AI-யை மனிதனாக நம்பியதால் விபரீதம்: `உறுப்பு விற்பனை ஆசை' – 4 வயது சிறுவனின் உடலை துண்டாடிய கொடூரம்!

Spread the love

சத்தீஸ்கர் மாநிலம் ஜஷ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ராம்ஜீத் ராம் (36), தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் கடந்த ஓராண்டுக்கு முன்பு சன்னா என்ற கிராமத்திற்குப் பிழைப்புத் தேடி இடம்பெயர்ந்தார். அங்குள்ள அணைக்கட்டுப் பகுதிக்கு அருகே உள்ள வயல்களில் தற்காலிக குடிசை அமைத்து அவர் குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், கடந்த நவம்பர் 6-ம் தேதி அதிகாலை ராம்ஜீத் ராம் கண்விழித்துப் பார்த்தபோது, குடிசையில் உறங்கிக் கொண்டிருந்த அவரது 4 வயது மகனைக் காணவில்லை. அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் கிராம மக்கள் சிறுவனைத் தீவிரமாகத் தேடினர்.

சிறுவன்
சிறுவன்

அப்போது, குடிசையிலிருந்து சுமார் அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு பள்ளத்தில் போர்வையால் சுற்றப்பட்ட நிலையில் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டான். போர்வையை விலக்கிப் பார்த்தபோது சிறுவனின் உடல் சிதைக்கப்பட்ட நிலையில் இருந்ததைக் கண்டு பெற்றோர் கதறித் துடித்தனர். இது குறித்து கிராம மக்கள் உடனடியாக காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சன்னா காவல் நிலைய போலீசார் விசாரணையைத் தொடங்கினர்.

சிறுவன் மாயமாவதற்கு முன்பு, அவனை ராம்ஜீத் ராமின் தாய்மாமன் மகனான பாசுதேவ் கோர்வா என்ற டாங்னு (27) அழைத்துச் சென்றதை உள்ளூர்வாசி ஒருவர் நேரில் பார்த்ததாகப் போலீசாரிடம் தெரிவித்தார். இதன் அடிப்படையில் பாசுதேவை காவல்துறையினர் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்தனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இது குறித்து ஜஷ்பூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ASP) ராகேஷ் குமார் படான்வார் கூறுகையில், “குறைந்த வருமானத்தில் கஷ்டப்பட்டு வந்த பாசுதேவ், குறுக்கு வழியில் விரைவாகப் பணம் சம்பாதிக்கத் திட்டமிட்டுள்ளார்.

கொலை

சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு சமூக வலைதளத்தில் ஒரு வீடியோவைப் பார்த்துள்ளார். அதில், மனித உடல் உறுப்புகளை விற்பனை செய்வதன் மூலம் ரூ. 20 லட்சம் வரை சம்பாதிக்கலாம் எனக் கூறப்பட்டிருக்கிறது. இதைப் பார்த்த பாசுதேவ், யாரையாவது கொன்று உறுப்புகளை விற்கத் திட்டமிட்டு, தனக்கு நன்கு அறிமுகமான தனது 4 வயது அண்ணன் மகனைக் குறிவைத்துள்ளார். மேலும், உறுப்புகளை வாங்குவதற்கு ஆட்களைத் தேடிய பாசுதேவ், இணையத்தில் ஒரு ‘ஏஐ’ (AI) செயலியைப் பதிவிறக்கம் செய்துள்ளார்.

கடந்த 45 நாட்களாக அந்தச் செயலியுடன் குரல் பதிவுகள் (Voice Messages) மூலம் அவர் உரையாடியுள்ளார். அந்தச் செயலியில் பதிலளிப்பது ஏதோ ஒரு உண்மையான மனிதர் என்றும், டெல்லியில் இருந்து ஒருவர் நேரில் வந்து தன்னிடம் உள்ள உறுப்புகளைப் பணம் கொடுத்து வாங்கிச் செல்வார் என்றும் அவர் முழுமையாக நம்பியுள்ளார். இதையடுத்து, நவம்பர் 5-ம் தேதி இரவு ஏழ்மை நிலையில் இருந்த அந்தச் சிறுவனுக்கு ‘சிக்கன்’ வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி பாசுதேவ் அழைத்துச் சென்றுள்ளார்.

காவல்துறை
காவல்துறை

பின்னர், சிறுவனுக்கு மதுபானம் கொடுத்து மயக்கமடையச் செய்து, தனது குடிசைக்குத் தூக்கிச் சென்றுள்ளார். சிறுவன் சுயநினைவை இழந்ததும், அவனது கழுத்தை அறுத்துக் கொலை செய்த பாசுதேவ், சிறுவனின் சிறுநீரகங்கள், நுரையீரல் மற்றும் கண்களை வெட்டி எடுத்துள்ளார். பின்னர் சிறுவனின் உடலை ஒரு பள்ளத்தில் புதைத்துவிட்டு வீடு திரும்பிய பாசுதேவ், வெட்டி எடுத்த உறுப்புகளை ஒரு பிளாஸ்டிக் கவரில் சுற்றி வாளியில் போட்டுள்ளார். அதன் மேல் ஒரு ஜீன்ஸ் பேண்டை வைத்து மூடி, மண்ணை நிரப்பி வேறு ஒரு இடத்தில் பாதி அளவு புதைத்து வைத்துள்ளார்.

கைது செய்யப்பட்ட பாசுதேவ் அளித்த தகவலின் பேரில், மண்ணில் புதைக்கப்பட்டிருந்த வாளியிலிருந்த சிறுவனின் உறுப்புகள் மற்றும் கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் ஆகியவற்றை மீட்டோம். சிறுவனின் உடல் மற்றும் உறுப்புகள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு, மாதிரிகள் சேகரிக்கப்பட்ட பின்னர் இறுதிச் சடங்குகளுக்காகப் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டன.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

குற்றப் பின்னணி ஏதுமில்லாத ஒரு இளைஞர், சமூக வலைதள வீடியோ மற்றும் ஏஐ செயலியின் பதில்களை நம்பி இத்தகைய கொடூரச் செயலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *