கோவை மாவட்டம், பூண்டி பகுதியில் தென்கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலை, மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளது. இந்த மலையேற ஆண்டுதோறும் பிப்ரவரி முதல் மே மாதம் வரை பக்தர்களுக்கு வனத்துறையினர் அனுமதி அளித்து வருகின்றனர். சமீப காலங்களாக வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் கோவை வழுக்குப்பாறை பகுதியை சேர்ந்த மயில்சாமி (32) என்பவர் நேற்றிரவு வெள்ளியங்கிரி மலையேறி உள்ளார். இதனிடையே இன்று காலை 5.30 மணியளவில் நான்காவது மலை செல்லும் வழியில் முழங்கால் திட்டு என்ற இடத்தில் மயில்சாமி சுயநினைவின்றி இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வனப்பணியாளர்கள் மற்றும் டோலி தூக்கும் சுமை பணியாளர்கள் அவரை மீட்டு டோலி மூலம் அடிவாரம் கொண்டு வந்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் மயில்சாமி உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அவரது உடல் உடற்கூறாய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.