இந்த எழுத்துக்கலைக்கு (கேலிகிராபி) நீங்கள் ஆற்றிய பங்குகள் என்னென்ன?
நான் இக்கலையை முழுமையாகக் கற்றுக்கொண்ட பிறகு, எனது வீட்டிற்கு அருகிலுள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும், அழகான கையெழுத்துடைய மாணவர்களைக் கண்டாலோ அவர்களுக்கு எனது முழுமையான வழிகாட்டுதலைக் கொடுத்து, இந்தக் கலையை கற்றுக்கொள்ளவும் பயிற்சிபெறவும் ஊக்கப்படுத்தி வருகிறேன். பொருளாதார நிலை கருதி இக்கலையைக் கைவிட்டு வேறு வேலை தேடி சென்றவர்கள் ஏராளம். நான் தனியார் வங்கிக்கு வேலைக்குச் சென்றிருந்தாலும் எனது ஓய்வு நேரங்களிலும், விடுமுறை நாள்களிலும் எனது கையெழுத்துக்கலையின் மூலம் பல படைப்புகளை எழுதி வருகிறேன்.
இந்த எழுத்துக்கலையை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச்செல்ல உங்கள் பங்களிப்பு?
இன்றைக்குப் பேனா பிடித்து எழுதுவதே அரிதாகிவிட்டது. தட்டச்சு செய்யும் வார்த்தைகள் விழிகளை மட்டுமே தொடும். ஆனால் கைகளால் எழுதும் கடிதம் இதயத்தைத் தொடும். டிஜிட்டல் உலகிற்குள் மறைந்துவரும் இந்த அரிய கையெழுத்துக்கலையை அழியாமல் மீட்டு, அதை அடுத்த தலைமுறைக்கு முறையாகக் கற்றுக்கொடுத்து, கொண்டு சேர்ப்பதே என் முதன்மையான நோக்கம்.
இக்கலையை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்ல அரசின் ஆதரவும், அதற்கான அங்கீகாரமும் இருந்தால் மேலை நாடுகள் போல நாமும் அரசுப்பணி வழங்கி அக்கலைஞர்களை அடையாளப்படுத்தலாம். அரசின் முக்கியச் சான்றிதழ்கள், தலைவர்களுக்குக் கடிதங்கள், வாழ்த்துமடல் என அனைத்திலும் கேலிகிராபியைப் பயன்படுத்தி எழுதலாம்.
உலக நாடுகள் இக்கலைக்குப் போட்டிகள் நடத்துவது போல், நம் தமிழ் நாடும் இக்கலைஞர்களை சரியாக இனம் கண்டுகொண்டு முறையான பயிற்சி வழங்கி போட்டிகள் நடத்தி அங்கீகரிக்க வேண்டும்” எனக் கூறினார்.