விஜய் சேதுபதி நடிப்பில், பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் ‘பத்தா’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
அட்லீ தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். இன்று இப்படத்தின் சக்சஸ் மீட் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் விஜய் சேதுபதி, “பாலாஜி இதுக்கு முன்னாடி பண்ண மூணு படங்களுமே மிக அற்புதமான படங்கள். இடையில ‘ஒரு பக்க கதை’ன்னு ஒரு படம் பண்ணாரு, அதுல நான் இல்லனாலும்கூட எப்படியாவது நடிச்சுடணும்னு ஆசைப்பட்டேன்.
அப்போ பாலாஜி தரணிதரன் என் மூஞ்சியை உத்து பார்த்துட்டு, ‘அதுல காலேஜ் ஸ்டூடெண்ட் கதாபாத்திரம், உங்களுக்கு எப்படி அது செட் ஆகும்?’னு சொன்னார்.
அப்புறம் ‘சீதக்காதி’ பண்ணும்போது, ‘இந்தக் கதையில கமல் சார், அமிதாப் பச்சன் சார், மோகன்லால் சார் நடிச்சா நல்லா இருக்கும்’னு சொன்னாரு.
என்னடா இது பக்கத்துலயே இருக்கோமே’னு தோணுச்சு. அதாவது, தெருவுல சுத்துற நாய் எவ்வளவு கியூட்டா இருந்தாலும், நமக்கு ஜெர்மன் ஷெப்பர்டைத்தானே பிடிக்கும். அந்த மாதிரிதான்.
யாரும் இதைத் தப்பா புரிஞ்சுக்க வேண்டாம். ஆனா, கடைசியில அந்தப் படம் எனக்குக் கிடைச்சப்போ ரொம்பவே சந்தோஷப்பட்டேன். அப்போதான் எனக்கு ’96’ மற்றும் ‘சீதக்காதி’ ரெண்டுமே வந்தது.
எதை என்னோட 25-வது படமா அறிவிக்கிறதுன்னு ஒரு குழப்பம் இருந்துச்சு. எனக்கு ’96’ கதை ரொம்ப பிடிச்சிருந்தது. இருந்தாலும்கூட, ‘சீதக்காதி’தான் என்னோட 25-வது படமா இருக்கணும்னு ஆசைப்பட்டேன்.
அந்தக் கேரக்டர் எனக்குக் கிடைச்ச உடனே அதை ஒரு பெரிய ஆசீர்வாதமா நினைச்சேன். இந்த மாதிரி நல்ல விஷயங்கள் நடக்கும்போதெல்லாம் எங்க அப்பாவோட போட்டோவைப் பார்த்து பேசிப்பேன். ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘சீதக்காதி’க்குப் பிறகு இப்போ ‘பத்தா’.

இந்தப் படத்துக்குப் பிறகு பாலாஜி தரணிதரன் ஒரு பெரிய படம் பண்ணி நிறைய காசு சம்பாதிக்கணும்ங்கிறதுதான் என்னோட ஆசை. ஏன்னா, இத்தனை வருஷத்துல அவர் பண்ணியிருக்கிறதே நாலு படம்தான்.
இதையெல்லாம் ஏதோ சோகக் கதைன்னு நினைச்சுடாதீங்க. கண்டிப்பா அந்த மனுஷன் தன் வாழ்க்கையில ரொம்பவே திருப்தியாவும் சந்தோஷமாவும்தான் இருக்கார்.
அவர் மிகப்பெரிய திறமைசாலி. இன்னும் முன்னாடி வரணும், பெரிய உயரங்களைத் தொடணும்னு விரும்புறேன். இந்தப் படம் ஆரம்பிச்சதுல இருந்து முடியுற வரைக்கும் இதை ஒரு ஆயிரம் முறையாவது அவர்கிட்ட சொல்லியிருப்பேன். அடுத்து வரும் காலங்கள்ல இந்தப் படம் பாலாஜிக்கு நிறைய செல்வங்களை வாரி வழங்கட்டும். ஒரு நண்பனா நான் விரும்புறது அதை மட்டும்தான்!”