Brigida Saga: "அவரது ப்ரொபோசல் எளிமையாக அவரைப் போலவே இருந்தது!" – காதல் குறித்து பிரிகிடா பேட்டி

Spread the love

கோலிவுட்டில் புதிய ஜோடிக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்திருக்கிறது. நடிகை பிரிகிடா சகாவும், இயக்குநர் அனந்தும் காதலிப்பதாகச் சமீபத்தில் அறிவித்திருந்தனர். இந்த அறிவிப்பு பிரிகிடாவின் ரசிகர்களுக்குச் சர்ப்ரைஸ்தான்!

Brigida Saga - Ananth
Brigida Saga – Ananth

பிறகு, இரு வீட்டார் முன்னிலையில் சமீபத்தில் இவர்களுக்கு நிச்சயதார்த்த நிகழ்வும் நடைபெற்றது. இந்தக் காதல் சாப்டர் பற்றிப் பிரிகிடாவிடம் வாழ்த்துச் சொல்லிப் பேசினோம்.

நம்மிடையே உற்சாகத்துடன் பேசத் தொடங்கியவர், “அனந்துக்கும் எனக்குமான காதல் மிகவும் இயல்பாகத்தான் தொடங்கியது. சினிமா மீதுள்ள காதல்தான் எங்கள் இருவருக்கும் இடையிலுள்ள பொதுவான விஷயம்.

அப்படித்தான் நாங்கள் முதன்முதலில் இணைந்தோம். ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்துகொள்ளத் தொடங்கியபோது, எங்களுடைய தொழிலைத் தாண்டி எங்கள் இருவருடைய கனவுகளும் ஒன்றாகவே இருப்பதை உணர்ந்தேன்.

ஒரு சாதாரண நட்பாகத் தொடங்கிய விஷயம், மெல்ல மெல்ல என் வாழ்க்கையின் ஆகச்சிறந்த அழகான உறவாக இப்போது மாறியிருக்கிறது.

Brigida Saga - Ananth
Brigida Saga – Ananth

என்னைப் பொறுத்தவரை காதல் என்பது நட்பு, மரியாதை, தினமும் ஒருவரையொருவர் விட்டுக் கொடுக்காமல் இருப்பதுதான். காதல் வெறும் சந்தோஷமான தருணங்களில் மட்டும் வருவதில்லை.

வாழ்க்கையின் ஒவ்வொரு சவாலான நேரத்திலும் ஒருவருக்கு ஒருவர் துணையாக நிற்பதும்தான் காதல். அது உங்களைப் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும், நீங்களாகவே இருக்கவும் அனுமதிக்க வேண்டும்” என்றார்.

மேலும் தொடர்ந்தவர், “சினிமாவைப் பற்றி நானும் அனந்தும் மணிக்கணக்கில் பேசுவோம். அதே நேரத்தில் எங்களுடைய வாழ்க்கை, குடும்பம், கனவுகள் என எல்லாவற்றைப் பற்றியும் நாங்கள் பேசினோம். எங்களுக்குள் பரஸ்பரம் அழகான புரிதலும் உள்ளது. முதலில் நல்ல நண்பர்களாக இருந்தோம்.

பிறகு அந்த உறவு இன்னும் அழகாக மாறியது” என்றவரிடம், “யார் முதலில் ப்ரோபோஸ் செய்தது?” எனக் கேட்டோம். அவர், “அனந்துதான் முதலில் ப்ரொபோஸ் செய்தார் (சிரித்துக்கொண்டே…). அந்த ப்ரொபோசல் மிகவும் எளிமையாக, மனதிற்கு நெருக்கமாக, அப்படியே அவரைப் போலவே இருந்தது!

எந்தவொரு ஆடம்பரமான ஆர்ப்பாட்டமும் இல்லாமல், முழுமையான அன்போடு எங்கள் காதல் தொடங்கிய தருணம் அதுதான். அவருக்கு ‘யெஸ்’ சொன்னதுதான் என் வாழ்க்கையிலேயே நான் எடுத்த மிகச் சுலபமான முடிவாக இருக்கும்.

Brigida Saga - Ananth
Brigida Saga – Ananth

அனந்துவிடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயமே அவர் அனைவருக்கும் கொடுக்கும் மரியாதைதான். குறிப்பாக, அவர் பெண்களுக்கும் குடும்பத்திற்கும் தரும் மரியாதையும், நேரமும்தான் எனக்கு அவரிடம் மிகவும் பிடித்த விஷயம். சினிமா மீது அவருக்குப் பெரிய ஆர்வம் இருக்கிறது.

ஆனால், அந்த லட்சியத்திற்காக அவர் என்றுமே உறவுகளை விட்டுக்கொடுத்ததோ, பின்னுக்குத் தள்ளியதோ இல்லை. எப்போதும் தன்னைச் சுற்றி இருப்பவர்களை நன்றாகக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பார்.

எல்லாக் குடும்பங்களைப் போலவே எங்களுடைய பெற்றோர்களுக்கும், எங்களுடைய காதலில் சில கேள்விகள் இருந்தன. எங்கள் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்பினார்கள்.

ஆனால், எங்கள் உறவு எவ்வளவு உண்மையானது, ஒருவர் குடும்பத்திற்கு இன்னொருவர் எவ்வளவு மரியாதை தருகிறோம் என்று அவர்கள் புரிந்துகொண்டபோது, முழு மனதோடு வாழ்த்தினார்கள். அவர்களுடைய அந்த ஆசீர்வாதம்தான் எங்களுக்கு எல்லாம்!” என உற்சாகத்துடன் பகிர்ந்தவரிடம், “மேரேஜ் எப்போங்க?” எனக் கேட்டோம்.

Brigida Saga - Ananth
Brigida Saga – Ananth

அதற்கு அவர், “எங்களின் அந்த அத்தியாயத்தை மிகச் சீக்கிரமே தொடங்கக் காத்துக்கொண்டிருக்கிறோம். இப்போது எங்கள் குடும்பங்களோடு சேர்ந்து இந்த அழகான தருணங்களை மகிழ்வோடு அனுபவித்து வருகிறோம். திருமணம் பற்றி முடிவு செய்ததும், கண்டிப்பாக அந்தச் சந்தோஷமான செய்தியை உங்கள் எல்லோரிடமும் பகிர்ந்துகொள்வோம்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *