்டுக்கல் பேருந்து நிலையம்

அரசு மருத்துவமனைகள், கோவில்கள் மற்றும் பேருந்து நிலையங்களின் அருகில் உள்ள மதுக்கடைகளின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைக்க வேண்டும் என்பது முதலமைச்சரின் உத்தரவு.

ஏற்கனவே 717 மதுக்கடைகள் முழுமையாக மூடப்பட்டு இரண்டு மூன்று நாள்கள் ஆகியுள்ள நிலையில், அதனால் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் பிரச்னைகளை அரசு உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.

திண்டுக்கல் எஃப் எல் 2 பார்களில் விதிகளை மீறி உறுப்பினர் அல்லாதவர்கள் அனுமதிக்கப்படுவது மற்றும் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்கப்படுவது போன்ற புகார்கள் குறித்து உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, அதன் அடிப்படையில் அரசு அடுத்தகட்டமாகத் தகுந்த கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும்.

தமிழகத்தில் மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளுக்கு அருகே உள்ள 717 கடைகள் மூடப்பட்டுள்ளது. இந்த 717 கடைகளும் ஏதோ ஊருக்கு வெளியில் இருப்பவையோ, வியாபாரம் ஆகாதவையோ அல்லது பார் வசதி இல்லாதவையோ, கணக்குக் காட்டுவதற்காகவோ இவை மூடப்படவில்லை

நாளொன்றுக்கு 5 லட்சம் ரூபாய் முதல் அதிகபட்சமாக 25 லட்சம் ரூபாய் வரை வர்த்தகம் நடைபெறும் கடைகள் கூட, மக்களுக்கு இடையூறாக இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக எந்தவித பாரபட்சமும் இன்றி மூடப்பட்டுள்ளன.

இவ்வளவு கடைகளை உடனடியாக மூடியதால் அரசுக்கு ஆண்டுக்கு சுமார் 8,000 கோடியில் இருந்து 11,000 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்படும்.

மதுபான கிளப்புகள்…

இந்த இழப்பைச் சரிசெய்ய அடுத்தடுத்த துறைகள் மூலம் வருமானத்தைப் பெருக்குவதற்கான பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன. அந்தத் துறைகள் மூலமாக வருவாய் ஈட்டப்பட்டவுடன், மக்கள் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் அவர்களுக்கு இடையூறாக உள்ள மீதமுள்ள பழைய கடைகளும் இதே முறையில் தொடர்ந்து மூடப்படும்.

நிலைமையை அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. மதுபானக் கடைகளை தனியாருக்கு டெண்டர் விடுவது குறித்து இதுவரை தமிழக அரசு எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை. ஊடகங்களில் இது தொடர்பாக வெளியாகும் செய்திகளைத் நானும் கவனித்து வருகிறேன்.

ஒருவேளை அப்படி தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டால் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பது குறித்து மட்டுமே கவனிக்கப்பட்டு வருகிறதே தவிர, இதுபற்றி இறுதி முடிவு எதுவுமே எடுக்கப்படவில்லை” எனத் தெரிவித்தார்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *