டெல்லியில் மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்யக்கோரியும், நீலம் பண்பாட்டு மையம் மற்றும் நீலம் மாணவர் இயக்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. சென்னை, எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில் இயக்குநர்கள் அமீர், வெற்றிமாறன், பா.ரஞ்சித், நடிகர் மன்சூர் அலிகான், கலையரசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அதில் பேசிய நடிகையும் இயக்குநருமான ரேவதி, “இன்றைய சூழலில் நீட் தேர்வு குறித்து விரிவாகப் பேச எனக்கு முழுமையான அறிவு மற்றும் தரவுகள் போதாது.

இருப்பினும், நீட் வினாத்தாள் கசிவால் பாதிக்கப்பட்ட இளம் மாணவர்களின் போராட்டமும், அதற்கு எதிரான அடக்குமுறைகளும் என்னை மிகவும் பாதித்தது. தடியடியின் போது காலில் விழுந்து அடிக்காதீர்கள் என மாணவர்கள் கெஞ்சினார்கள். அந்த வீடியோக்களையெல்லாம் பார்க்கும்போது மனம் வெதும்பியது. மாணவர்கள் தங்களின் எதிர்காலத்திற்காக ஜூலை மாதக் கடும் குளிரிலும் மழையிலும், தரையில் தங்கி 25 நாட்களுக்கும் மேலாகத் தொடர்ந்து போராடி வருகின்றனர். 16 வயது சிறுவன் ஒருவன், “நான் தவறு எதுவும் செய்யவில்லை, என் உரிமைகளுக்காகவும் டாக்டர் கனவுக்காகவுமே இங்கு நிற்கிறேன்’ என்று தைரியமாக வாதிட்டது என்னை வியப்பில் ஆழ்த்தியது.