Ananda Vikatan – 06 May 2026 – இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்…

Spread the love

மக்களாட்சி நடக்கும் ஜனநாயக நாடுகளில் அரசுகளுக்கு ஊடகங்களே முகம் பார்க்கும் கண்ணாடிகளாக இருக்கின்றன. நல்லவற்றைப் பாராட்டி, தவற்றைச் சுட்டிக்காட்டி நேர்ப்படுத்தும் கடமை ஊடகங்களுக்கு உண்டு. ஆனால், சட்டபூர்வமாகவும் சட்டவிரோதமாகவும் ஊடக நிறுவனங்களின் குரல்வளையை நெரிக்கிற மத்திய அரசு, இப்போது சமூக ஊடகங்கள் மீதும் கோரப்பிடியை இறுக்கியிருக்கிறது.

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் பரிந்துரைத்திருக்கும் சில திருத்த விதிகளின்படி, நடப்பு நிகழ்வுகள் மற்றும் அரசியல் செய்திகளைப் பகிரும் சுயாதீன சமூக ஊடகர்களும், பதிவுசெய்யப்பட்ட செய்தி நிறுவனங்களுக்கான நெறிமுறைக் கோட்பாட்டின்கீழ் கொண்டுவரப்படுவார்கள். ஃபேஸ்புக், யூடியூப், எக்ஸ் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் ‘பாதக”மெனக் கருதும் எந்த உள்ளடக்கத்தையும் 2-3 மணி நேரத்தில் அமைச்சகத்தால் அகற்றிவிட முடியும். இது அரசு நிகழ்த்தும் அப்பட்டமான ‘டிஜிட்டல் என்கவுன்ட்டர்’ என்ற குரல் எழுந்திருக்கிறது.

டிஜிட்டல் தொழில்நுட்பம் தரும் சுதந்திரத்தில், எவ்வித வணிக நிர்பந்தமும் இன்றி ஏராளமான சுயாதீன ஊடகர்கள் உருவாகி, அரசின் செயல்பாடுகளை விமர்சித்து மாற்றங்களுக்கு வித்திட்டுவருகிறார்கள். அவர்களை அச்சுறுத்தலாகக் கருதுகிறது அரசு. தங்களுக்கு எதிராக எங்கிருந்தும் குரல்கள் எழக் கூடாது என்று நினைப்பது மிகப்பெரிய சர்வாதிகாரம். மத்திய அரசின் செயல்பாடுகள் அந்தப் புள்ளியை நோக்கித்தான் செல்கின்றனவோ என்ற அச்சம் எழுகிறது. தாங்கள் சொல்வதைச் செய்யும் அமைப்புகளாக, சமூக ஊடக நிறுவனங்களை மாற்றுவதுதான் மத்திய அரசின் நோக்கமோ என்ற சந்தேகமும் எழுகிறது. தனிநபர்கள் என்ன செய்ய வேண்டும், என்ன எழுத வேண்டும் என்பதை அதிகாரிகள் தீர்மானிப்பது, கருத்துரிமைக்கு எதிரான அத்துமீறல்.

2025-ன் முதல் ஆறு மாதங்களிலேயே அரசின் வலியுறுத்தல்களைத் தொடர்ந்து, 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்ளடக்கங்களை முடக்கியதாகத் தெரிவிக்கிறது ‘மெட்டா’ (Meta) நிறுவனம். பிரதமரின் செயல்பாடுகளையும், அரசின் கொள்கை முடிவுகளையும் விமர்சித்த பல இன்ஃப்ளூயன்ஸர்களின் பதிவுகள் அரசின் புகாரின் பேரில் நீக்கப்பட்டிருக்கின்றன. இந்த வரைவுத் திருத்த விதி நடைமுறைக்கு வருமானால், சமூக ஊடக வெளியில் எதிர்க்குரல்கள் முற்று முழுதாக ஒடுக்கப்பட்டுவிடும் ஆபத்து இருக்கிறது.

‘இந்தக் கட்டுப்பாடுகள் தேசத்துரோகிகள், சமூகவிரோதிகளைக் கட்டுப்படுத்தத்தான். பாதகமான பதிவுகள் மட்டுமே நீக்கப்படும்’ என்று மத்திய அரசு சொல்வதை, கடந்தகாலச் செயல்பாடுகளைவைத்துப் பார்க்கும்போது நம்பும்படியாக இல்லை. ஒரு கருத்தை ‘பாதகமான பதிவு’ என்று அமைச்சகமோ, அதிகாரிகளோ தீர்மானிக்க முடியாது. அது நீதிமன்றத்தின் வரம்புக்குட்பட்டது. இந்த ஆபத்துகளையெல்லாம் உணர்ந்தே, சர்வதேச மனித உரிமை அமைப்பான அம்னெஸ்டி இன்டர்நேஷனல் தொடங்கி எடிட்டர்ஸ் கில்ட், பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா வரை பலரும் வரைவு நிலையிலேயே இதைக் கிள்ளி எறிய வேண்டும் என்கிறார்கள்.

மக்கள் நலனில் அக்கறைகொண்ட ஓர் அரசு, மாற்றுக் கருத்துகளைக் கண்டு அஞ்சக் கூடாது. விமர்சனங்களே அரசின் செயல்பாடுகளைக் கூர்மைப்படுத்தும். இந்த வரைவை அரசு தாமதமின்றி வாபஸ் பெற வேண்டும். ‘இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும்’ என்று தமிழ்மறை தந்த வள்ளுவர் சொல்லிவைத்திருக்கிறார். மேடைக்கு மேடை திருக்குறளைச் சிலாகிக்கும் பிரதமர், இந்தக் குறளின் பொருளுணர வேண்டும்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *