கோவை கணபதிமாநகர் பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் சண்முக பாண்டியன். இவரது மகள் கௌசல்யாவை பெரிய நாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவருக்கு 2024ம் ஆண்டு இரண்டாவது திருமணம் செய்து வைத்துள்ளார். சண்முக பாண்டியன் விக்னேஷுக்கு கவுண்டம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அரசு பணி வாங்கி கொடுத்துள்ளார். ஆனால் விக்னேஷ் அந்த பணியை ராஜினாமா செய்து விட்டு வேறு எந்த பணிக்கும் செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
அதே சமயம் விக்னேஷின் விக்னேஷின் தந்தை முருகேசன், தாயார் வாசுகி, சகோதரி ஜீவிதா ஆகியோர் மூவரும் காளப்பட்டி பகுதியில் உள்ள சண்முகபாண்டியனுக்கு சொந்தமான பங்களாவிற்கு குடிப்பெயர்ந்து வசித்து வந்துள்ளனர். சண்முகபாண்டியன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதால் பல்வேறு ஊர்களுக்கு செல்ல வேண்டி இருந்துள்ளது. இதனால் சண்முகபாண்டியன் விக்னேஷிடம் லாக்கர் மற்றும் பீரோ சாவியை கொடுத்து நகைகளை பார்த்து கொள்ளும்படி கூறியுள்ளார். அதில் சுமார் 1000 பவுன் நகை இருந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே விக்னேஷ் மற்றும் கெளசல்யாவிற்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், விக்னேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் அந்த பங்களாவில் இருந்து வேறு இல்லத்திற்கு குடிப்பெயர்ந்து சென்றுள்ளனர். அதனை தொடர்ந்து சண்முகபாண்டியன் லாக்கர் மற்றும் பீரோ சாவியை விக்னேஷிடம் கேட்டபோது, அதனை தருவதற்கு மறுத்து விட்டதாக தெரிகிறது. இதையடுத்து லாக்கரை உடைத்து பார்த்த போது அதில் இருந்த நகைகள் காணாமல் போயிருந்தது தெரியவந்தது. இந்த நகைகளை கேட்டபோது 100 பவுன் நகைகளை மட்டுமே கொடுத்த நிலையில், 900 பவுன் நகைகளை திருப்பி கொடுக்காமல் கொலை மிரட்டல் விடுத்ததாக சண்முகபாண்டியன் கோவை மாநகர குற்றப்பிரிவு போலிசில் புகார் அளித்தார். இதன்பேரில் விக்னேஷை போலீசார் கைது செய்தனர். மேலும் விக்னேஷின் தாயார் வாசுகி, சகோதரி ஜீவிதா ஆகியோரை தேடி வருகின்றனர்.