திருவனந்தபுரம் ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: பயணிகள் வெளியேற்றம்; என்ன நடந்தது? | Fire Breaks Out on Thiruvananthapuram Rajdhani Express; Passengers Evacuated

Spread the love

முற்றிலும் ஏ.சி.பெட்டிகளைக் கொண்ட ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் நாட்டின் தலைநகரில் இருந்து மாநிலத் தலைநகரங்களுக்கு இயக்கப்படுகிறது. நேற்று திருவனந்தபுரத்தில் இருந்து ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் நிஜாமுதினுக்குக் கிளம்பிச்சென்றது.

இன்று ராஜஸ்தான் மாநிலத்தில் அதிகாலை 5 மணிக்குச் சென்று கொண்டிருந்தபோது ரயிலின் பி-1 பெட்டியில் திடீரெனப் புகை வந்தது. அதனைத் தொடர்ந்து ரயில் பெட்டி தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

இதனைக் கவனித்த கார்டு உடனே மோட்டார்மெனைத் தொடர்பு கொண்டு தகவல் கொடுத்தார். ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. உடனடியாக தீப்பிடித்த ரயில் பெட்டியில் இருந்த பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

அதோடு தீ மற்ற பெட்டிகளுக்குப் பரவாமல் இருக்க தீப்பிடித்த ரயில் பெட்டி ரயிலில் இருந்து கழற்றிவிடப்பட்டது. மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. ரயில்வே பாதுகாப்பு படையினரும், இதர ரயில்வே ஊழியர்களும் சேர்ந்து தீயை அணைத்தனர்.

இச்சம்பவம் விக்ரம்கர் என்ற ரயில் நிலையத்திற்கு அருகில் நடந்தது. கோடாவில் இருந்து ரயில்வே மீட்புக் குழுவினர் விரைந்து வந்து தேவையான உதவிகளைச் செய்து கொடுத்தனர். அதிர்ஷ்டவசமாக ரயிலில் இருந்த பயணிகள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

தீப்பிடித்த பெட்டியில் 68 பயணிகள் இருந்தனர். தீப்பற்றிய பெட்டி கொழுந்துவிட்டு எரிந்த காட்சி சமூக வலைத்தளப் பக்கத்தில் வைரலாகப் பரவியது. அதோடு ரயில் தண்டவாளத்திற்கு அருகில் நின்ற மரத்திற்கும் தீ பரவியது. தீவிபத்து ஏற்பட்ட பெட்டியில் இருந்த பயணிகள் ரயிலின் வேறு பெட்டிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இச்சம்பவத்தால் இரண்டு மணி நேரம் மும்பை-டெல்லி வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீவிபத்து ஏற்பட்ட ரயில் கோடா ரயில் நிலையத்திற்குச் சென்ற பிறகு அங்கு கூடுதலாக ஒரு பெட்டி இணைக்கப்பட்டு அனைத்து பயணிகளுக்கும் இருக்கை ஒதுக்கப்பட்டது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *