Aval Vikatan – 17 November 2026 – இரட்டைச் சுமையிலிருந்து எப்போது விடுதலை பெண்களுக்கு..?

Spread the love

“காலையில் குளித்து, சமைத்து, பாத்திரங்களைக் கழுவி, பொது வெளியில் தோன்றுவதற்கு மேக்கப் போட்டுக்கொள்ள எனக்கு 3 – 4 மணி நேரம் ஆகிறது. இதற்கு முன் இருந்த ஆண் பிரதமர்களுக்கு இந்த நேர விரயம் இல்லை…”‘

– இவை ஜப்பானின் முதல் பெண் பிரதமரான சானே தாகைச்சி நாடாளுமன்றத்தில் பேசிய வார்த்தைகள். உலகம் முழுவதும் வாழும் பெண்களின் நீங்காத் துயரத்துக்கு இந்த வார்த்தைகள் பெரும் கவனம் கொடுத்துள்ளன.

தாகைச்சி முன்வைத்திருப்பது பெண்கள் வாழ்க்கையை வதைக்கும் `இரட்டைச் சுமை’ என்ற மிகத் தீவிரமான பிரச்னை. ‘இதெல்லாம் ஒரு விஷயமா?’ என்று கடக்கும் வீடுகளும், நாடுகளும் காதுகொடுத்துக் கேட்கத்தான், நாடாளுமன்றத்தில் அதை வெளிப்படுத்தியுள்ளார் தாகைச்சி.

`ஹோம் மேக்கர்’ என்று பெருமைப்படுத்தப்படுகிற சாதாரணப் பெண்களாயினும் சரி, பிரதமராகவே இருந்தாலும் சரி… அவர்களுக்கென வீடுகள் வகுத்து வைத்திருக்கிற கடமைகளைச் செய்தே ஆக வேண்டும். `பெப்சிகோ’ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக தான் நியமிக்கப்பட்ட சாதனை செய்தியுடன் இந்திரா நூயி வீடு திரும்பியபோது, `பெப்சிகோவுக்கு நீ பிரசிடென்ட் ஆக இருக்கலாம். ஆனால், வீட்டில் நீ ஒரு அம்மா, மனைவி, மகள். போய் பால் பாக்கெட் வாங்கி வா’ என்றிருக்கிறார் அவர் அம்மா.

பதவியில், வருமானத்தில் மேலே உள்ள பெண்களுக்கே இந்நிலைமை எனில், தொழிலாளர் களாக, பணியாளர்களாக உழைத்துக்கொண்டிருக்கும் பெண்களின் சூழல்? காலையில் சமையலறையில் அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டுக் கிளம்பி, இரவு வீடு திரும்பியதும் அந்நாளுக்கான மிச்ச வேலைகளைச் செய்து, இடைப்பட்ட நேரத்தில் பணியிடத்தில் உழைத்துக் களைத்து என உயிர்வற்றிப் போகும் பெண்களே பெரும்பான்மை.

அதே நேரம், ஆண்களுக்கு இதுமாதிரி நெருக்கடிகள் ஏதுமில்லை. அவர்களுக்கு வீடு எப்போதுமே அதிகாரத்துக்கான அரங்கம்தான். அதுவே பெண்களுக்கு, உண்மையில் அது அவஸ்தைக் கூடாரமாகத்தான் இன்று வரை இருக்கிறது.

தாகைச்சி அடுத்ததாக முன்வைத்திருக்கும் பிரச்னை, பொதுவெளியில் இயங்கும் பெண்களுக்கு அவர்களது தோற்றத்தின் மீது வைக்கப்படுகிற அழுத்தம். 2016, அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது, ஹிலாரி கிளிண்டன் தனது அலங்காரத்துக்கு என 600 மணி நேரம் செலவிட்டதைக் குறிப்பிட்டுப் பேசியிருந்தார். தமிழகத்தில், முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பலரும் இதுமாதிரியான விமர்சனங்களால் காயப்படுத்தப்படுவது சாதாரணமாகிவிட்டது. இந்த அவலம் நிச்சயம் களையப்பட வேண்டும்.

தாகைச்சியும், உலகம் முழுக்க உள்ள பெண்களும் எதிர்பார்ப்பது, வலியுறுத்துவது, போராடுவது… இரட்டைச் சுமையில் இருந்து தாங்கள் விடுவிக்கப்பட வேண்டும், வேலைகள் பகிரப்பட வேண்டும் என்பதையே. அரசு, சமூகம், குடும்பம் என அனைவருக்கும் இதில் பொறுப்புள்ளது.

உரிமையுடன்,

ஸ்ரீ

ஆசிரியர்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *