பீகார் மாநிலம் ஜமுய்யில் நடந்த பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தைப்போன்று மீண்டும் ஒரு சம்பவம் நடந்து இருக்கிறது. அங்குள்ள சமஸ்திபூர் அருகில் இருக்கும் ஜகத்சிங்பூர் என்ற கிராமத்தில் மோட்டார் சைக்கிள்களில் வந்த ஒரு கும்பல், சாலையில் ஆண் நண்பருடன் நின்று கொண்டிருந்த பெண்ணை வழிமறித்து பாலியல் தொல்லஒ செய்துள்ளது. அப்பெண்ணும், அவரது ஆண் நண்பரும் இரு சக்கர வாகனத்தில் வந்தனர். அவர்கள் போட்டோ எடுப்பதற்காக வாகனத்தை நிறுத்தினர். அவர்கள் போட்டோ எடுத்துக்கொண்டிருந்தபோது அவர்களை பைக்கில் வந்த ஒரு கும்பல் சுற்றி வளைத்தது.
அவர்கள் அப்பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டி ரோட்டில் தள்ளி துன்புறத்தல் செய்தனர். இது தொடர்பான காணொலி சமூகவலைத்தள பக்கத்தில் வைரலானது. இதில் இருக்கும் ஆண்கள் ஜகத்சிங்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்று உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.
எனினும், அந்த நபர்களை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். இந்த விஷயத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டதாகவும், யாரும் தப்பிக்க முடியாது என்றும் போலீஸார் தெரிவித்தனர்.
காணொலியில் காணப்பட்டவர்களின் அடையாளங்களையும், சம்பவம் நடந்த இடத்தையும் சரிபார்த்து குற்றவாளிகளை விரைவில் பிடிப்போம் என்று போலீஸ் அதிகாரி அரவிந்த் பிரதாப் சிங் கூறினார். சில நாட்களுக்கு முன்பு, பீகாரில் உள்ள ஜமுய் என்ற இடத்தில் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியையும், அவருடன் வந்த சக மாணவனையும் ஒரு கும்பல் துன்புறுத்தினர். அது தொடர்பான காணொலி ஆன்லைனில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
அந்த காணொளியில், மாணவியையும் அவருடன் வந்த மாணவரையும் ஒரு கும்பல் சூழ்ந்து கொண்டு மாணவனின் சட்டையின் காலரைப் பிடித்தது. மாணவி ஓட முயன்றபோது, முகமூடி அணிந்த ஒருவன் அவரை பின்னால் பிடித்தான். இருவரும் பயிற்சி வகுப்புகளுக்குச் சென்றுவிட்டு ஸ்கூட்டரில் வந்த போது இச்சம்பவம் நடந்தது நாட்டையே உலுக்கியது.