India
oi-Halley Karthik
பாட்னா: பீகாரில் நவராத்திரி விழாவின்போது, தொடர்ந்து 9 நாட்கள் தனது நெஞ்சின் மீது மண்பாண்டத்தை வைத்து.. கடுமையான விரதம் இருந்த 35 வயது பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பீகார் மாநிலம் சுபால் மாவட்டத்தில் உள்ள திரிவேணி கஞ்சி நகர், பரிஷத் பகுதியைச் சேர்ந்த 35 வயதான சசிதா தேவி என்ற பெண், நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு இந்த வினோத வழிபாட்டை மேற்கொண்டுள்ளார்.

அக்டோபர் 20ஆம் தேதி செவ்வாய்க்கிழமையன்று இந்த ஒன்பது நாள் சடங்கு நிறைவடைந்ததைத் தொடர்ந்து.. அவர் வீட்டிற்கு திரும்பியுள்ளார். வீட்டிற்கு வந்ததும் அவருக்கு கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனே குடும்பத்தினர் அவரை திரிவேணி கஞ்ச் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், புதன்கிழமை காலை அவரை பரிசோதித்த மருத்துவர்கள்.. அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறிவிட்டனர்.
அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் கூறுகையில், 9 நாட்கள் தொடர்ச்சியாக படுத்த படுக்கையாக இருந்ததால்.. கடுமையான நீர்ச்சத்து குறைபாடு மற்றும் ஏற்கனவே இருந்த இதய நோய் பாதிப்பு ஆகியவை, அவரது மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் என தெரிவித்துள்ளனர். இருப்பினும் முறையான விசாரணைக்கு பிறகு துல்லியமான காரணம் தெரியவரும் என்றும் கூறியுள்ளனர்.
உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர், இது குறித்து எந்த வித புகாரையும் அளிக்கவில்லை. உடற்கூறாய்வுக்கும் மறுத்துவிட்டதாகவும் உள்ளூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் திலீப்குமார் தெரிவித்துள்ளார்.
என்னதான் பக்தி இருந்தாலும்.. அதன் பெயரில் உடலை வருத்திக்கொண்டு, போதிய நீர் மற்றும் உணவின்றி நீண்ட நாட்கள் அசையாமல் இருக்கும் இந்த மாதிரியான ஆபத்தான சடங்குகள் உயிரை பறிக்கும் நிலைக்கு கொண்டு செல்லும், என்பதை இந்த சம்பவம் உணர்த்தி இருக்கிறது. நாமும், நம்மை சுற்றி இருப்பவர்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதுதான் வழிபாட்டின் நோக்கம். ஆனால், அந்த வழிபாடு சோகத்தை ஏற்படுத்து விடக்கூடாது என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.