Aval Vikatan – 01 December 2026 – பெண்களைப் பாதுகாக்க வேண்டியவர்களே பாலியல் தொல்லை தந்தால்?

Spread the love

கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரப் பங்களிப்பு என பெண்கள் இன்று பல்வேறு துறைகளிலும் ஆண்களுக்குச் சமமாகப் பங்களிக்கத் தொடங்கிவிட்டார்கள். ஆனாலும், அது எளிதாக நிகழ்ந்துவிடவில்லை. இன்றைக்கும் பல்வேறு தடைகளைக் கடந்துதான் பெண்கள் மேலெழுந்து வரவேண்டிய நிலை இருக்கிறது. குறிப்பாக, வீடு தொடங்கி அலுவலகம் வரை ஒருவித பாதுகாப்பின்மை பெண்களைச் சூழ்ந்து அச்சுறுத்திக்கொண்டேஇருக்கிறது. எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் ‘நீ பெண்தானே’ என்கிற அகம்பாவமான பார்வை நிறைய ஆண்களிடம் மண்டிக்கிடக்கிறது.

கடந்த சில வாரங்களாக தமிழ்நாட்டில் நடக்கும் நிகழ்வுகள் இந்த அச்சத்தை மேலும் அதிகரிக்கின்றன. ஈரோடு மாவட்டத்தில் முதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்புப் பணியை முடித்துவிட்டு ஊர் திரும்பிக்கொண்டிருந்த பெண் காவலர் தனக்கு, உடன் பணியாற்றும் சிறப்பு உதவி ஆய்வாளரே பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகார் தெரிவித்திருக்கிறார். புகாருக்குள்ளான காவல் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குப் பாலியல் தொல்லை தரும் விதமாக குறுஞ்செய்தி அனுப்பியதாக கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு மேலும் அதிர்ச்சியைத் தருகிறது. பெண்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் இருப்பவர்கள், பெண்களின் பிரச்னைகளுக்காக குரல்கொடுக்க வேண்டியவர்கள் மீதே இப்படியான குற்றச்சாட்டுகள் எழுவது அவநம்பிக்கையளிக்கிறது. கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம், பாதிக்கப்பட்டவர்கள் சாதாரண பெண்கள் அல்லர். ஒருவர் மாவட்ட ஆட்சியர். ஒருவர் காவல்துறையில் பணியாற்றுபவர். அவர்களுக்கே இந்த நிலை என்றால், எந்த அதிகாரமும், பின்புலமும் இல்லாத சாமானியப் பெண்ணின் நிலை?

பணியிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் தீர்வு) சட்டப்படி (POSH), 10 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட ஒவ்வொரு நிறுவனமும் கட்டாயமாக உள் புகார் குழுவை (Internal Complaints Committee – ICC) அமைக்க வேண்டும். ஆனால், பல நிறுவனங்களில் அந்த கமிட்டி வெறும் காகிதத்தில் மட்டுமே இருக்கிறது. காரணம், `வேலை போய்விடுமோ, ‘பழிவாங்கப்படுவோமோ’, ‘நம் நடத்தையையே சந்தேகிப் பார்களோ…’ என்ற அச்சங்களால் பெண்கள் அந்த வலியை விழுங்கி தங்களுக்குள்ளாகவே செரித்துக்கொண்டிருக்கிறார்கள்.

புகார் கொடுக்கும் பெண்களுக்கு அரணாக இருந்து, அவர்களுக்காக நீதி பெற்றுத்தருவதை நிறுவனங்களும் சமூகமும் தங்கள் கடமையாகக் கருதும் காலம் வரும்வரை இதெல்லாம் மாறப் போவதில்லை. அதுவரை பெண்கள் எவ்வளவு உயரிய பொறுப்பில் இருந்தாலும் பாலியல் குற்றவாளிகள் தைரியமாக தங்கள் வேலையைச் செய்துகொண்டே இருப்பார்கள்.

அரசு நிர்வாகத்திலும் தனியாரிலும் பணிபுரியும் பெண்களின் பாதுகாப்புக்கே இந்தளவுக்குப் பேச வேண்டியுள்ளபோது, சாமானியப் பெண்களுக்காக இன்னும் அழுத்தமாகக் குரல் எழுப்பப்பட வேண்டும். களமாடுவோம் தொடர்ந்து!

உரிமையுடன்,

ஸ்ரீ

ஆசிரியர்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *