நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று (மே.6) நடைபெற்ற சென்னை vs டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டியில் டெல்லி அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 10 புள்ளிகளுடன் தொடர்ந்து பிளே ஆஃப் ரேசில் நீடிக்கிறது சென்னை அணி.
இப்போட்டியில் 87 ரன்கள் எடுத்து போட்டியின் வெற்றிக்குக் காரணமாய் அமைந்த சஞ்சு சாம்சன் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த வெற்றிக்குப் பின்னர் பேசிய அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், “ஆரம்பத்தில் சில தோல்விகள் ஏற்பட்டாலும், நானும் பயிற்சியாளர் பிளெமிங்கும் பாஸிட்டிவாக இருந்தோம். கடந்த ஆண்டை விட இந்த முறை அணி பலமாக இருப்பதாகவே உணர்ந்தோம்.

சஞ்சு சாம்சனின் வருகை மற்றும் மிடில்-ஆர்டர் வரிசை எங்களை இன்னும் வலுப்படுத்தியது. டி20 கிரிக்கெட்டில் வெற்றிப் பாதையைத் தொடர ஒரு தருணம் தேவை, மூன்றாவது போட்டிக்குப் பிறகு கிடைத்த வெற்றிக்குப் பின் அது எங்களுக்குக் கிடைத்தது.
சஞ்சு சாம்சன் உலகக்கோப்பையில் காட்டிய அதே சிறப்பான ஆட்டத்தை இங்கேயும் தொடர்கிறார். அவர்தான் இப்போது அணியின் முதுகெலும்பு. பேட்டிங் ஒரு பக்கம் இருந்தாலும், பந்துவீச்சாளர்களே தொடர்களை வென்று தருவார்கள்.
மற்றவர்கள் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த போதிலும், அகீல் மற்றும் ஜேமி போன்றோர் ரன் வேகத்தைக் கட்டுப்படுத்திச் சிறப்பாகச் செயல்படுகிறார்கள். இது எனக்குப் பெரிய நம்பிக்கையை அளிக்கிறது.
அன்ஷுல் கம்போஜ் இன்று ரன்களை விட்டுக் கொடுத்தாலும், அவர் ஒரு புத்திசாலித்தனமான பந்துவீச்சாளர். அவர் விரைவில் மீண்டு வருவார்.

கார்த்திக் சர்மாவிடம் ஏற்கெனவே திறமை இருந்தது. ஆரம்பத்தில் பெரிய இலக்குகளைத் துரத்தியதால் அவருக்குப் போதிய நேரம் கிடைக்கவில்லை. கடந்த போட்டியில் சில பந்துகளை எதிர்கொண்ட பிறகு அவர் ஆட்டத்திற்குள் வந்துவிட்டார்.
அவர் வெறும் அதிரடி ஆட்டக்காரர் மட்டுமல்ல, மைதானத்தின் நாலாபுறமும் பந்துகளை அடித்து நிதானமாக விளையாடத் தெரிந்தவர். இந்த வெற்றி அவருக்குத் தேவையான தன்னம்பிக்கையைத் தந்துள்ளதில் மகிழ்ச்சி” என்று பேசியிருக்கிறார்.