எந்த நிலப்பரப்பை மையப்படுத்திய கதை என்றாலும், அதில் குணச்சித்திர நடிகராகத் தன்னுடைய இருப்பைப் பதிவு செய்துவிடுவார் நடிகர் “ஆடுகளம்’ முருகதாஸ்.
விஜய் சேதுபதியின் ’96’ படத்திற்கெனத் தனி ரசிகர் கூட்டம் எப்போதும் உண்டு. ஒவ்வொரு முறை ரீ-ரிலீஸின்போதும், படத்தையும் அதன் பாடல்களையும் ரசிகர்கள் உருகிக் கொண்டாடுவார்கள்.
கடந்த வெள்ளிக்கிழமை இப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. ’96’ ரீ-ரிலீஸ் ஆகியிருக்கும் சமயத்தில், அப்பட நினைவுகள் குறித்து நடிகர் ‘ஆடுகளம்’ முருகதாஸிடம் பேசினோம்.
நம்மிடையே பேசியவர், ” ’96’ திரைப்படத்தை வருஷத்திற்கு ஒருமுறை ரீ-ரிலீஸ் செஞ்சாகூட ரசிகர்கள் அதைக் கொண்டாடத் தயாராக இருக்காங்க.
ஏன்னா, ஒவ்வொரு வருஷமும் ஸ்கூல், காலேஜ் முடிச்சுப் பிரிஞ்சு போன நண்பர்கள் எல்லாம் மீண்டும் ஒண்ணு சேர்ந்து அந்தப் படத்தைப் பார்க்க வரும்போது கிடைக்கிற சந்தோஷமே தனி.
10 வருஷத்துக்கு ஒருமுறை ரீ-ரிலீஸ் பண்றதை விட, வருஷத்துக்கு ஒரு முறை ரீ-ரிலீஸ் பண்ணினால்கூட ’96’ ரசிகர்களுக்குக் கொண்டாட்டமானதாக இருக்கும்.
உண்மையைச் சொல்லப்போனா நான் பள்ளி, கல்லூரிக்குப் போய் அதிகம் படிக்காதவன். இந்தப் படத்தைப் பார்த்தபோது, ‘அச்சச்சோ, நாமளும் நல்லா ஸ்கூல், காலேஜ் எல்லாம் முடிச்சிருந்தா இந்த எமோஷனை இன்னும் நல்லா அனுபவிச்சிருக்கலாமே’ன்னு தோணுச்சு.
என்னை மாதிரி படிக்காத பலருக்கும் ‘நாமளும் ஸ்கூலுக்குப் போயிருந்தா இந்த மாதிரி ஒரு நட்பு, அழகான அனுபவங்கள் நமக்குக் கிடைச்சிருக்குமே’ங்கிற ஏக்கம் கண்டிப்பா உருவாகியிருக்கும்.