தொடங்கும்போதே ’பிளானெட் எர்த்’ போன்ற ஒரு டிஸ்கவரி சேனல் டாக்குமெண்டரிக்குள் நுழைந்துவிட்டோமோ என்பதான ஒரு பிரமிப்பை ஏற்படுத்துகிறது படம்.
வாழா என் வாழ்வை வாழவே
தாழாமல் மேலே போகிறேன்
தீரா உள்ளூற்றைத் தீண்டவே
இன்றே இங்கே மீள்கிறேன்
இங்கே இன்றே ஆள்கிறேன்
அதைப் பார்க்கப் பார்க்க, ’பாதை இல்லாமலே அழகாய்க் காற்றோடு போகும் வல்லூறை’ப் போலவே போக வேண்டும் எனும் ஆசையைத் தூண்டுகிறது அந்தத் தொடக்கப்பாடல். இயற்கையின் பேரழகு, வாழ்வைக் காதலிக்கும் கவிதை வரிகள், மயக்கும் இசை என பாடல் முடியும் போது, அதிலிருந்து வெளியேறி படத்துக்குள் போகவே நமக்கு விருப்பமில்லை. அப்படியான ஒரு தாக்கத்தைக் கொடுத்தது அந்தப் பாடல். தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தையைத் தாயிடமிருந்து பிரித்தெடுத்து தந்தை கைக்கொள்ளும்போது எழும் சிணுங்கலைப் போன்ற உணர்வோடுதான் படத்துக்குள்ளேயே நாம் போகிறோம்.
டிராவல் புகைப்படக்காரனான ராம், அதன் ஒரு பகுதியாக சுற்றிக் கொண்டிருக்கும்போது அவனது சொந்த ஊரான தஞ்சாவூரைத் தற்செயலாகக் கடக்க நேர்கிறது. பழைய நினைவுகளின் தாக்கத்தால் சிறு குழந்தையாகிப் போகிறான். பள்ளிக்கூடம் அவனுக்குள், பள்ளி நண்பர்களைச் சந்திக்கும் ஆவலைத் தருகிறது. போனில் பேசுகிறான். அதன் தொடர்ச்சியாக நண்பர்களோடு ஒரு ரீயூனியன் சந்திப்புக்கு ஏற்பாடாகிறது. அதன் பிறகுதான் நமக்கு ஒரு தகவல் தரப்படுகிறது.

ராமுக்குப் பள்ளிக் காலத்தில் ஒரு தீவிரமான காதல் இருந்திருக்கிறது என! அதைப்போலவே, சந்திப்புக்கு வந்த பிறகுதான், ராமுக்கும் சொல்லப்படுகிறது ஒரு செய்தி. இப்போது சிங்கப்பூரில் வாழும் அவனது பழைய காதலியான ஜானுவும் அந்தச் சந்திப்புக்கு வரவிருக்கிறாள் எனும் தகவல்தான் அது! தன்னைப் போலவே ராமும் கல்யாணம், குழந்தை என்று செட்டிலாகியிருப்பான் எனும் நினைப்பில் வரும் ஜானுவுக்கு, அது அப்படியல்ல எனும் விரும்பத்தகாத செய்தி காத்திருக்கிறது. இருவரும் பல்லாண்டுகளுக்குப் பிறகு சந்திக்கிறார்கள். அதன் பின் என்னவாயிற்று, அவர்களுக்குள் பேசிக்கொள்ள அப்படி என்னதான் இருந்தது என்பது கதை!
ராம் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி பிரமிப்பூட்டினார். இப்படி ஓர் அழகான கதாபாத்திரம் ஒரு நடிகனுக்கு அமைவது வாழ்நாள் சந்தர்ப்பம். அதைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு பெருமளவு ரசிகர்களை தனதாக்கிக்கொண்டார். ஜானுவாக திரிஷா நம் மனங்களில் நிறைந்தார். திரிஷா அவரது மிக நீண்ட கேரியரில், பல அற்புதமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அவற்றுள் ஜானுவுக்கென்று தனித்துவமான இடம் நிச்சயம் இருக்கும்.

இரண்டு காதலர்களுக்கு இடையே சிக்கிக்கொண்டு அவஸ்தைப் படும் கியூட்டான சுபா கதாபாத்திரத்தில் தேவதர்ஷினி நடித்திருந்தார். புகைப்பட வகுப்பு மாணவி பிரபாவாக வர்ஷா பொல்லம்மா நடித்திருந்தார். புகைப்பட வகுப்புக்கு நடுவே, உணவு இடைவேளையின் போது பொல்லம்மா, விஜய் சேதுபதியைக் கண்கள் கொள்ளாமல் ரசிக்கும் காட்சியில், நாம் அவரை கண்கள் கொள்ளாமல் ரசிக்கிறோம்.
ராமின் சின்ன வயது பாத்திரத்தில், நடிகர் எம்.எஸ்.பாஸ்கரின் மகன் ஆதித்யா பாஸ்கரும், சின்ன வயது ஜானுவாக கௌரி கிஷனும் பிரமாதமாக நடித்திருந்தார்கள். அவர்களுக்கும் குறிப்பிடத்தகுந்த அளவில் திரைநேரமும், வாய்ப்பும் இருந்தன. பள்ளிக் காலத்தின் காட்சிகளில் இருவரும் நம்மை நெகிழ்த்தினார்கள். சின்ன வயது சுபாவாக, நடிகை தேவதர்ஷினியின் மகளான நியாதி, அம்மாவின் சாயலில் கதாபாத்திரத்துக்கு மிகப்பொருத்தமாக அமைந்திருந்தார். நண்பர்களாக பகவதி பெருமாள், ஆடுகளம் முருகதாஸ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இன்னும் கேமியோ தோற்றங்களில் ஜனகராஜ், கவிதாலயா கிருஷ்ணன் ஆகியோரும் நடித்திருந்தார்கள்.

இசை கோவிந்த் வசந்தா. பின்னணி இசையும், பாடல்களும் 96 படத்தை மியூசிகல் ரொமாண்டிக் ஜானரில், தமிழின் முக்கியமான படங்கள் வரிசையில் கொண்டு போய் வைத்தன. பள்ளிக் காலத்துக்குப் பிறகு தாங்கள் முற்றிலும் பிரிந்துபோய்விட்டதாக நினைக்கிறாள் ஜானு. ராம் தன் திருமணத்துக்கு வந்து, அதைத் தடுத்து, தன்னை அழைத்துக்கொண்டு போய்விடமாட்டானா என்றெல்லாம் கற்பனை செய்து கொண்டிருந்திருக்கிறாள். ஆனால், 20 ஆண்டுகள் கழிந்த ஓர் இரவு நேரத்தில் நிஜமாகவே ராம் அவள் கல்யாணத்துக்கு வந்ததாகச் சொல்கிறான். கூட்டத்தில் நின்று கொண்டிருந்ததாகச் சொல்கிறான்.
அந்த மங்கல இசை தன் காதில் விழாத தொலைவை நோக்கி ஓடத் தொடங்கியதாகச் சொல்கிறான். அப்போது வரும் பின்னணி இசையால், ஜானுவோடு சேர்ந்து நாமும் நொறுங்கிப் போகிறோம். ’வாழா என் வாழ்வை’, ‘ஏன் ஏதும் கூறாமலே’, ’காதலே காதலே’, ’அந்தாதி’ ஆகிய பாடல்களை கார்த்திக் நேத்தாவும், ’வசந்த காலங்கள்’, ’தாபங்களே’, ’இரவிங்கு தீயாய்’ ஆகிய பாடல்களை உமா தேவியும் எழுதியிருந்தனர். பெரும்பாலான பாடல்களை சின்மயி, பிரதீப்குமார், கோவிந்த் வசந்தா உள்ளிட்டோர் பாடியிருந்தனர். இளையராஜாவின் இசையில், எஸ்.ஜானகி பாடிய பாடல்கள் சில, ஜானகியின் ரசிகையான ஜானு பாடுவதாக காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. அந்தத் துணுக்குகளும்கூட நம்மை மயக்கின.

படத்தின் ஒளிப்பதிவைச் செய்தவர்கள் மகேந்திரன் ஜெயராஜு, என்.சண்முகசுந்தரம் ஆகியோர். இயல்பிலேயே இயக்குநர் சி. பிரேம்குமாரும் ஓர் ஒளிப்பதிவாளர் என்பதால், அவரோடு இணைந்து ஒவ்வொரு காட்சியையும் ஓர் ஓவியத்தின் அழகியலோடு செதுக்கியிருந்தார்கள் இவர்கள்.
படத்தைத் தயாரித்திருந்தது மெட்ராஸ் எண்டர்ப்ரைஸஸ் சார்பில் எஸ் நந்தகோபால். கதை, திரைக்கதையை எழுதி இயக்கியிருந்தவர் சி. பிரேம்குமார். பசங்க, நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம் போன்ற படங்களின் ஒளிப்பதிவாளரான சி. பிரேம்குமாருக்கு இயக்குநராக இது முதல் படம். முதல் படத்திலேயே மெல்லிய உணர்வுகளை, அதன் தன்மை சிதையாது படமாக்குவதில் தான் ஒரு நிபுணர் என்பதை நிரூபித்தார்.
ஜானு உடல்நலமின்றி எடுத்துக்கொண்ட சில நாட்கள் விடுப்புக்குப் பின் வகுப்புக்குத் திரும்புகிறாள். எல்லோரும் அவளை நலம் விசாரிக்கிறார்கள். ராம் அப்போதிருந்துதான் தன்னியல்போடு அவளிடம் பேச முடியாமல் பெரும் தவிப்புக்கு ஆளாகிறான். ஆனால், அனைவரும் அமைதியான பிறகு, ஜானு அவளது இருக்கையிலிருந்து, ராமைத் திரும்பிப் பார்க்கிறாள். போலவே, நண்பர்கள் கெமிஸ்ட்ரி லேபில் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்கிறார்கள். அப்போதும் பேச வார்த்தைகளின்றித் தவிக்கிறான்.
ஜானுவின் பிறந்த நாளின் போது சாக்லெட் கொடுப்பதற்காக நண்பர்கள் ராமைப் பிடித்துக்கொண்டு நிற்க, அவனருகே சென்று சின்னதாக டீஸ் செய்கிறாள் ஜானு. ஒரு ’ஹேப்பி பர்த் டே’ வைச் சொல்வதற்குள் வியர்த்துப் போகிறது அவனுக்கு. ’இப்போ வியர்த்துக்கொட்டுகிற அளவுக்கு உன்னை யார் என்ன பண்ணினா?’ என்று கேட்டு ’தக் தக்’ என்று அடித்துக்கொள்ளும் அவனது மார்பில் கைவைத்துப் பார்க்கிறாள். அவள் கை பட்டதும் நினைவிழந்துச் சரிகிறான் ராம்.
’மயங்குற அளவுக்கு அப்படி ஜானுகிட்ட என்னத்தைக் கண்டேன்னு சுபாவுக்குத் தெரியல. நம்ம மேல இவ்வளவு உயிரா இருக்குற அளவுக்கு நாம என்ன பண்ணிட்டோம்னு ஜானுவுக்கும் தெரியல’ என்கிறது ராமின் குரல்.
இந்தக் காட்சியும், வசனமும் ஒருவேளை கிரிஞ்சாக சிலருக்குத் தோன்றலாம். ஆனால், காலமும் சமூகமும் மனிதனின் உணர்வுகளுக்குள் பெரும் ஆளுமையைச் செலுத்துகிறது. அந்தக் காலகட்டத்தின், அந்த வயதின் உணர்வுகளை நம்மால் அப்படியே உள்வாங்கிக் கொள்வது சமயங்களில் ஆகிற காரியமில்லை.

அந்த வகையில் இந்த ’96’ படம், ரசிகர்களை மிகப்பெரிய அளவில் இரண்டாகப் பிரித்தது. ஒரு பிரிவினருக்கு இந்த படம், அவர்களது முதல் காதலையும், முதல் காதலியையும் நினைவுபடுத்தியது. அவர்கள் படத்தைக் கொண்டாடினார்கள். எழுத்தாளர் சி. சரவண கார்த்திகேயன் இந்தப் படத்தைப் புகழ்ந்து தொடர் கட்டுரைகளை எழுதி, அது ஒரு தனி புத்தகமாகவே வெளியானது. ஒரு சினிமாவைப் பாராட்டி தமிழில் இப்படி ஒரு புத்தகமே எழுதப்பட்டது, இதுவே முதன் முறையாகவும் இருக்கலாம். ஆனால், இன்னொரு பிரிவினருக்கு இந்தப் படம் பிடிக்கவில்லை. ஜானுவின் தொடுகைக்கெல்லாம் மயக்கம் போட்ட ராமை கிரிஞ்சாகப் பார்த்தார்கள். வாழ்க்கையில் எந்தப் பிரச்னை வந்தாலும் மூவ் ஆன் ஆக வேண்டும் என்பதாகவும், ராம் அவனது காதலின் தோல்வியிலிருந்து மூவ் ஆன் ஆகவே இல்லை என்றும் கருதினார்கள். அவன் காலம் முழுதும் அந்தக் காதலுடனேயே தனிமையில் வாழும் வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தது, அவர்களுக்கு முதிர்ச்சியற்ற ஒரு செயலாகத் தோன்றியது. ஆனால், காதலும் முதிர்ச்சியும் எப்போதும் ஒரே அளவுகோலில் இயங்குவதில்லை.
காதலை எந்த வரையறைக்குள்ளும் நாம் அடைத்துவிட முடியாது. அது ஒவ்வொருவருக்குள்ளும் தனித்துவமாகச் செயலாற்றுகிறது. ராம், ஜானு இல்லாத தன் வாழ்க்கையைத் தனியே வாழ்ந்து கழித்துவிட நினைக்கிறான். அது அவனது முடிவு. சிலரது பார்வையில் அது தவறாகத் தோன்றலாம். ஜானுவைப் போலவே அவன் மூவ் ஆன் ஆகி, இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றும் விரும்பலாம். அவன் எதையோ இழந்துவிட்டதாகக் கருதலாம். ஆனால், உண்மையில் நாமெல்லாம் இழந்துவிட்ட ஏதோ ஒன்றைப் பத்திரமாகக் கைக்குள் பொத்தி வைத்துக் கொண்டிருக்கிறான் ராம்! அதுவே அவனைத் தனித்துவமானவனாக ஆக்குகிறது.

அந்த மாணவர் சந்திப்புக்கு வரும் போது ஜானுவுக்குள் இருந்தது அன்பின் மிகுதியால் வெளிப்படும் ஒரு மெல்லிய கோபம். ’காலம் முழுதும் உன்னைக் காதலித்துக்கொண்டு உன் நினைப்பில் இருந்திருக்கிறேன் நான். ஆனால், சொல்லாமல் கொள்ளாமல் என் வாழ்க்கையிலிருந்து விலகிச் சென்றவன் நீ’ என்பது அவள் எண்ணம். ஆனால், ’நாமாவது அந்தப் பிரிவை விழுங்கிக்கொண்டு இன்னொரு திருமணம், குழந்தை என்று வாழ்க்கையை அமைத்துக்கொண்டோம். ஆனால், ராம் தன் நினைவுகளுடனேயே வாழ்ந்துகொண்டிருக்கிறான்’ எனும் பேருண்மை அவளுக்கு, சந்திப்புக்கு வந்த பிறகுதான் விளங்குகிறது. குற்றவுணர்ச்சிக்குள் போகிறாள். தவிக்கிறாள். ஆனால், அங்கே அவள் செய்வதற்கு ஒன்றுமில்லை என்பதுதான் நிதர்சனம்.
அவள் தன் நிலையைத் தெரிந்துகொண்டால், அவளது இயல்பைத் தொலைத்து இன்னலுக்கு ஆளாவாள் என்று அவனுக்குத் தெரியும். அதனால்தான் ராம் தொடக்கத்தில் அமைதி காக்கிறான். அதனால், அவன் தன்னோடு பேச ஆர்வமில்லாதவனாக இருக்கிறான் என்று நினைத்து மனமுடைந்து போய், ஹோட்டல் வாசலில் தன்னை இறக்கிவிட்டுவிட்ட அவனிடமிருந்து விலகி ஹோட்டல் அறையை நோக்கி நடக்கிறாள் ஜானு.
அடுத்த சில நிமிடங்களிலேயே காதலின் அழுத்தம் இருவரையும் உடைக்கிறது. காதலுக்கு முன்னே கெஞ்சவும் தயாராகிறாள் ஜானு. அதனால் போனில் அவனை அழைத்து,
”ரொம்ப தூரம் போயிட்டியா ராம்?” என்று கேட்கிறாள்.
இப்போது அவளுக்காகக் காதலின் வலியை கொடுக்கவும், பெறவுமே தயாராகிறான் அவன்.
”உன்னை எங்க விட்டேனோ அங்கேயேதான் நின்னுகிட்டிருக்கேன் ஜானு!” என்கிறான்.

அதனால்தான் இறுதிக் காட்சியில், ஏர்போர்ட்டில் அவனைப் பிரிந்து செல்லும் கடைசி விநாடிகளில் அவனது பார்வையின் அழுத்தத்தைத் தாங்கவியலாமல் தவிக்கிறாள் ஜானு. அவனது பார்வையைத் திருப்ப முனைகிறாள். எப்போதும் அவளைப் பார்க்கவும், பேசவும் தயங்கும் ராம், அப்போது அவள் மீதான பார்வையை விலக்காமல் பிடிவாதமாக நிற்கிறான். அவனது கண்களை அவளது கைகளால் பொத்திக்கொண்டு அழுகிறாள் ஜானு. காதலால் ததும்பி நிற்கும் இந்தக் காட்சி, நம் கண்களிலும் கண்ணீரை இறக்கி விளையாடத்தான் செய்கிறது.
காதல் முன்னறிவிப்பின்றி வரும்
அதை அள்ளி அணைத்துக் கொள்ளுங்கள்
அன்பாகப் பார்த்துக் கொள்ளுங்கள்
காதல் இனிக்கும்
காதல் தயங்கும்
காதல் சிரிக்கும்
காதல் கலங்கும்
காதல் புரியும்
காதல் பிரிந்தால்
கதவுகளை மூடாமல் வழியனுப்புங்கள்
-(கார்த்திக் நேத்தா எழுதிய ’பேரன்பே காதல்’ பாடலின் பகுதி)
தொடரும்…