Diwali Malar – 31 October 2026 – இங்கு நேத்ர விளக்கு ஏற்றினால் நம் வாழ்க்கை ஒளிரும்! – சுக்ர பகவான் கொடுத்த வாக்குறுதி

Spread the love

“பெருமாளே! உங்கள் வரத்தின்படி நான் உலகுக்கு விடிவெள்ளியாக விளங்கினாலும், இந்தக் கோயிலில் ஒரு சரவிளக்காகத் தொங்குவேன். இங்கு வந்து உங்களைத் தொழும் அத்தனை பேரின் வாழ்விலும் ஒளி வழங்கும் திருவிளக்காக அது அமையும். பார்வை தொடர்பான குறைகள் நீங்கவும் சக்தி தரும். உங்களை வணங்கி, அந்த விளக்கை ஏற்றி வழிபடுவோருக்கு சுக்ர பலம் நல்கி, அவர்களது வாழ்வில் ஒளி ஏற்றுவேன். உங்கள் பக்தர்களின் நலனுக்காக விளக்கின் அம்சமாய் இங்கு தவமியற்றியபடியே இருப்பேன்’’ என்று கரம்கூப்பி வணங்கினார் சுக்ர பகவான்.

அதன்படியே பெருமாள் இங்கே சயன ராமராக அர்ச்சாவதாரம் கொள்ள, சுக்ரன் விளக்காக மாறிச் சுடரொளி சிந்தினார். பெருமாளுடன் வந்த கருடன், இறைவனின் சங்கு-சக்கரத்தைத் தாங்கி எதிரே அமர்ந்து கொண்டார். திருமாலைத் தேடி வந்த திருமகள், மரகதவல்லியாக எழுந்தருளினார். அந்த இடத்தில் அசுர சிற்பியான மயன் புஷ்கலா வர்த்தக விமானம் கொண்ட அழகிய ஆலயத்தை எழுப்பினார் என்கிறது தல வரலாறு.

தேவ சிற்பியான விஸ்வகர்மா பரம்பொருளின் பல ஆலயங்களை அழகாகக் கட்டி முடித்தார். அதேபோல், தன்னால் கோயில்கள் கட்ட முடியவில்லையே என அசுர சிற்பியான மயன் வருந்தினார். அதன் பொருட்டு பிரம்மனைச் சந்தித்து வேண்டினார். நான்முகனின் வழிகாட்டுதல்படி, திருவெள்ளியங்குடிக்கு வந்து தவம் செய்தார்.

அவருக்குப் பெருமாள் சங்கு-சக்ரதாரியாக தரிசனம் கொடுத்தார். “ராமாவதாரக் கோலத்தில் காட்சியருள வேண்டும்’’ என மயன் வேண்டிக்கொள்ள, தன் கரத்திலிருந்த சங்கு-சக்கரத்தை கருடாழ்வாரிடம் கொடுத்துவிட்டு, கோலவில்லி ராமனாக வில், அம்புகளுடன் தரிசனம் தந்தாராம் பகவான். தொடர்ந்து, மயன் இங்கே ஆலயத்தை நிர்மாணித்தார் என்கிறது புராணம்.

வியாசரின் தந்தை பராசரர், விஷ்ணு புராணத்தின் மூல ஆசிரியர். பராசரருக்கு ஆறு பிள்ளைகள். மிகவும் குறும்புக்காரர்கள். ஒருமுறை அவர்கள் செய்த குறும்பு பொறுக்காமல், அவர்களை மீன்களாகும்படி சபித்துவிட்டார் பராசரர்.

பின்னர் ஆத்திரம் தணிந்த நிலையில், அன்னை பராசக்தியை வேண்டினார்; `பிள்ளைகளுக்கு விமோசனம் வேண்டும்’ என்று பிரார்த்தனை செய்தார். திருவெள்ளியங்குடிக்குச் சென்று வழிபடும்படி வழிகாட்டினாள் ஆதிசக்தி. அதன்படி இங்கு வந்த பராசர முனிவர், பெருமாளின் அருள் பெற்று பிள்ளைகளை மீண்டும் சுயரூபம் அடையச் செய்தார் என்றும் கூறப்படுகிறது.

இதனால், இந்தத் தலத்துக்குச் சென்று வழிபட்டால், பெருமாளிடம் வேண்டிக் கொண்டால், அறியாமல் செய்த பாவங்கள் விலகும்; வினைகள் நீங்கி விமோசனம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

சைவ சமயத்தில் சுக்ரனுக்குரிய தலமாக கஞ்சனூர் விளங்குவதைப்போல, வைணவத்தில் திருவெள்ளியங்குடி சுக்ரனுக்கு உரிய திருத்தலமாகப் போற்றப்படுகிறது. அதேபோல் திருவெள்ளியங்குடியை தரிசித்தால், 108 திவ்ய தேசங்களையும் வணங்கிய புண்ணியம் கிடைக்கும் என்றும் நம்பிக்கை உண்டு.

காஞ்சி மகாபெரியவர் இந்தத் தலத்தின் மீது மிகுந்த ஈடுபாடுகொண்டு, இங்கு வந்து தங்கித் திருப்பணிகளையும் சிறப்பு வழிபாடுகளையும் செய்திருக்கிறாராம். அது 1974-ம் ஆண்டு. காஞ்சி மகாபெரியவருக்கு ஒரு கண்ணில் பார்வை பழுதுபட்டது. அந்தச் சிரமத்துடனேயே தனது கடமைகளைத் தொடர்ந்துவந்தார்.

`அந்தக் கண்ணில் அறுவை சிகிச்சை செய்துகொண்டால் பார்வை வரும்’ என்று அவருக்குச் சொல்லப்பட்டது. ஆனால் அந்த மகான் மறுத்துவிட்டார். அப்படியான நிலையில், மகாபெரியவரின் பக்தர்கள் பலரும் இந்த திருவெள்ளியங்குடி ராமரிடம் வேண்டிக்கொண்டார்களாம். சிலர் நேத்ர விளக்கு ஏற்றி வழிபாடும் செய்தார்களாம். பின்னர் வந்த நாள்களில், மகாபெரியவர் அறுவை சிகிச்சையை ஏற்றுக்கொண்டு பார்வை பெற்றார் என்கிறார்கள் பக்தர்கள்.

சுக்ர யோகங்கள் பெற விரும்புவோர், சுக்ரனை லக்னாதிபதியாகக்கொண்ட ரிஷபம் மற்றும் துலாம் லக்ன அன்பர்கள், ஜாதகத்தில் சுக்ர குறைபாடுகள் உள்ளவர்கள் இந்தத் தலத்துக்குச் சென்று நேத்ர விளக்கு ஏற்றச் செய்து, பெருமாளை வழிபட்டு வரம் பெறலாம்.

நேரில் செல்ல இயலாதவர்கள், கோயிலைத் தொடர்புகொண்டு உங்களுக்காக விளக்கேற்றச் சொல்லி வேண்டிக்கொள்ளலாம். அதனால் உங்கள் நலமும் வளமும் மேம்படும் என்பது நிச்சயம்.

அகவொளியும் புறவொளியும் பல்கிப் பெருகும் தீபாவளிப் பண்டிகையை ஒட்டி, திருவெள்ளியங்குடிக்குச் சென்று கோலவில்லி ராமரையும், நேத்ர விளக்கையும் தரிசித்து நம் வாழ்வில் பூரண ஒளி பெறுவோம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *