சென்னை மக்களே உஷார்! 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் அலெர்ட் ! – Kumudam

Spread the love

தமிழ்நாட்டின் சில பகுதிகளில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று, தொடர்ந்து தீவிரப் புயலாக மாறக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் வட தமிழக கடலோர மாவட்டங்களில் வரும் நாட்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வங்கக்கடலில் வலுப்பெறும் புயல் சின்னம்!

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுப்பெறும் நிலையில் உள்ளது. இந்தப் புயல் மேலும் தீவிரமடைந்து நவம்பர் 17ஆம் தேதி மாலை தீவிரப் புயலாக மாற வாய்ப்புள்ளதாக முன்னறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகரும் இந்தப் புயல், நவம்பர் 20ஆம் தேதி நண்பகல் நெல்லூர் – துனி இடையே ஆந்திரப் பிரதேச கடற்கரையை மிகத் தீவிரப் புயலாகக் கடக்க வாய்ப்புள்ளது. அப்போது மணிக்கு 120 முதல் 130 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 145 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று தமிழகத்தில் எங்கெல்லாம் மழை?

இன்று (நவம்பர் 17) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் கடலோர தமிழகத்தின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தின் பிற பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

நவம்பர் 18, 19-ல் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

நவம்பர் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். மழையின்போது மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசவும் வாய்ப்புள்ளது.

காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோர தமிழகத்தின் பிற பகுதிகளில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யலாம். புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தின் மற்ற இடங்களில் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும்.

வெப்பநிலையில் பெரிய மாற்றம் இருக்குமா?

நவம்பர் 17 முதல் 18ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் இருக்காது. வெப்பநிலையானது பொதுவாக இயல்பான அளவிலேயே தொடரும் என வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையின் வானிலை நிலவரம்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (நவம்பர் 17) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை 30 முதல் 31 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 முதல் 25 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை!

வட தமிழக கடலோரப் பகுதிகளில் நவம்பர் 18ஆம் தேதி வரை சூறாவளிக்காற்று வீசக்கூடும். காற்றின் வேகம் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. ஆகவும், இடையிடையே 60 கி.மீ. வரையிலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

எனவே, கடலில் நிலவும் வானிலைச் சூழலைக் கருத்தில் கொண்டு மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *