ஓர் ஆணுடன் கட்டிப் புரண்டு சண்டை போடுவது மாதிரி ஒரு பெண்ணிடம் போட முடியாது. போடவும் கூடாது என்று ஜேசன் நினைப்பது உலக நடைமுறையில் சரி. ஆனால் ஆண் என்பவன், ஒரு பெண்ணை பலவீனமான நபராக பார்ப்பதின் ஆதிக்க மனப்பான்மையின் வெளிப்பாடுதான் இது. பொதுவாகவே ஜேசனுக்குள் superiority complex இருக்கிறது. பெண்கள் யாரும் புகார் சொல்லாத வரை, ஜேசனின் இந்தக் கருத்து பொருத்தமாக இல்லை.
‘Play like a man’ என்று வியாக்கியானம் பேசும் ஜேசன், முந்தையதொரு டாஸ்க்கில் ஷமாவை குழந்தை மாதிரி ஒரு கையால் தூக்கிக் கொண்டு வந்து போட்டதை மாத்திரம் எப்படி நியாயப்படுத்துவார்? ஷமாவின் மீது ஒரு நிரந்தரமான ஓரவஞ்சனை இருப்பதை ஜேசன் பல சமயங்களில் வெளிப்படுத்தி வருகிறார். இதை ஒளித்து வைக்காமல் நேர்மையாக வெளிப்படுத்துவது பாராட்டத்தக்கது.
தன்யாவுடனான எல்லைப் பிரச்சினையில் ‘இது என்னோட இடம். இந்தப் பக்கம் செருப்பு வெச்சா வெளில பறக்கும்’ என்று ஜேசன் ஆக்ரோஷப்பட்டதெல்லாம் ஓவர். நூறு நாட்களுக்கும் குறைவாக தங்கப் போகும் இடத்திலேயே ‘என்னோட இடம்’ என்கிற மனப்பான்மை வந்து விடுகிறது. எனில் உலகம் முழுவதும் நிகழும் எல்லைப் பிரச்சினைகள், அது தொடர்பான சண்டைகள் நிகழ்வதில் ஆச்சரியமில்லை. நிலத்தின் மீதான அதிகாரம். எதிர் வீட்டுக்காரனின் செருப்பு நம் வீட்டின் பக்கம் வந்தாலே எரிச்சல் ஆகும் ஆசாமிகள்தான் நாம்.
‘இநதக் காட்டுப் பயக்குள்ளயும் ஒரு பூ பூத்திருக்குது பாரேன்’ என்கிற மாதிரி ஜேசனுக்கும் சாந்தினிக்கும் இடையில் நட்புணர்வு சார்ந்த ஒரு நேசம் உருவாகியிருக்கிறது. முகேஷ்- ஷாதிகா மாதிரியே இவர்களும் அவ்வப்போது தனிமையில் ரகசியம் பேசுகிறார்கள். ஒட்டுமொத்த வீடே ஜேசனை வில்லனாக பார்க்கும் போது அவரிடமிருக்கும் ஹீரோவை பார்த்திருக்கிறார் சாந்தினி. ‘சுமாரான ஆட்டக்காரரான சாந்தினி, இன்னமும் எப்படி உள்ளே இருக்கிறார்?’ என்கிற கேள்வி தொடர்ந்து வரும் நேரத்தில், பலமான ஆட்டக்காரரான ஜேசனை சார்ந்திருப்பதின் மூலம் சாந்தினி தப்பிக்க நினைக்கிறாரா?
‘வாச’மில்லா மலரிது, வசந்தத்தை தேடுது – TTF வாசன்
இந்த வாரம் வைல்ட் கார்டாக வந்த கரிஷ்மா, ஆரம்பத்திலேயே ஷமாவிற்கு எதிராக ஒரு திரியை பற்ற வைத்து வீட்டை பரபரப்பாக்கினார். அது வெற்றிகரமாக பற்றிக் கொண்டு பலரும் ஷமா மீது பாய்ந்தார்கள். ஆனால் அதற்குப் பிறகு கரிஷ்மா என்ன செய்கிறார் என்பதே தெரியவில்லை. தனக்கு தரப்பட்ட ‘கேட் கீப்பர்’ வேலையையும் சரியாக செய்யாமல் சொதப்பினார்.
ஏறத்தாழ வாசனும் கரிஷ்மா மாதிரியேதான் இருக்கிறார். பைக்கில் வேகமாக உள்ளே வந்தவர், பிக்அப் ஆகாமல் ஸ்டார்டிங் டிரபுளில் தவிக்கிறார். ‘அவருக்கு புரிய வைக்கறதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆயிடுது’ என்று மற்றவர்கள் காரணம் சொல்லும் போது ‘தெய்வ திருமகள்’ விக்ரம் மாதிரியே மந்தமாக பார்க்கிறார். சில காரணங்களுக்கு உடனே கோபப்படுகிறார்.
ஆனால் ஆசாமி அப்படியொன்றும் முழு மந்தமில்லை. வீக்கெண்ட் எபிசோடில் வாசன் மீது முத்தழகி மைக் மாட்டாத பிரச்சினை குறித்து புகார் சொன்ன போது “எதையும் தப்பா புரிஞ்சுக்கிட்டு பழி போடாதீங்க. இப்படித்தான் ராகவ் நொண்டி நடந்த விஷயத்தையும் தப்பா பேசினீங்க’ என்று சரியான பாயிண்டை வைத்தார். ‘எதையும் அரைகுறையா தெரிஞ்சு பேச மாட்டேன்’ என்று வாசன் சொல்வது சரிதான். ஆனால் அவர் முழுவதும் புரிந்து கொள்வதற்குள் அவருடைய எவிக்ஷன் நடந்து விடும் போலிருக்கிறது. அவர் பைக் ஓட்டும் வேகத்திற்கு வெளியே ஆயிரம் ரசிகர்கள் இருக்கலாம். ஆனால் வீட்டிற்குள் நடைவண்டி கூட ஓட்டவில்லை.