Chennai Rain : 'வானிலை மையம் எச்சரித்தது; ஆனாலும் இவ்வளவு பெரிய மழையை எதிர்பார்க்கவில்லை!' – ஆணையர்

Spread the love

சென்னையில் அதிகனமழை பொழிந்திருக்கிறது. வடசென்னை, தாம்பரம், கிளாம்பாக்கம் போன்ற பகுதிகளை மழைவெள்ளம் சூழ்ந்திருக்கிறது. இந்நிலையில், சென்னை எழிலகத்தில் உள்ள மாநிலக் கட்டுப்பாட்டு அறையில் மாநகராட்சி ஆணையர் சமீரன் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார்.

சமீரன்
சமீரன்

ஆணையர் சமீரன் பேசியதாவது, ‘வழக்கமாக வடகிழக்கு பருவமழைக் காலத்தில் சராசரியாக 70 செ.மீ மழைதான் பெய்யும். ஆனால், நேற்று மாலை முதல் இரவு வரை மட்டும் 35.8 செ.மீ மழை பதிவாகியிருக்கிறது. அக்டோபர் 17 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை கனமழை இருக்குமென வானிலை மையம் எச்சரித்திருந்தது.

ஆனாலும் இவ்வளவு பெரிய மழையை எதிர்பார்க்கவில்லை. சூப்பர் எல் நினோவால் வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ளும் பகுதிகளில் அதிக பாதிப்பு இருக்கும் என்கிறார்கள். நேற்று திருவொற்றியூர், மணலி, பாரிஸ், என்.எஸ்.சி.போஸ் ரோடு போன்ற பகுதிகளில் அதிக மழை பெய்திருக்கிறது. முதல்வர் விஜய் ஒவ்வொரு மணி நேரமும் அப்டேட் கேட்டுக் கொண்டே இருக்கிறார். சமூகவலைதளங்களிலும் ஊடகங்களிலும் வரும் தகவல்களை அனுப்பிக் கொண்டிருக்கிறார்.

சமீரன்
சமீரன்

அமைச்சர்களும் களத்தில் இருக்கின்றனர். 15000 மாநகராட்சி ஊழியர்கள் உட்பட அதிகாரிகளும் தயாராக களத்தில் இருக்கிறோம். முதற்கட்டமாக வேளச்சேரிக்கு படகோடு தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரை அனுப்பி வைத்திருக்கிறோம். நீர் தேங்கியிருக்கும் சாலைகளில் இரவுக்குள் பணிகளை செய்து காலையில் மக்களுக்கு இடையூறு இல்லாமல் பார்த்துக் கொள்ளப்படும். பழைய கட்டடங்களில் இருக்கும் மக்கள் அரசின் தற்காலிக முகாம்களுக்கு சென்று தங்க வேண்டும். இளைஞர்களும் சிறுவர்களும் நீர் தேங்கியிருக்கும் பகுதிகளுக்கு வீடியோ எடுக்க செல்ல வேண்டாம்’ என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *