ஒரு குழந்தை, தன் பாதுகாப்பை உறுதிசெய்துகொள்ளக்கூடிய `அடல்ட்’ வயதை எட்டும்வரை, அதன் பாதுகாப்புக்கு பெற்றோர், குடும்பம், சமூகம், அரசு, சட்டம் ஆகியவையே பொறுப்பு. குழந்தைகள் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாகும்போது, இந்த அத்தனை தரப்பும் தோல்வியடைகின்றன. மாநிலத்தையே உலுக்கியுள்ள, 10 வயது சிறுமியின் கொலை இதன் மீதான விவாதங்களை தீவிரப்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி, அதே தெருவைச் சேர்ந்த கார்த்தி என்பவரால் பாலியல் வன்கொடுமை கொலை செய்யப்பட்டு, குளக்கரையில் வீசப்பட்ட கொடூரம், நம்மை நெஞ்சம் பதறச்செய்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள கார்த்தி, இரண்டு பெண் குழந்தைகளுக்கு அப்பா.
தேசிய குற்ற ஆவணக் காப்பக அறிக்கையின்படி, இந்தியாவில் 2022-ல் குழந்தைகளுக்கு எதிரான 1,62,000 பாலியல் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது, முந்தைய ஆண்டைவிட 8.7% அதிகரித்துள்ளது. இதை, `குற்றங்கள் அதிகரிப்பு’ என்பதாக அல்லாமல், குற்றங்கள் தொடர்பான பதிவுகள் அதிகரிப்பதாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
தினம் தினம் எண்ணிடலங்கா குழந்தைகள் பாலியல் கொடுமைகளை எதிர்கொண்டுதான் வருகிறார்கள். அவர்களையும் அவர்களது குடும்பங்களையும் அச்சம், தயக்கம் உடைக்க வைப்பது, குற்றவாளிகளை இனம்கண்டு இக்குற்றத்தின் சங்கிலியை அறுக்கும் வழிகளில் ஒன்று.
அந்தவகையில், இக்குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகளும் விழிப்புணர்வும் தீவிர மாக்கப்பட வேண்டும். இதில் சமூகம், ‘குற்றவாளியைத் தூக்கில் போட வேண்டும்’ என்று உணர்வெழுச்சியில் குரல் எழுப்பும். பொதுவாக, என்கவுன்டர், மரண தண்டனை உள்ளிட்டவற்றில் செல்வாக்கு, அதிகாரம் உள்ள குற்றவாளிகள் தப்பவைக்கப்படுவார்கள்; விளிம்புநிலை மக்களே பலியாக்கப்படுவார்கள். இதுபோன்ற காரணங்களால், எந்தக் குற்றத்துக்கும் அவை தவிர்க்கப்பட வேண்டும்.
வேரில் அழிக்கப்படாமல் எந்தக் குற்றத்தையும் தண்டனைகளால் மட்டும் ஒழிக்க முடியாது. மலிந்துகிடக்கும் போதை, பார்ன் சீரழிவுகள் பாலியல் குற்றங்களுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கின்றன. அவற்றை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். ஆயுள் தண்டனை வரை வழங்கப்படக்கூடிய போக்சோ வழக்குகளை சட்டத்துறை தீவிரத்துடன் அணுக வேண்டும்.
குடும்பங்கள், தங்கள் குழந்தைகளுக்கு முழுமுதற் பொறுப்பேற்று கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். பொதுவிடங்களில் குழந்தைகளை `நம் பாதுகாப்புக்குரியவர்கள்’ என்ற நோக்கிலேயே சமூகம் கண்காணிக்க வேண்டும்.
பள்ளி, கல்லூரிகளில் அரசும், தனியார் அமைப்புகளும் விழிப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டும். குழந்தைகளுக்கான ஹெல்ப்லைன் எண் 1098 கிராமங்கள் வரை சென்றுசேர வேண்டும். இவற்றின் மூலம் கிடைக்கப்பெறும் புகார்களை, கல்வித்துறை முதல் காவல்துறை வரை அக்கறையுடனும் நேர்மையுடனும் கையாளும் சிஸ்டத்தை உருவாக்க வேண்டும்.
ஒவ்வொரு குழந்தையின் பாதுகாப்பும் நம் பொறுப்பு!
உரிமையுடன்,
ஸ்ரீ
ஆசிரியர்