இழந்த புகழ் வெளிச்சத்தையும், செல்வத்தையும் மீண்டும் பெறுவதற்காக ஒருவன் செல்லும் எல்லையும், அதன் பிறகான பழிக்குப் பழி ஆட்டமுமே இந்த `க்ளேஃபேஸ்’. இயக்குநர் ஜேம்ஸ் கன் தலைமையில் புதிதாகக் கட்டமைக்கப்பட்டிருக்கும் டிசி யுனிவர்ஸின் மூன்றாவது படம் இது.
கோதம் நகரில் நடிகராக இருக்கும் மேட் ஹேகன் (டாம் ரைஸ் ஹாரிஸ்), புகழ்பெற்ற விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற, அதைக் கொண்டாட நண்பர்களுடன் பார்ட்டி ஒன்றுக்குச் செல்கிறார். அங்கு நிகழும் ஒரு தவற்றால், கோதம் தாதாவான மார்கோஸ் சாபோவின் (டேவிட் டென்சிக்) பகையைச் சம்பாதிக்க நேர்கிறது. அதனால் சிதைக்கப்பட்ட தன் முகத்தால், தன் கரியரையும் சொத்தையும் இழக்கிறார் மேட். பிரச்னையைச் சரி செய்ய, நானோ டெக்னாலஜியில் தோல் குறித்த ஆராய்ச்சி செய்துவரும் கேத்லினை (நவோமி ஆக்கி) அணுகுகிறார். விபரீத பரிசோதனை சிகிச்சையால் மேட் பிரச்னை சரியானதா, அதனால் வந்த பக்க விளைவுகள் என்னென்ன, அவரின் எதிரிகள் என்னவானார்கள் என்பதே படத்தின் கதை.
நாயகனாக டாம் ரைஸ் ஹாரிஸ், நடிகர் மேட் ஹேகனாக இருக்கும்போது வசீகரத்தையும், முகம் சிதைக்கப்பட்டு சக்திகள் பிறந்த பிறகு க்ளேஃபேஸாக கோபம், பழிவாங்கும் உணர்வு, அதனுடன் கொஞ்சம் காதல் என உணர்வுகளுக்கு மதிப்பளித்து நடித்திருக்கிறார். முக்கியமான பாத்திரத்தில், கிட்டத்தட்டப் படத்தின் நாயகியாக நவோமி ஆக்கி, மருத்துவர் வேடத்தில் கச்சிதமாகப் பொருந்துகிறார். டாமுக்கு தன் மேல் வரும் காதலை முதிர்ச்சியுடன் இவர் அணுகும் இடங்கள் நெகிழ்ச்சி! அவரின் காதலனாக, கோதம் நகரின் காவல் அதிகாரியாக வரும் மேக்ஸ் மிங்கல்லா, தன் பாத்திரம் புரிந்து அதற்கேற்ற நியாயத்தைச் செய்திருக்கிறார். நாயகனின் நண்பனாக, சக நடிகராக வரும் ஜோஸ்வா ஜேம்ஸ், பிரதான வில்லனாக வரும் டேவிட் டென்சிக், அவரின் காதலியாக வரும் ஜோனா ரிப்பேரியோ என அனைவருமே தேவையான பங்களிப்பைச் சரியாகச் செய்திருக்கிறார்கள்.
முகம் மாறும் வரைகலை காட்சிகள், பாடி ஹாரராகத் திகிலூட்டும் பல காட்சிகள், க்ளேஃபேஸ் கதாபாத்திரம் தன் திறனை வெளிக்காட்டும் மாஸ் காட்சிகள் என அனைத்தையும் சுவாரஸ்யமாகத் திரையில் வார்த்திருக்கிறது ராப் ஹார்டியின் ஒளிப்பதிவு. மெதுவாக நகரும் திரைக்கதை, முக்கியத் திருப்பத்துக்குப் பிறகு வேகம் எடுப்பதை மதித்து, அதை இன்னும் சுவாரஸ்யப்படுத்தியிருக்கிறது ஜான் ஹாரிஸின் படத்தொகுப்பு. குறிப்பாக விமானத்தில் நிகழும் அந்த பாடி ஹாரர் காட்சி, பாரில் நடக்கும் நீண்ட நெடிய சீக்குவென்ஸ் என அனைத்துமே தேவையான பதைபதைப்பைக் கடத்த, எடிட்டிங் முக்கியமானதொரு பங்கை ஆற்றியிருக்கிறது.
‘சூப்பர்மேன்’ வெற்றி வாகை சூடினாலும், ‘சூப்பர்கேர்ள்’ ஏமாற்றமளித்ததால், இந்தப் புதிய டிசி யுனிவர்ஸுக்கு கட்டாய வெற்றி தேவை என்ற நிலை. அதற்காக இயக்குநர் ஜேம்ஸ் வாட்கின்ஸ், பாடி ஹாரர் ஜானரில் பதைபதைக்க வைக்கும் ஒரு சூப்பர் வில்லன் கதையைக் கொண்டு வந்திருக்கிறார். புகழ்பெற்ற ஹாரர் இயக்குநர் மைக் ஃப்ளேனகனின் எழுத்து இதற்குப் பக்கபலமாக நின்றிருக்கிறது. நாயகனுக்கு வரும் பிரச்னை, அதிலிருந்து மீள அவர் எடுக்கும் ரிஸ்க், அதனால் கிடைக்கும் சூப்பர் பவர், அதை வைத்து வில்லன்களின் கூடாரத்தை காலி செய்யும் ஹீரோ, இடையில் கொஞ்சம் காதல் எபிசோடு என பார்முலா படமாகத் தெரிந்தாலும் திரைக்கதையின் பலத்தால் நல்லதொரு திரை அனுபவமாக மாறியிருக்கிறது இந்தப் படம்.
குறிப்பாக, 108 நிமிடங்களே ஓடும் படத்தில் தொடக்கக் காட்சிகள் மற்றும் சில காதல் காட்சிகள் தவிர்த்து, பிற இடங்களில் எல்லாம் பதைபதைப்பைத் தவறாமல் பிடித்து வைத்துக்கொள்கிறது படம். தோலை வைத்து வரும் ஹாரர் காட்சிகள் சிலரை முகம் சுளிக்க வைக்கலாம். ஆனால் இது முழுக்கவே வயது வந்தோருக்கான சினிமா என்பதால் அந்த ஜானரில் கிடைக்கும் அனைத்து துருப்புச் சீட்டையும் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.
க்ளைமாக்ஸ் காட்சிக்கு முந்தைய காட்சியே அருமையான முடிவுரையாக இருக்க, அதைத் தவிர்த்து வாலன்டியராக வில்லன் உருவாக்கத்தைக் காட்டியே ஆகவேண்டும் என்ற முடிவில் வைக்கப்பட்ட கடைசி காட்சி துருத்தலே! ‘க்ளேஃபேஸ்’-இன் சக்தி, நினைத்த உருவம் பெறும் திறன் போன்றவற்றை அறிவியல்பூர்வமாக இன்னுமே விளக்கியிருக்கலாம். அதுவரை நாயகனுக்கு இருக்கும் பிரச்னைகள் குறித்து மருத்துவ ரீதியான விவரணைகள் நீளமாக இடம்பெற, அவர் சக்தி செயலாற்றும் விதம் மட்டும் கண்டுகொள்ளாமல் விடப்படுவது அந்த யுனிவர்ஸுக்குள்ளேயே லாஜிக் இல்லாத உணர்வைத் தந்துவிடுகிறது. கோதம் நகர ரெஃபரன்ஸ் இருந்தும் பேட்மேன் குறித்துப் பேசாதது இந்தக் கதை மேல் நம்பிக்கை வைத்து எடுக்கப்பட்டிருக்கும் துணிச்சலான முடிவு!
சூப்பர்வில்லன்/ஹீரோ கதை என்றதும் பிரமாண்ட சண்டைக்காட்சிகளை நம்பாமல் பாடி ஹாரரில் வலிமையான திரைக்கதையுடன் வந்திருக்கும் ‘க்ளேஃபேஸ்’ நிச்சயம் நம்மை வசீகரிக்கிறான்.