டெல்லியில் மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்யக்கோரியும், நீலம் பண்பாட்டு மையம் மற்றும் நீலம் மாணவர் இயக்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. சென்னை, எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில் இயக்குநர்கள் அமீர், வெற்றிமாறன், பா.ரஞ்சித், நடிகர் மன்சூர் அலிகான், கலையரசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அதில் பேசிய பாடகர் அறிவு, “மாணவர்களுக்குத் தேர்வு, ஆசிரியர் மற்றும் பாடத்திட்டத்தைப் பார்த்துக் குழப்பமும் பயமும் ஏற்படுவது மிக இயல்பானது. இந்த பயத்தைப் போக்குவதற்காகவே பெற்றோர்கள் பள்ளிகளில் கட்டணம் செலுத்துகிறார்கள்.

ஆனால், மதிப்பெண்களுக்காக நடத்தப்படும் தேர்வுகளைப் பார்த்துப் பயந்து, அதை வெளியிலும் சொல்ல முடியாமல் சகித்துக் கொண்டிருந்த ஒரு தலைமுறை, இன்றைக்கு வெடித்து எழுந்து நீட் எதிர்ப்புப் போராட்டமாக உருவெடுத்துள்ளது. சமமாக இல்லாத ஒரு சமூகத்தில் அனைவருக்கும் சமமான தேர்வு என்பது சாத்தியமற்றது. முதல் குழந்தை இறந்தபோதே அரசு எச்சரிக்கையுடன் செயல்பட்டு நீட் தேர்வுக்கு விலக்கு அளித்திருந்தால், நூற்றுக்கணக்கான மாணவர்களை நாம் இழந்திருக்க மாட்டோம்.